November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஒரே படத்தில் தமிழுக்கு வரும் அமிதாப்… இந்திக்குப் போகும் எஸ்.ஜே.சூர்யா
August 31, 2018

ஒரே படத்தில் தமிழுக்கு வரும் அமிதாப்… இந்திக்குப் போகும் எஸ்.ஜே.சூர்யா

By 0 1122 Views

‘திருச்செந்தூர் முருகன் புரடக்‌ஷன்ஸ்’ சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ‘ஃபைவ் எலிமென்ட்ஸ் பிக்சர்ஸ்’ இணைந்து தயாரிக்கும் மிக பிரமாண்டமான படத்துக்கு “உயர்ந்த மனிதன்” என்று தலைப்பிடப்பட்டு உள்ளது.

இந்தப்படத்தின் சிறப்பம்சமே இதில் இந்திய பட உலகின் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் ‘அமிதாப் பச்சன்’ முதல்முறையாக தமிழில் நடிப்பது. அவருடன் இந்தப்படத்தின் இணைந்து நடிப்பது எஸ்.ஜே.சூர்யா. இதே படத்தின் மூலம் இந்தியில் பிரவேசிக்கீறார் எஸ்.ஜே.சூர்யா.

இந்தப் படம் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்க பட உள்ளது. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

“எனது கனவு நிறைவேறியது.இதை விட நான் வேறு என்ன கேட்டுப் பெற்று விட முடியும். உலகெங்கும் புகழ் பெற்று , இந்திய திரை உலகின் முடி சூடா மன்னனாக திகழும் அமிதாப் சாருடன் பணி புரிவது மிக பெரிய பாக்கியம். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில்தான் என்பதே எனக்கு மிக பெரிய பெருமை” என்கிறார் இயக்குனர் தமிழ்வாணன்.

“ஒரு துணை இயக்குனராக திரை உலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்” என்கிறார் எஸ் ஜே சூர்யா.

மார்ச் 2019 இல் படப்பிடிப்பு துவங்க உள்ளது.மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் தமிழ்வாணன், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது படத்தின் தலைப்பையும், போஸ்டரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். அந்த காணொளியை பத்திரிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியோடு திரையிட்டுக் காண்பித்தார் எஸ்.ஜே.சூர்யா. அப்போது ஸூர்யா பேசியதிலிருந்து…

“இயக்குனர் கொண்டு வந்த கதை தான் அமிதாப் சார் வரைக்கும் இந்தப் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறது. 2 வருடங்களுக்கு மேலாக இந்த படத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது. திரைக்கதை மட்டும் ஒரு வருடம் எழுதியிருக்கிறார். ஸ்கிரிப்டை அமிதாப் பச்சன் சாரிடம் கொண்டு சென்று கொடுத்தோம். எல்லாம் படித்து முடித்த பிறகு அவரை இறுதியாக ஒரு முறை சந்தித்தோம்.

கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, சில சந்தேகங்கள் இருக்கின்றன, அவற்றை விளக்க வேண்டும் என்றார். அதைக் கேட்டுத் தெளிந்த பிறகு கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்றார். அதை யார் அறிவிக்க முடியும் என்றால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தான் முடியும். அவரும் உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே அழைத்து எங்களை வாழ்த்தி பட அறிவிப்பை வெளியிட்டார்.!”