60 வருடங்களுக்கு ஒரு முறை நிலவு பூமிக்கு அருகில் வருவதால் நிகழும் ‘சூப்பர் மூன்’ என்கிற இயற்கை அதிசயத்தையும், நவீன அறிவியலின் இயற்பியல் தத்துவங்களையும் வைத்து ஒரு சிக்கலான கதையை எழுதி, அதை சுலபமாகப் புரியவும், சுவாரசியமாகத் தரவும் முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் கே.ஜி.பாலசுப்ரமணி.
1964 ஆம் வருடம் ஒரு சூப்பர் மூன் நிகழ்வு நடக்க, அப்போது விவேக் பிரசன்னாவைச சுற்றி ஒரு சம்பவம் நடைபெறுகிறது. இப்போது இந்த 2024 ஆம் வருடம் அதேபோன்ற ஒரு சூப்பர் மூன் நிகழ்வு நடக்க, இப்போதைய கதை நாயகன் ஜீவா, நாயகி ப்ரியா பவானி சங்கரைச் சுற்றி நடக்கிறது.
இருவரும் விடுமுறையை கழிக்க தாங்கள் புதிதாக வாங்கி இருக்கும் கடற்கரை வில்லாவுக்கு வருகின்றனர். ஒரே மாதிரியான ‘ரோ ஹவுஸ்’ திட்டத்தில் அப்படி நிறைய வில்லாக்கள் இருக்க இவர்கள் மட்டுமே முதல் முதலில் அங்கே குடியேறுகிறார்கள்.
தனிமையில் தங்கி இருக்கும் அவர்களுக்கு என்ன விதமான வினோத அனுபவங்கள் ஏற்படுகின்றன; அதிலிருந்து அவர்கள் வெளியே வர முடிந்ததா என்பதுதான் கதை.
ஜீவா இதுவரை படங்களில் ஏற்காத பாத்திரத்தை இதில் ஏற்றிருக்கிறார். கோபக்கார இளைஞனாக வரும் அவர் பழி தீர்ப்பதில் கில்லாடியாக இருக்க, தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களில் நிலை குலைந்து போவதில் பயத்தையும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஏற்கனவே டிமான்டி காலனி படத்தில் இதைவிட பயத்தை வெளிப்படுத்தி இருப்பதால் பிரியா பவானி சங்கர் அதைவிடவும் பெரிதாக நடிக்கத் தேவையில்லாமல் இருக்கிறது. பயப்பட வேண்டிய பாத்திரம் என்றாலே, “கூப்பிடு பிரியாவை…” என்று ஆகிவிட்டது.
இவர்களுடன் விவேக் பிரசன்னா, யோகி ஜேபி, ஷா ரா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி ஆகியோரும் தங்கள் பாத்திரங்களை நியாயமாக நிறைவு செய்து இருக்கிறார்கள்.
ஏற்கனவே அதிரடி இசைக்கு சொந்தக்காரர் சாம் சிஎஸ். அதிலும் இந்தப் படத்தில் வினோதமான ஒலி ஒன்று வரவேண்டும் என்பதற்காக ஒரு ஐட்டத்தைப் பிடித்திருக்கிறார் – அது ரசிக்கும்படி இருப்பதைப் பாராட்டியாக வேண்டும்.
சூப்பர் மூன் அழகை மட்டுமல்லாமல் இருட்டின் ஆபத்தையும் தனது ஒளிப்பதிவின் மூலமே உணர்த்தி இருக்கும் கோகுல் பினோய் பாராட்டுக்குரியவர். இந்தப் படத்தில் திரைக்கதை ஆசிரியருக்கு நிகராக, ஒளிப்பதிவாளரின் பணியும் மிகவும் சவாலுக்கு உரியது.
குவாண்டம் பிசிக்ஸ் என்பதின் அடிப்படை தெரிந்தவர்கள் இந்த படத்தை முழுமையாக ரசிக்க முடியும். பிளாக் ஹோல், வார்ம் ஹோல் பற்றிப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் இந்தப் படம் புரிவதற்கும் சற்றே கடினமாகத்தான் இருக்கும்.
ஒரு ஆவி வந்து அத்தனை வேலையையும் செய்தது என்று சொன்னால் நம்பும் நாம் இப்படி நவீன இயற்கையின் தத்துவங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுவும் கூட வினோதமான விஷயம்தான்.
இருப்பினும், விவேக் பிரசன்னா சொல்லும் அறிவியல் விஷயங்களை இன்னும் கூட எளிமையாகப் புரிய வைக்க இயக்குனர் முயற்சி எடுத்து இருக்கலாம்.
ஆனாலும் ஆங்கிலப் படங்களுக்கு ஈடாக இந்தப் படத்தில் அமைந்த இயக்குனரின் முயற்சியைப் பாராட்டியாக வேண்டும்.
பிளாக் – இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு..!
– வேணுஜி