July 30, 2026
  • July 30, 2026
Breaking News
March 6, 2026

செல்லமடா நீ எனக்கு திரைப்பட விமர்சனம்

By 0 196 Views

பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் ஆண்களின் பார்வையில் எல்லாக் காலத்திலும் பெண்ணின் கற்பு மட்டுமே பேசு பொருள் ஆகிறது. 

அது மனைவியாக இருந்தாலும் சரி… சகோதரியாக இருந்தாலும் சரி…

அவற்றை எல்லாம் தாண்டி இந்தப் படத்தில் தாயின் ஒழுக்கம் குறித்து மனம் வெறுக்கும் மகன் பற்றிய கதை சொல்லப்படுகிறது. 

அந்தத் தாய் செந்தி. மகன் நாயகன் வசீகரன்.

தாயை மகன் வெறுக்கும் காரணம் மேலே சொன்ன ஒழுக்க சந்தேகம்தான். ஆனால், பெற்ற மனம் பித்து என்ற கதையாக அந்தத் தாய் தன் மகனின் பாசத்துக்காகக் காத்துக் கிடக்கிறார்.

தாயின் மனதைப் புரிந்து கொள்ளாத மகன்களும் இன்னொரு பெண்ணின் மனதைப் புரிந்து கொள்வது காதல் வயப்படுவதால்தானே..?

அப்படி வசீகரனுக்கு நேகா மீது காதல் வருகிறது. ஆனால், அந்தக் காதலிதான் அம்மாவின் பெருமையை எடுத்துச் சொல்லி பிரிந்திருக்கும் தாயையும், மகனையும் இணையக் காரணமாகிறார்.

ஆனால், அப்படி இணைந்தார்களா என்பதுதான் மீதி.

நாயகன் வசீகரன் பாசத்தைப் போல் காதலில் குறை வைக்கவில்லை. ஆனால், தாயைப் புரிந்து கொள்ளும்போது பாசத்திலும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார்.

தாயாகி இருக்கும் செந்தியின் நடிப்பு பற்றி சொல்ல வேண்டியதில்லை. கடைசியில் நம்மை உருக வைத்து விடுகிறார். 

என்ன தேவையோ அதைச் சரியாகக் கொடுத்திருக்கிறார் நேகா. சும்மா வந்து காதலித்து விட்டுப் போகாமல் படத்தின் உயிர்நாடியான அவரது முயற்சியில் பாத்திரம் நிற்கிறது.

இவர்களுடன் போஸ் வெங்கட், அமுதவாணன், மீரா கிருஷ்ணன், ரிஷாவும் தங்கள் பாத்திரங்களில் நிறைகிறார்கள்.

தேவையை நிறைவு செய்திருக்கிறது தாஜ்நூர் இசையும், செல்வா. ஆர் கையாண்ட ஒளிப்பதிவும்.

மதுரா வேள்பாரியின் கதை, வசனம், பாடல்களுடன் தாய்ப்பாசத்தைப் போற்றும் ஒரு அழுத்தமான உணர்வைக் கொண்ட திரைக்கதையுடன் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சிவம்.

பெரிய படங்களெல்லாம் போதை சாம்ராஜ்யத்தைக் குறிவைக்க இதைப் போன்ற சின்னப் படங்கள்தான் மனித உணர்வுகளைப் பேசியாக வேண்டும்.

செல்லமடா நீ எனக்கு – தங்கமடா தாய் மனசு..!

– வேணுஜி