June 14, 2026
  • June 14, 2026
Breaking News
March 4, 2026

அனோமி திரைப்பட விமர்சனம்

By 0 158 Views

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் சீரியல் கில்லர் வகை திரைப்படம். ஆனால் மற்ற சீரியல் கில்லர் கதைகளிலிருந்து இந்தப் படத்தில் கதைக்களம் முற்றிலும் மாறுபட்டது. 

படத்தின் கதை இதுதான். 

கதை நாயகி பாவனாவின் தம்பி அவர்களது பெற்றோர் விபத்தில் இறந்ததிலிருந்து சற்றே மனநிலை பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவராய் இருக்கிறார். இருந்தும் அவரது மனநல பாதிப்பு அவ்வப்போது ஏற்படுவதால் தொடர் சிகிச்சையில் இருக்க… ஒரு நாள் அவர் காணாமல் போகிறார். 

தடயவியல் துறையில் பணியாற்றும் பாவனா தம்பியை காணாததில் பரபரப்பு அடைகிறார். ஆனால் காணாமல் போன தம்பியை பல மணி நேரங்கள் கழித்து பிணமாகத்தான் மீட்க முடிகிறது. அதற்குக் காரணம் தற்கொலை என்று முடிக்கிறது போலீஸ். 

இதே போன்ற இன்னொரு வழக்கிலும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு முடிக்கப்பட்டிருக்க, இந்த மரணங்கள் கொலையாக இருக்கலாம் என்கிற கோணத்தில் தன்னளவில் சில தடயங்களை சேகரித்து அதனை நீதிபதியிடம் ஒப்படைக்கிறார். 

இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளிலும் ஆஜராகி அவற்றை தற்கொலை என்று மூடிவிட்ட காவல் அதிகாரி ரகுமான் நீதிபதியின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகிறார். மூன்றாவது ஒரு மரணமும் அதேபோன்று நடக்க… சுறுசுறுப்படையும் போலீஸ் ரகுமானுக்கு ஒரு வார காலம் இதன் உண்மை தன்மையை கண்டறிய அவகாசம் அளிக்கிறது. 

அந்த ஒரு வாரத்தில் ரகுமான் இந்த வழக்கை துப்பறிந்து குற்றவாளியை கைது செய்ய முடிந்ததா, தன் மீது இருந்த பழியை துடைத்துக் கொண்டாரா, என்ன காரணத்துக்காக இந்த மரணங்கள் நடந்தன என்பதெல்லாம் மீதிக் கதையில். 

ஒரு கொலை களத்தையும் போலீஸ் துப்பறியும் விதத்தையும் தடயவியல் நடைபெறும் சூழ்நிலைகளையும் இவ்வளவு அழுத்தமாகவும் நம்பகமாகவும் வேறு படத்தில் பதிவு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. 

தொடர் கொலைகள் நடக்கும் கதையை நேரடியாகவே நாம் பார்ப்பது போன்ற மாயையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ரியாஸ் மரத்.

இந்த ஸ்கிரிப்டின் மீது பாவனாவுக்கு இருந்த ஈடுபாட்டினால் தான் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் ஆகியிருக்கிறார் என்பது புரிகிறது. 

இயல்பாகவே கண்களில் சோகம் கொப்பளிக்கும் பாவனாவுக்கு தம்பியின் மீது அளவில்லாத பாசம் கொண்ட தமக்கையாக இவ்வேடம் முற்றிலும் பொருந்துகிறது. 

போலீஸ் மோப்பம் பிடித்து ஒரு இடத்துக்கு செல்லுமுன்னரே இவர் சென்று விடுவது அசத்தல். 

கேரள போலீஸ் துறையில் ரகுமானுக்கு சிறப்பு போலீஸ் அந்தஸ்து ஏதாவது அளிக்க முன் வரலாம். அவரை விட்டால் இது போன்ற காவல் அதிகாரி வேடத்துக்கு தென்னிந்திய சினிமா அளவில் வேறு யாரும் இல்லை என்றே தோன்றுகிறது. 

ஆனால் அவர் ஈடுபட்டாலே ஒரு வழக்கை முடித்து விடுவார் என்று தான் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால் சற்றே சோம்பல் நிறைந்தவராக அறிமுகமாகி பின்னர் சுறுசுறுப்படையும் அவரது பாத்திரம் இதில் சற்று வித்தியாசப்படுகிறது. 

ஒவ்வொரு கட்டமாக அவர் விசாரணையில் முன்னேற நமக்குதான் மூச்சு முட்டுகிறது அப்படி ஒரு அற்புதமான நடிப்பு அவரிடம் இருந்து…

பாவனாவின் தம்பியாக நடித்திருக்கும் செபின் பென்சனும் அசத்தியிருக்கிறார். அதேபோன்று கொலையாகும் மற்ற இளைஞர் இளைஞிகளும் மிகப் பொருத்தமாக இருக்கிறார்கள். 

பாவனாவின் காதலராக வரும் அர்ஜுன் லாலின் நடிப்பும் நன்று.

இந்த புலனாய்வு கதைக்குள் சேசிங், மழைச் சண்டை போன்ற பரபரப்பான காட்சிகளும் இடம் பெற்று இருப்பது படத்தில் நீளம் குறித்து நாம் கவலைப்படாமல் இருக்க உதவுகிறது. 

ஒளிப்பதிவு படத்தை தூக்கி நிறுத்துகிறது என்றால் பின்னணி இசையும் பாடல்களும் அவற்றைத் தாங்கி நிறுத்துகின்றன. 

கொலையாளி ஒரு சைக்கோ கில்லராக இல்லாமல் கொலைகளுக்காக சொல்லும் காரணம் ரொம்பவே புதியது. அரசியலுக்காக, சாதி வெறிக்காக நடக்கும் கொலைகளை விட நாங்கள் செய்தது பெரிய குற்றமில்லை என்று கொலையாளி வாதிடும் இடம் நிறைய யோசிக்க வைக்கிறது. 

Equation of Death என்கிற கதையின் மையப் புள்ளி எதிர்கால அறிவியலில் முக்கியத்துவம் பெறலாம்.

அனோமி – புலனாய்வு கதைகளின் சுனாமி..!

– வேணுஜி