விளையாட்டை மூலமாகக் கொண்ட ஒரு மோட்டிவேஷன் கதைக்கு உலகமெங்கும் ஒரே ‘டெம்ப்ளேட்’ தான். ஒரு இலக்கை அடைய குறிவைத்து அது தன் வாழ்வில் நடக்காமல் போகும் ஒருவர் அந்த இலக்குக்கு இன்னொரு திறமையாளரைத் தயார் செய்து அதை அடைய வைக்கும் ‘டெம்ப்ளேட்’ தான் அது.
அந்த லைனை இந்தப்படத்திலும் பயன்படுத்தி ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா. அதற்கு அவர் இந்தப் படத்தில் தேர்ந்தெடுத்திருப்பது ‘தட களம்’.
தடகளத்தில் ஓட்டப்பந்தய வீரராக தேசிய அளவில் சாம்பியன் ஆகி விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் சிறுவயதிலிருந்தே
வளர்க்க ப்படுகிறார் நாயகன் ஆதி. அவர் அந்த குறிக்கோளை அடைய வேண்டும் என்பதற்காகவே அவரது தந்தையாக வரும் பிரகாஷ்ராஜ் மனைவியை இழந்த நிலையிலும் இன்னொரு திருமணத்தையும் மறுத்து மகனுடைய லட்சியத்துக்காக மட்டுமே வாழ்ந்து வருகிறார்.
ஆதி வாலிப பருவம் அடைந்துவிட, ஒரு விபத்தில் இருவரும் சிக்கி பிரகாஷ்ராஜ் இறந்துபோக ஆதிக்கு ஒருகாலும் போகிறது. ‘ஒரு காலை’ இழந்த நிலையில் இனி ‘ஒருக்காலும்’ தன் லட்சியத்தை அடைய முடியாது என்று அறையில் முடங்கிப் போகும் அவருக்கு உறுதுணையாக வந்து அவரை மணமுடித்துக்கொண்டு உதவுகிறார் அவரது காதலியான அகன்ஷா சிங்.
ஆதியின் தகுதி திறமைகளை வைத்து விளையாட்டு துறையிலேயே ஒரு பணியும் கிடைக்க, ஒரு கட்டத்தில் தேசிய சாதனை புரியக் கூடிய அளவில் திறமைமிக்க ஒரு பெண் இருப்பதை அறிகிறார். தந்தையை இழந்து தடகளம் பக்கம் வர முடியாத ஏழ்மை நிலையில் இருக்கும் அவரைக் கூட்டிவந்து தான் அடைய முடியாத லட்சியத்தை அவரை அடைய வைக்க ஆதி படும் பாடுகள்தான் கதை.
இந்தப் பாத்திரத்தில் நடித்ததற்காக ஆதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஏனென்றால் அந்த ஓங்குதாங்காக உயரத்துடன் அற்புதமான உடற்கட்டைக் கொண்டிருக்கும் அவர் கிட்டத்தட்ட முழு படத்திலும் ஒரு காலை இழந்தவராக வந்திருப்பது ஆச்சரியத்தக்க அர்ப்பணிப்பு.
அகாலமாக ஒரு காலை இழந்த நிலையில் அதை அவரது மூளை ஏற்றுக் கொள்ளாமல் அவ்வப்போது தாங்க முடியாத வலி வர, அவர் அலறும் அலறலை வெறும் நடிப்பு என்று சொல்லிவிட முடியாது. அந்தப் பாத்திரத்துக்குள் வாழ்ந்தால் மட்டுமே அப்படி ஒரு நடிப்பைத் திரையில் காட்ட முடியும்.
அந்த நடிப்பின் நேர்த்தி அவர் முகத்தை மட்டும் காட்டும் காட்சிகளில் கூட அவருக்கு ஒரு கால் இல்லை என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. தன்னால் அடைய முடியாத லட்சியத்தை தான் கண்டுபிடித்த பெண்ணை வைத்து அடைய நினைக்கும் வழியில் ஒவ்வொரு குறுக்கீடுகளாக வர, அதை அடையவே முடியாது என்று அவர் படும் அவஸ்தைகளை நாம் அணு அணுவாக உணரமுடிகிறது.
