ஒரு படத்தின் டிரைலரைப் பார்த்து இயக்குநரை மணிரத்னம் வாழ்த்தினார் என்றால் அது எப்பேர்ப்பட்ட வாழ்த்து. அந்த வாழ்த்துக்கு இலக்காக அமைந்தது மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பூமராங்’.
‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை தகட்டினை கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி தியாகராஜன் வெளியிட, சுஹாசினி மணிரத்னம் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்கள் வாழ்த்தியதிலிருந்து…
கலைப்புலி எஸ் தாணு –
“கண்ணன் மணிரத்னம் என்ற பள்ளியில் இருந்து வந்தவர், நன்கு கலையை கற்றவர். அவரே சொந்தமாக தயாரித்து இவ்வளவு பிரமாண்டமாக ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அவரை வைத்து கூடிய விரைவில் ஒரு படம் தயாரிப்பேன்..!”
சத்யஜோதி தியாகராஜன் –
“நான் அறிமுகப்படுத்திய இரண்டு பேர் இந்த படத்தில் இருக்கிறார்கள். ஒருவர் அதர்வா. அவர் ஒவ்வொரு படத்திலும் தன் திறமைகளை மெருகேற்றிக் கொண்டே வருகிறார். அடுத்தவர் இயக்குனர் கண்ணன். தன்னம்பிக்கையோடு என்னிடம் வந்து ஒரு கதை சொல்லி, நான் அந்த படத்தை தயாரிக்க வேண்டும் என விரும்பினார். என் பேனரில் அவர் அறிமுகமானது மகிழ்ச்சி..!” அவர் தயாரிப்பாளர்களின் இயக்குனர்..!”
சுஹாசினி மணிரத்னம் –
“எங்கள் மெட்ராஸ் டாக்கீஸின் செல்லப்பிள்ளை கண்ணன். எங்கள் கம்பெனியில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கு தான் அதிகம் இருக்கும். அவருக்கு நகைச்சுவை உணர்வும் ரொம்ப அதிகம். ‘பூமராங்’ படத்தின் ட்ரைலரைப் பார்த்த பிறகு கூட, மணிரத்னத்துக்கு இது என்ன மாதிரி படம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவே படத்தின் முதல் வெற்றி..!”
இயக்குனர் கண்ணன் –
“2008ல் ஜெயங்கொண்டான் ரிலீஸ் ஆகியது, 2018ல் இன்று பூமராங். பத்து வருடங்களில் மொத்தம் 7 படங்கள் இயக்கியிருக்கிறேன். என் குரு மணிரத்னம் அவர்களை அறிமுகப்படுத்திய சத்யஜோதி தியாகராஜன், எனக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்தது பெருமையான விஷயம்.
‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு பிறகு விவசாயத்தை பற்றிய ஒரு படம் ‘பூமராங்’. அந்தப் படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 130 கோடி மக்கள் பயனாளிகளாக இருந்தும் நஷ்டத்தில் போகிற ஒரு துறை விவசாய துறைதான். அது ஏன் என்பதைப் பற்றிதான் படம் பேசுகிறது.
நட்புக்கு மரியாதை கொடுக்கும் மனிதர் சமுத்திரகனி. அவருடன் என் நட்பு வாழ்நாள் முழுக்க தொடர ஆசை.
வழக்கமான பாம்பே நாயகியாக இல்லாமல் சென்னை அண்ணா நகர் பெண்ணை நாயகியாக நடிக்க வைத்திருக்கிறோம். இசையமைப்பாளர் ரதன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். ‘பூமராங்’ கமர்ஷியல் படமாகவும், நல்ல கருத்தைச் சொல்லும் படமாகவும் இருக்கும்..!”