September 11, 2026
  • September 11, 2026
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • காவேரி மருத்துவமனையில் ‘எண்டோஸ்கோபிக் ஸ்பைனல் ஃபியூஷன்’ சிகிச்சை அறிமுகம்..!
September 11, 2026

காவேரி மருத்துவமனையில் ‘எண்டோஸ்கோபிக் ஸ்பைனல் ஃபியூஷன்’ சிகிச்சை அறிமுகம்..!

By 0 12 Views

முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளுக்கும் – நரம்பு அழுத்தத்திற்கும் நவீன நுண்துளை அறுவைசிகிச்சை மூலம் தீர்வு..!

முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகள் மற்றும் ஏற்கனவே செய்யப்பட்ட திறந்தநிலை அறுவைசிகிச்சையில் பலன் கிடைக்காத நோயாளிகளுக்கு, சுமார் 8 மி.மீ அளவிலான சிறிய துளை மூலம் அளிக்கப்படும் இச்சிகிச்சையில் குறைந்த இரத்த இழப்பு, குறைவான திசு சேதம் என்ற பலன்களோடு அவர்கள் விரைவாகக் குணமடைந்து நடக்க முடியும்.

சென்னை, 11 செப்டம்பர் 2026: காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை, ‘எண்டோஸ்கோபிக் ஃபியூஷன்’ அறுவைசிகிச்சையை சென்னையில் முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் தனது முதுகுத்தண்டுவடப் பராமரிப்புத் திட்டத்தை இம்மருத்துவமனை மேம்படுத்தியுள்ளது. திறந்தநிலை அறுவைசிகிச்சை அல்லது வழக்கமான குறைந்த ஊடுருவல் உள்ள அறுவைசிகிச்சையை (MIS) விட சிறிய துளை மூலம் தண்டுவட அறுவைசிகிச்சை மூலம் பலன் பெறக்கூடிய நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மாற்று முறையாகும். 

சுமார் 8 மி.மீ அளவுள்ள சிறிய துளை மூலம் அதிக துல்லியமான கேமரா மற்றும் நுண் கருவிகளைச் செலுத்தி இந்த எண்டோஸ்கோபிக் ஃபியூஷன் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் நரம்புகளில் உள்ள அழுத்தம் நீக்கப்பட்டு, சுற்றியுள்ள தசைகள், எலும்புகள் மற்றும் தசைநார்கள் பாதிக்கப்படாமல் உட்பதியம் (இம்ப்ளாண்ட்) செய்யப்படுகிறது. வழக்கமான அறுவைசிகிச்சைகளில் ஏற்படும் பெரிய தழும்புகள், தசை பாதிப்புகள், அதிக இரத்த இழப்பு மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி ஆகியவை இதில் மிகக் குறைவாகவே இருப்பதால், நோயாளிகள் விரைவாக குணமடைய இந்த சிகிச்சை உத்தி உதவுகிறது.

வழக்கமான திறந்தநிலை அறுவைசிகிச்சையில் பெரிய அளவிலான கீறல்களும், அதிகளவு தசைப் பிரித்தலும் தேவைப்படும். வழக்கமான குறைந்தபட்ச ஊடுருவல் அறுவைசிகிச்சையிலும் சுமார் 20 மி.மீ அளவில் கீறலிடப்படுவதால் திசுக்களுக்குச் சிறிய அளவில் பாதிப்பு உண்டாகலாம். ஆனால், எண்டோஸ்கோப்பிக் ஃபியூஷன் என்ற இந்த நவீன சிகிச்சை உத்தியில் திசு சேதம், இரத்த இழப்பு மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி ஆகியவை மிக குறைவாகவே இருப்பது, நோயாளிகள் மிக விரைவில் குணமடைய உதவுகிறது. 

தண்டுவட வட்டு தேய்மானம், தண்டுவடக் கால்வாய் சுருக்கம் (Spinal stenosis) மற்றும் சில ஆரம்பநிலை தண்டுவட தளர்வுகள் போன்ற தேய்மானத்தால் ஏற்படும் இடுப்புத் தண்டுவடப் பிரச்சனைகள். முறையான ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும் குணமாகாமல், தொடர்ச்சியான நரம்பு அழுத்த கால் வலியால் அவதிப்படுபவர்கள், ஏற்கனவே திறந்தநிலை அறுவைசிகிச்சை செய்த இடத்தில் தழும்புகள் உருவாகி, மீண்டும் அதே முறையில் அறுவைசிகிச்சை செய்வது அதிக அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால், மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் நபர்கள் மற்றும் நீண்ட நேரம் நடைபெறும் திறந்தநிலை அறுவைசிகிச்சையின் சுமையைத் தாங்க முடியாத சில முதியவர்களுக்கும் இச்சிகிச்சை முறை பொருத்தமானதாக இருக்கும். 

