July 4, 2025
  • July 4, 2025
Breaking News
July 2, 2025

3BHK திரைப்பட விமர்சனம்

By 0 22 Views

படத்தின் தலைப்பே கதையைச் சொல்லி விடும். நடுத்தர வர்க்க மக்கள் பெரும்பாலானோரின் கனவு ஒரு சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்பதுதான்.

அப்படி…

மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத்துடன் வசதிகள் குறைந்த வாடகை வீட்டில் வசித்து வரும் நடுத்தர வர்க்கத்து சரத்குமாரின் கனவு மட்டுமல்லாமல் வாழ்க்கையின் லட்சியமே சொந்த வீடு வாங்குவதாக இருக்கிறது. அதற்காக பட்ஜெட் போட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சரத்குமாரின் மகனான சித்தார்த்துக்கு படிப்பு சரியாக வரவில்லை. பள்ளி மேல்நிலைத் தேர்வில் தேருவாரா என்றே தெரியாத நிலையில், பட்ஜெட்டையும் மீறி சித்தார்த்தை டியூஷனில் சேர்க்கிறார் சரத். அடுத்து குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கல்லூரியில் சேர்வதற்கு பெருமளவு பணம் தேவைப்படுகிறது. இதனால் எல்லாம் வீடு வாங்கும் முயற்சி தள்ளிப் போகிறது. வீட்டின் விலையும் ஏறிக்கொண்டே போகிறது.

இப்படியே ஒவ்வொரு கட்டத்திலும் அந்த முயற்சி தள்ளிக் கொண்டு போனதில் அவருக்கும் வயதாக… அவரால் நினைத்தபடி வீடு வாங்க முடிந்ததா என்பதுதான் கதை.

ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவரின் வேடத்தை இத்தனை அற்புதமாக செய்ய முடியுமா என்கிற அளவில் அண்டர் பிளே செய்து நடித்திருக்கிறார் சரத். 

குடும்பத்துக்காகவே சுயநலம் கருதாமல் வாழ்ந்ததில் உடன்பிறந்தோரெல்லாம் செட்டிலாகி விட, தான் மட்டும் வாழ்க்கையைத் தொலைத்து விட்ட நிலை தன் மகனுக்கு வந்து விடக்கூடாது என்று ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்வதில் இதுவரை இல்லாத இன்னொரு பரிமாணம் தொட்டு இருக்கிறார் சரத்.

நான் மட்டும் என்ன இளைத்தவனா என்கிற அளவில் பள்ளிச் சிறுவனாகத் தெரிய இளைத்தது மட்டுமில்லாமல், கல்லூரி, வேலை, திருமண வாழ்க்கை என்று அனைத்துப் பருவங்களுக்கும் பொருத்தமாக வாழ்ந்திருக்கிறார் சித்தார்த்தும்.

தந்தை சொல் தட்டாத தனயனாக படம் முழுவதும் அமைதியாக நடந்தாலும், தோல்விகளையே பரிசாக பெற்ற விரக்தியில்  எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் தந்தை சரத்திடம், நிகழ்காலத்திலும் வாழ்க்கையை வாழ்ந்து விடு வேண்டும் என்று பொங்குமிடம் அருமை.

கணவனின் அத்தனை சோகங்களையும் உள்வாங்கி ஒரு ஊன்றுகோலாக வரும் தேவயானி கடைசியில் ஒரு ஊன்றுகளுடன் வருவது கவலை அளிக்கிறது.

சித்தார்த் துவண்டு போன நேரத்தில் எல்லாம் தோள் கொடுத்து அவரைத் தேற்றும் நாயகி சைத்ரா ஆச்சார், பாதியில் காணாமல் போனாலும் உரிய நேரத்தில் உள்ளே வந்து சித்தார்த் வாழ்வில் புன்னகை பூக்கச் செய்கிறார். 

சித்தார்த்தின் தங்கையாக நடிதிருக்கும் ‘மீதா’ வின் பூவைப் போன்ற அமைதியும், ஒரு கட்டத்தில் புயலாக பொங்குவதும் அற்புதம்.

திடீரென்று அறிமுக மாகும் யோகிபாபுவால் படத்துக்கு எந்த நல் விளைவும் இல்லை.

தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், அம்ரித் ராம்நாத்தின் இசையும் கூட மிக நேர்த்தியாக இருக்கிறது.

இவ்வளவு பாசிட்டிவான விஷயங்கள் இருந்தாலும் வாழ்க்கையின் நெகடிவ் பக்கங்களை மட்டுமே முன் வைத்து இயக்குனர் ஶ்ரீ கணேஷ் காட்சிப்படுத்தி இருப்பதில் படம் பின் தங்கி விடுகிறது.

அன்றாட கூலி வேலை செய்பவர்கள் கூட மகிழ்ச்சியுடன்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற தற்கால சூழலில் இந்த குடும்பம் மட்டும் எப்போதும் சோகம் தாங்கிய கண்களுடன் வளைய வருவது இயல்புக்குப் பொருந்தாமல் இருக்கிறது. 

எல்லா காட்சிகளிலும் ஏதோ ஒரு வாழ்க்கையின் இயலாமை இவர்களை வாட்டி எடுத்துக்கொணடு இருக்கிறது. அவர்களும் ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளாமல் மன நோயாளிகள் போலவே இறுக்கத்துடன் இருப்பது நம்மை சோர்வடைய வைக்கிறது.

அத்துடன் ஒரு கோபக்கார பெண்ணை சித்தாரத்துக்கு மணமுடித்து வைக்க சரத் எடுக்கும் முடிவு அநியாயம். 

ஐடி கம்பெனிகளில் மேல் அதிகாரிகள் கேவலமாக நடந்து கொள்வார்கள் – ஆனால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தால் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்பது போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது படம்.

என்னதான் கிளைமாக்ஸ் சுபமாக முடிந்தாலும் எங்கே அதுவும் தங்காமல் போய்விடுமோ என்கிற பிரமையுடன்தான் தியேட்டரை விட்டு வெளியே வருகிறோம். 

இதே விஷயத்தை கலகலப்புடன் சொல்லி இருந்தால் கொண்டாடி இருக்கலாம்.

3 BHK – அழுகாச்சி காவியம்..! 

– வேணுஜி