இந்த ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை மனதில் வைத்துக்கொண்டு, ஒற்றைத் திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் கைப்பற்றி வருவதாகத் தெரிகிறது.
இந்தச் செய்தியைப் பகிர்ந்து, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது:
“அமேசான் தனித் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடோன்களாக மாற்றப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் திரையிட்டால் கிடைக்கும் லாபத்தைப் போல இரண்டு மடங்கு வாடகை தரத் தயாராக இருக்கிறார்கள். இப்படி மாறினால் திரையரங்குகள் லாபகரமாக மாறும். ஆனால், திரைப்படங்கள் திரையிடத் திரையரங்குகள் இருக்காது.
கார்ப்பரேட் கம்பெனிகளின் மல்டிபிளக்ஸ் மட்டுமே இருக்கும். அப்போது தயாரிப்பாளர்கள் வி.பி.எஃப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். நடக்கப்போவது ஒன்றுமில்லை. திரையரங்கு உரிமையாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து தயாரிப்பில் கவனம் செலுத்தி, செலவுகளைக் குறைப்பதில் ஆர்வம் காட்டி, திரையரங்கு உரிமையாளருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுத்தால் மட்டுமே சினிமா தப்பிக்கும்.
இல்லையேல் திரையரங்கில் திரையிடாமல் வேறு தளத்தில் படங்கள் வெளியானால் நடிகர்களுக்கு எந்த ஸ்டார் பட்டமும் போட முடியாது. இந்தச் சம்பளமும் வாங்க முடியாது. ஆகவே, அனைவரும் ஒன்றுசேர்ந்து திரையரங்குகளைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். இதை நான் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவராக எழுதவில்லை. ஒரு சினிமா ரசிகனாக எழுதுகிறேன்”.