August 10, 2026
  • August 10, 2026
Breaking News
March 6, 2026

காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்பட விமர்சனம்

By 0 239 Views

‘யாதோன் கி பாரத்’ படத்தில் ஆரம்பித்து ‘மூன்றாம் பிறை’யில் முடியும் கதை. சென்னையில் இருந்து ஸ்காட்லாந்து வரை நீளும் கதையில் இன்னும் கூட பல படங்களின் நினைவுகளை தாங்கிச் செல்கிறது  திரைக்கதை. 

ஐந்து வயதிலிருந்து அவள் அறியாமல் காதலித்து வரும் காதலன், பருவ வயது வந்ததும் அவளுக்கு இன்னொருவன் மேல் காதல் ஈர்ப்பு ஏற்பட, அப்போதும் அவளை பின்தொடர்ந்து காதலித்துக் கொண்டிருக்கிறான்.

ஸ்காட்லாந்து போய் அவள் காதலிக்கும் காதலன் அவளைக் கழற்றிவிட, ஒரு விபத்தில் அவளுக்கு தற்போதைய நினைவு மறந்து போக, பின்னாலேயே போன நம்ம ஆளு அவளைத் தன் பொறுப்பில் எடுத்து பார்த்துக் கொள்ள… அதுக்கப்புறம் என்ன ஆகிறது என்கிறீர்களா..?

என்னதான் ஆகிவிடும்..? போங்க..!

காலம் காலமாக நாம் பார்த்து வந்திருக்கும் இந்தக் கதையை இன்னொரு முறை பார்க்க நேரும் காரணம் இளமை பட்டாளம் + அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு + ஹாரிஸ் ஜெயராஜின் இசை, 

கதையின் மையப் புள்ளி நாயகி ஜியா சங்கர் தான். அதென்ன அப்படி ஒரு அழகு – தமன்னாவை குளோனிங் எடுத்து செய்தது மாதிரி..? 

அந்த மெழுகு சிலையை ஐந்து வயதில் இருந்து மெய்யாக காதலிப்பவராக மதும்கேஷ். காரியத்துக்காக காதலிப்பவராக அர்ஜுன் அசோகன். 

நடிப்பு அனுபவம் ஏற்கனவே வாய்க்கப்பட்டதால் ஜியா சங்கருடைய அழகு, நடிக்கையில் மேம்பட்டுத் தெரிகிறது. 

மதும்கேஷ், பார்த்துக்கொண்டு நின்றால் போதும் – அதுதான்… அவருடைய பாத்திரம்… என்று இயக்குனர் விஜய் முடிவு செய்துவிட்டபடியால் அதற்கு மேல் அவர் ஒன்றும் செய்வதற்கு இல்லை. அதற்கு மேல் சொல்வதற்கு நம்மிடமும் ஒன்றுமில்லை. 

முதல் பார்வையிலேயே அர்ஜுன் அசோகன் நல்லவராக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பது புரிந்து விடுகிறது. அது ஜியாவுக்கு புரியத்தான் நிறைய நேரம் எடுக்கிறது. 

மதும்கேஷின் முயற்சிகளுக்கு ஸ்காட்லாண்டில் உதவும் ஒருவர் எம் எஸ் பாஸ்கர். அதற்காக 24 மணி நேரமுமா அவர்களுக்கு இடம், பொருள், ஏவல் செய்து உதவிக் கொண்டிருப்பார்..?

இந்த சுட்ட கதை(களுக்)கு இயக்குனர் விஜயுடன் சேர்ந்து ஏ மகாதேவும் உரிமை கொண்டாடுது வேடிக்கைதான். சம்பந்தப்பட்டவர்கள் உரிமை கோரினால் என்ன செய்வார்களாம்..?

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கூட இசைஞானியின் ‘தும்பி வா…’ பாடலின் அப்பட்ட வாசனை. இது இயக்குனர் உட்பட படம் சம்பந்தப்பட்ட யாருக்குமா தெரியாமல் போனது..?

ஆனால் படம் நெடுக இசையும் ஒளிப்பதிவும்தான் கோலாச்சுகின்றன. ஆண்டனியின் எடிட்டிங்கும் வேற லெவல்.

இவ்வளவு நேர்த்தியான ஒரு படைப்புக்கு ஒரு நல்ல கதையை பிடித்திருந்தால் விஜய்யை கொண்டாடியிருக்கலாம். அவருக்கு எப்போதுதான் நல்ல கதை கிடைக்குமோ..?

அதனால் ‘பழங்கதை ரீசெட் ரிப்பீட்’ என்றே போய்க்கொணடிருக்கிறார் அவரும்..!

படத்தில் லாஜிக் ஓட்டைகளுக்கும் குறைவில்லை. டூவீலரை விமான நிலைய பயணிகள் கேட் வரை ஓட்டி வந்து, விசா எடுக்காமல் வெறும் பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு, ஜியா போகும் அதே ஃப்ளைட்டிலேயே ஸ்காட்லாந்துக்கு டிக்கெட் போட்டு மதும்கேஷ் உடன்போவதெல்லாம் பூவுக்குள் காது..!

எத்தனை தடவை மலையிலிருந்து குதித்தாலும் இரண்டு மூன்று பிளாஸ்திரிகளோடு எல்லோரும் எழுந்து வந்து விடுகிறார்கள்… ஹூம்..! 

நியூ காலேஜ்… ஓல்டு சிலபஸ்..!

– வேணுஜி