சென்னையை மையமாக வைத்து படங்கள் வருவது மிகவும் குறைவு. அப்படி வந்தாலும் அவை பெரும்பாலும் வடசென்னையை சுற்றியே அமைகிறது.
சென்னை நகருக்குள் இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய பதிவு தமிழ் திரைப்படங்களில் குறைவாகவே இருக்கிறது அந்த குறையை நிறைவு செய்ய வந்திருக்கும் படம் தான் இது.
சென்னை பெரம்பூரில் வசிப்பவர்களுக்கு அங்கு வாழ்பவர்கள் பற்றி நன்றாக தெரியும் முக்கியமாக நடுத்தர வர்க்கத்து ஆங்கிலோ இந்தியர்கள் பெரம்பூரில்தான் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.
அப்படி அங்கு வசிக்கும் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணைக் காதலிக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழ் இளைஞனின் கதைதான் இது.
பெரம்பூரில் வசிக்கும் நாயகன் பாரி இளவழகன், அங்கு வசிக்கும் ஆங்கிலோ இந்திய பெண்ணான நாயகி ரம்யா ரங்கநாதனை காதலித்து வருகிறார்.
கல்லூரியில் படிப்பதில் இருந்து இந்த காதல் கதை நடந்து வந்தாலும் பாரியுடன் நட்பாக பழகும் ரம்யா அவரது காதலை மட்டும் ஏற்க மறுத்து வருகிறார்.
இந்நிலையில் நெடுங்காலமாக காதலுக்காக காத்துக் கிடக்கும் பாரிக்கு ஒரு கட்டத்தில் ரம்யா சம்மதம் சொல்கிறார்.
பழம் நழுவிப் பாலில் விழுந்த நிலையில் ரம்யாவின் காதலை ஏற்பதில் இப்போது தயக்கம் காட்டுகிறார் பாரி.
ரம்யாவை விட்டு பாரி விலகிச் செல்ல முயற்சிப்பது ஏன்..? அதனால் அந்த காதலினுடைய நிலை என்ன..? என்பதுதான் மீதி கதை.
கொஞ்சம் சீரியசான கதை போல தெரிந்தாலும் அதை நகைச்சுவையாகவே சொல்லி இருக்கிறார் படத்தின் நாயகனாக நடித்ததுடன் இயக்கியுமிருக்கும் பாரி இளவழகன்.
இயல்பான நடிப்பில் கவனம் ஈர்க்கும் பாரி, ஒருதலையாக ரம்யாவை காதலிப்பதில் தொடங்கி காதல் கைகூடும் போது அதை ஏற்க தயக்கம் காட்டுவதுடன் கண்டிப்பான அம்மாவுக்கு கட்டுப்பட்டு காதலை ஏற்க முடியாமல் தவிப்பது வரை எளிதாக நடித்து கடந்திருக்கிறார.
சென்னையில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நாயகியாக நடித்திருக்கும் ரம்யா ரங்கநாதன். ஆங்கிலம் கலந்த சென்னைத் தமிழின் உச்சரிப்பையும் மிகச் சரியாக பேசி அசத்தியிருக்கிறார். நடிப்பின் உச்சமே நகைச்சுவையாக நடிப்பது தான். அதையும் இயல்பாக நடித்து பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார்.
சமீப காலமாக பல படங்களில் தனது குணச்சித்திர நடிப்பால் நம்மை கவர்ந்து கொண்டிருக்கும் சேத்தன், பாரி இளவழகனின் அப்பாவாக அசத்தலாக நடித்திருக்கிறார்.
நாயகனின் அம்மாவாக நீண்ட இடைவெளிக்குப்பின் இதில் நடித்திருக்கும் ரோஜா கம்பீரமாக வெளிப்பட்டுக் கவர்கிறார். கண்டிப்பும், கனிவும் மிக்க அவர் நடிப்பு கச்சிதம்.
பெங்களூர் தமிழராக வரும் பரிதாபங்கள் கோபி, பாரியின் நண்பராக வந்து பல இடங்களில் நம்மைச் சிரிக்க வைக்கிறார்.
நீண்ட காலம் கழித்து இதில் வந்திருக்கும் செல் முருகனின் காமெடியிலும் குறையில்லை.
இவர்களுடன் பாரியின் மாமா பெண் வேடத்தில் நடிக்கும் நிகிலா சங்கர், பாரியின் சகோதரியாக வரும் இஸ்மத் பானு, சகோதரனாக வரும் சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் கதைக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.
நமக்குப் பழக்கமாக இருக்கும் பெரம்பூர் இத்தனை அழகாக இருக்கிறதாவென அதிசயிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட்.
பரத் சங்கரின் இசையில் பாடல்கள், பின்னணி இசை எல்லாம் படத்துக்குப் பக்காவாக பொருந்தியிருக்கிறது.
எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கும் பாரி இளவழகன், தெரிந்த காதல் கதையை, தெளிவான திரைக்கதை மூலம் நகைச்சுவை ததும்ப தந்திருப்பது நயம்.
பின்பாதிப்படம் வேகமாக கடக்க, முன்பாதிப்படம் படம் மட்டும் கொஞ்சம் மெத்தனமாக நகர்வதை கவனித்து வேகப்படுத்தியிருக்கலாம்.
அதேபோல எல்லாத் தடைகளையும் கடந்து மனித மனங்களை அன்பால் இணைக்கும் இந்த முயற்சி வரவேற்கக் தக்கது.
அன்பே டயானா – அள்ளிக் கொள்ளும் கஜானா..!
– வேணுஜி
0