இந்தப் படத்தில் நடித்ததற்காக ஆதிக்கு பல விருதுகள் கிடைக்கும் – கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைக்காமல் போனால் அது விருதுக் கமிட்டியின் தவறே அன்றி அவருடைய நடிப்பினால் அல்ல.
ஒரு கால் இல்லாத அவருக்கு ஊன்றுகோலாக வரும் அகன்ஷா சிங்கின் அழகும், நடிப்பும் கூட அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. ஒற்றைக் காலை இழந்த நிலையில் தன்னை மணக்க ஆதி மறுத்தும் பிடிவாதமாக பெற்றோரை எதிர்த்து ஆதியை திருமணம் செய்து கொண்டு வந்து அகன்ஷா படும் அவஸ்தையும் ஆதியின் நடிப்புக்குச் சற்றும் குறைவானது அல்ல.
ஆதியின் மோட்டிவேஷனுக்கு உள்ளாகும் பெண்ணாக க்ரிஷா குரூப். அந்த அப்பாவித்தனமான முகமும் அற்புதமான ஓட்டமும் இது படம் அல்ல உண்மை என்று நம்மை நம்ப வைக்கிறது. ஏழைகளுக்கு உரித்தான தன்னம்பிக்கை குறைவும் அவரிடம் அவ்வப்போது வெளிப்படுவது அத்தனை எதார்த்தமாக இருக்கிறது.
படத்தில் சிறிது நேரமே வந்தாலும் பிரகாஷ்ராஜ் மனதில் பதிகிறார். அதேபோல் ஆதிக்கு வில்லனாகும் நாசரும் அவரது பாத்திரத்துக்கு நியாயம் செய்தது நம்மை மிகவும் கோபம் கொள்ள வைக்கிறார். ஆதிக்க சாதியில் பிறந்தது மட்டுமில்லாமல் ஆதிக்க மனோபாவத்துடனேயே வாழ்ந்து வரும் நாசரும் அந்த வில்லத்தனமும் அபாரம்.
படத்தில் ஆதியின் முயற்சிகளுக்குக் கை கொடுக்கும் நண்பனாக வரும் ராம்தாஸும் நிறைவாகச் செய்திருக்கிறார்,
இதுதான் நடக்கும் என்று தெரிந்தாலும் அந்த இறுதிப் போட்டி நடைபெறும் வேளையில் நமது நெஞ்சு ‘திக் திக்’கென்று அடித்துக் கொள்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த வகையில் வெற்றிக் கோட்டைத் தொட்டு விடுகிறார் இயக்குனர் பிரித்வி.
இந்தப் படத்துக்கு இளையராஜாவை இசையமைக்க அணுகி இருப்பதே படம் நேர்த்தியாக வரவேண்டும் என்பதற்காகத்தான். க்ரிஷா தன் லட்சியத்தை அடையும் நேரத்தில் அந்த உணர்வை இசைஞானியும் உடன் ஓடி நியாயப்படுத்தி இருக்கிறார். பாடல்களில் மட்டும் இன்னும் இசையைத் தோண்டி எடுத்திருக்கலாம் ராஜா.
இப்படி ஓடும் கதைகளில் ஒளிப்பதிவாளரும் உடன் ஓட வேண்டிய அவசியத்தில் அதை அற்புதமாக செய்து காட்டியிருக்கிறார் பிரவீண் குமார்.
ஆதி ஒற்றை காலுடன் வருவதை சர்வ சாதாரணமாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று சொல்லிவிட முடியும். ஆனால் அத்தனை பொருத்தமாக செய்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பாராட்டுகள் போய்ச்சேர வேண்டும்.
அகன்ஷா சிங்கிடம் அந்நியமாகவே ஆதி இருந்து வருவது மட்டும் படத்தின் பெரும் குறையாகப் படுகிறது. கடைசியில் அவர்கள் ஒன்று சேரும்போது அந்த கனம் உணரப்பட வேண்டும் என்பதற்காகவே இயக்குனர் அப்படி யோசித்திருக்கலாம்.
கிளாப் – கைத்தட்ட வேண்டிய முயற்சி..!
Related