இது ஓர் இரவு சீசன். ஒரு இரவுக்குள் நடக்கும் கதைகளை சொல்வதில் அலாதி விருப்பம் காட்டுகின்றனர் இன்றைய இளம் இயக்குநர்கள். அந்த வகையில் ஒரு இரவுக்குள் ஒரு வழக்கை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் காவல் ஆய்வாளர் சிபி சத்யராஜ்.
ஆத்தூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவரிடம் ஒரு இளம் பெண் காணாமல் போன வழக்கு வருகிறது. அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்றே தெரியாத நிலையில் ஒரு இளைஞன் கொல்லப்படுவதும் இன்னொரு இளம் பெண் குற்றுயிராகக் கிடைப்பதும் மேலும் இந்த வழக்கை திசை திருப்ப என்ன ஆகிறது என்ற 10 மணி நேரக் கதையை இரண்டரை மணி நேரத்துக்குள் பரபரப்புடன் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள்.
தன் தந்தையை விட இரண்டு அங்குலங்கள் உயரமான சிபி சத்யராஜுக்கு அப்பாவைப் போலவே காக்கிச்சட்டை கச்சிதமாகப் பொருந்துகிறது. ‘இதனை இவன் முடிப்பான்..’ என்கிற அளவில் அவர் மீது நம்பிக்கை வைக்கவும் முடிகிறது.
ஆனால் அப்பாவுக்கும் இவருக்கும் உள்ள பெரிய வித்தியாசம் முன்னவர் பகுத்தறிவு பேசுபவர். இவரோ பட்டை போட்டுக் கொண்டு சபரிமலை செல்ல மாலை அணிந்து கொண்டு வருகிறார். துளசி மாலை அவருக்கு வெற்றி மாலையைக் கொண்டு வருமா? சாமி சரணம்..!
இவருடன் உதவி ஆய்வாளராக வரும் கஜராஜும் கருத்தைக் கவர்கிறார். ஆனால் சிபிராஜ் தனியாக மாட்டிக் கொள்ளும் இடங்களில் எல்லாம் இவர் எங்கே போனார் என்று தெரியவில்லை.
அநியாயமாக உயிரைவிடும் கேரக்டரில் ராஜ ஐயப்பா. கடந்த சில படங்களில் வில்லனாக வந்தவர் இந்தப் படத்தில் அப்பாவியான நல்லவனாகவும் அடையாளம் தெரிவது நன்று.
வில்லன் என்று ஒருவர் இருக்கிறார் – அவர் யார் என்றே தெரியவில்லை என்கிற நிலையில் குரல்… அடுத்து கை… பிறகு உடல் என்று கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கடைசியில் முழு வில்லனாக வெளியாகிறார். திலீபன்.
இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஜீவா ரவி, தங்கதுரை, சாருமிஷா உள்ளிட்டோர் கதையை நகர்த்த உதவியிருக்கின்றனர்.
படத்தொடக்கத்தில் இதுவும் ஒரு சைக்கோ கில்லர் கதையோ என்று நினைக்க வைக்கிறது. ஆனால் போகப் போக அதன் தடம் மாறி ஒரு கட்டத்தில் அரசியல் பின்புலத்துடன் முடிவதில் வித்தியாசம் காட்டி இருக்கிறார் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள்.
ஹீரோயின் டூயட் பாடல் என்று எதையும் நம்பாமல் எடுத்துக்கொண்ட சீரியஸ் கதையை சீரியஸ் ஆகவே கொண்டு போய் முடிக்கிறார்.
இரவில் நடைபெறும் கதைகளுக்கு ஒளிப்பதிவு மிக முக்கியம். அதைக் குறைவில்லாமல் நிறைவேற்றி இருக்கிறார் ஜெய் கார்த்திக். அந்த பஸ் காட்சிகள் எல்லாம் பரபரப்பாக இருக்கின்றன.
இசை அமைப்பாளர் கே எஸ் சுந்தரமூர்த்தி, கதையின் வேகத்தைப் பின்னணி இசையில் கொண்டு வந்தாலும் ஒரே டிராக்கையை திரும்பத் திரும்ப பயன்படுத்தி இருப்பதைத் தவிர்த்து இருக்கலாம்.
ஒரே நம்பர் பிளேட்டை வைத்துக் கொண்டு இரண்டு பஸ்களை ஒரு டிராவல்ஸ் ஓட்டுவதாக கதை சொல்வதில் லாஜிக் இடிக்கிறதே என்று பார்த்தால் அதற்குப் பொருத்தமான ஒரு காரணத்தை வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஆனால் இதை வைத்து தேர்தல் நேரத்தில் யாரும் ஓட்டுப் பெட்டிகளை கடத்தாமல் இருந்தால் சரி.
10 ஹவர்ஸ் – கள்ள ஓட்டுக்கு வேட்டு..!
– வேணுஜி