November 28, 2026
  • November 28, 2026
Breaking News
November 29, 2026

டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்

By 0 8 Views

தன் தாயைக் காப்பாற்ற உதவியவரின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் இளைஞனின் கதை.

டெலிவரி பாயாக இருக்கும் நாயகன் லியோனி சிவகுமார், தெருவில் இட்லி கடை வைத்து நடத்தும் தன்னுடைய தாய் ராதிகாவுக்கு ஏற்படும் விபத்தினால் நிலை குலைந்து போகிறார். 

தாயின் உயிரைக் காப்பாற்ற பெருமளவு பணம் தேவைப்பட, கண நேரமும் யோசிக்காமல் இன்னொரு நாயகனாக வரும் துஷ்யந்திடம் அந்த பணத்தை அவசரத்துக்குத் திருடி விடுகிறார். 

ஆனாலும் அவரது மனதை அது உறுத்திக் கொண்டே இருக்க, தாயின் ஆலோசனைப்படி தான் டெலிவரி பாயாக வேலை செய்து வரும் பணத்தில் இருந்து சிறிது சிறிதாக சேர்த்து அந்த பணத்தை துஷ்யந்திடம் கொண்டு சேர்க்கப் போகும் போது, அங்கே அவர் ஆபத்தில் இருப்பதை உணர்கிறார். 

துஷ்யத்துக்கு நேர்ந்த ஆபத்து என்ன… அதிலிருந்து அவரைக் காப்பாற்ற லியோ சிவகுமாரால் முடிந்ததா..? என்பதெல்லாம் மீதிக்கதை.

கட்டுமஸ்தாக உடலை வைத்திருக்கும் லியோ சிவகுமார் நியாயமான முறையில் தனக்கு காவல்துறை பணி கிடைக்க வேண்டும் என்று விரும்புவது ஒரு நேர்மறையான ஹீரோவுக்கான பாத்திரமாக அமைகிறது. 

குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அற்புதமாக அதிரடி காட்டி நடித்திருப்பவர், தாய்ப் பாசம் காட்டும் இடத்திலும் நியாயமாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடாவுக்கு லியோ சிவகுமாரால் காதலிக்கப்படுவதைத் தவிர வேறு வேலை இல்லை. அதிலும் இரண்டாவது பாதியில் அவரது பங்கு முற்றிலும் இல்லாமல் போகிறது.

லியோ சிவக்குமாரின் தாயாக நடித்திருக்கும் ராதிகாவுக்கு நாயகனின் அம்மாவாக இது எத்தனையாவது படம் என்று தெரியவில்லை. ஆனாலும் படத்துக்கு அவரது இருப்பு பலம் சேர்க்கிறது.

இன்னொரு நாயகன் போல் வரும் துஷ்யந்த், இரண்டாவது பாதியில் பெருமளவு பங்கேற்கிறார். ஆனாலும் அநியாயத்துக்கு நல்லவனாக இருக்கிறார்.

இவர்களுடன் காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், உதயா தீப் உள்ளிட்டோர் பாத்திரங்களில் பக்காவாக பொருந்தி இருக்கிறார்கள்.

எங்கிருந்து வந்தார்கள், எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்று தெரியாத கொடூரமான கொலைகள் ஏழு பேர் வில்லன்கள் ஆவது பதட்டத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் செய்யும் கொலைகள் அத்தனை கொடூரம். தங்களுக்கு அடைக்கலம் தந்தவரையே அவர்கள் போட்டுத் தள்ளுவது மகா பயங்கரம்.

ஒளிப்பதிவாளர்கள் அசோக்குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ்.குமார் ஆகியோரது திறமையில் ஆக்சன் காட்சிகள் அமர்க்களமாக வந்திருக்கின்றன.

அதற்கு சுந்தரமூர்த்தி.கே.எஸ்-சின் பின்னணி இசை பக்காவாகப் பொருந்தி இருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம்.

எழுதி இயக்கியிருக்கும் நானி, ஒரு பெரிய ஹீரோவுக்கான திரைக்கதையை எளிய ஹீரோவை நம்பி எடுத்திருப்பது தன்னம்பிக்கையின் அடையாளம். படத்தை தொய்வு இல்லாமல் கொண்டு செல்லும் திறமை கொண்டிருப்பவர் விரைவில் பெரிய நடிகர்களின் படங்களை இயக்குவார் என்று நம்பலாம். 

ஆனாலும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். கதாநாயகனின் பிரச்சனை வேறு ஒன்றாக இருக்க, அவர் முக்கிய கதைக்குள் வர ரொம்பவும் பிரயத்தனப்படுகிறார். வம்படியாக அவரை கதைக்குள் நுழைப்பது போல் இருக்கிறது.

கடைசியில் அவரைப் போலவே இன்னொரு ஆட்டோ டிரைவரும் அவசரத்துக்கு பணத்தை அடித்துக் கொண்டு போய் அதை அவரிடம் திருப்பித் தரும்போது சிரிப்புதான் வருகிறது.

இருந்தாலும் பரபரப்பாக சென்று முடிகிறது படம்.

டெலிவரி பாய் – ஹாட் டெலிவரி..!

– வேணுஜி