(Left to Right)

Dr Soma Sundar – Consultant Orthopaedic and Spine Surgery 

Dr Clive Fernandes – Director, Medical Services Kauvery Hospital Chennai 

Dr Balamurali G – HOD Spine and Neurosurgery Kauvery Hospital Alwarpet 

Dr Keerthivasan P – Senior Consultant Orthopaedic and Spine Surgery 

Dr Mahesh Kumar K – Medical Superintendent Kauvery Hospital Alwarpet 

Dr Singaravadivelu – Senior consultant Orthopaedic Surgery Kauvery Hospital Alwarpet

இது குறித்து ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் மூத்த தண்டுவட மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் பி. கீர்த்திவாசன் கூறுகையில், “எண்டோஸ்கோபிக் முறையானது தண்டுவட வட்டு விலகல் மற்றும் நரம்பு அழுத்தத்திற்கான சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் தண்டுவடத்தின் இயற்கையான நிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் வழியாக, விரிவான இணைவுக்கான தேவையை தவிர்க்க இது உதவக்கூடும். நோயாளியின் உடல்நிலை மற்றும் முழுமையான பரிசோதனைக்குப் பிறகே இச்சிகிச்சை யாருக்குப் பொருந்தும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. அனைத்து நோயாளிகளுக்கும் இம்முறை பொருந்தாது; கடுமையான தண்டுவடப் பிறழ்வுகளுக்கு வழக்கமான அறுவைசிகிச்சையே தேவைப்படும்,” என்றார். 

ஏற்கனவே தண்டுவட அறுவைசிகிச்சை (L4-L5) செய்திருந்த 56 வயதுப் பெண்மணிக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டபோது, எண்டோஸ்கோபிக் முறை மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இரத்த இழப்பு 50 மி.லிட்டருக்கும் குறைவாகவே இருந்தது. நோயாளி சிகிச்சைக்குப் பிறகு இரண்டு மணி நேரத்திலேயே நடக்கத் தொடங்கி, இரண்டே நாட்களில் வீடு திரும்பினார். கடுமையான கால் வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் ஒருவருக்குப் பெரிய அறுவைசிகிச்சை தவிர்க்கப்பட்டு, எண்டோஸ்கோபிக் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் விரைவாகக் குணமடைந்து தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பினார்.

மருத்துவர் பி. கீர்த்திவாசன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக எண்டோஸ்கோபிக் தண்டுவட அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார். இப்போது இந்த அதிநவீன சிகிச்சை முறையை இம்மையத்தில் அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். 

சென்னை, ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையின் முதுகுத்தண்டு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பாலமுரளி இது குறித்துக் கூறுகையில்: “இந்த நவீன மருத்துவ செயல்முறை உத்தி, எங்களின் விரிவான முதுகுத்தண்டு சிகிச்சைத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துகிறது. சிகிச்சைக்குப் பொருத்தமான நோயாளிகளை தேர்வு செய்வது, துல்லியமான திட்டமிடல் மற்றும் பல்வேறு மருத்துவத் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவையே சிகிச்சையின் சிறந்த பலன்களைத் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எண்டோஸ்கோபிக் ஃபியூஷன் அறுவை சிகிச்சை என்பது சிறிய அளவிலான கீறல்களை ஏற்படுத்துவது என்பதைத் தாண்டி, நோயாளியின் நிலைக்கேற்ப மிகச் சரியான சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பதாகும். இந்த நவீன உத்தியின் மூலம், சிகிச்சைக்கான வரம்பை மேலும் விரிவுபடுத்தி, நோயாளிகளின் தனிப்பட்ட தேவைக்கேற்ற சிறந்த மருத்துவத் தீர்வுகளை எங்களால் வழங்க முடிகிறது. குறிப்பாக, மிகவும் சிக்கலான மற்றும் மறுசீரமைப்பு தேவைப்படும் முதுகுத்தண்டு பாதிப்புகளில் இது சிறந்த பலனளிக்கும்,” என்று தெரிவித்தார்.

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும் செயல் இயக்குநருமான மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “அறுவைசிகிச்சையின் சிரமங்களையும், பக்கவிளைவுகளையும் குறைத்து, மருத்துவ நிபுணத்துவத்துடன் நவீன தொழில்நுட்பத்தை இணைத்து மக்களுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்கி குணம்பெறச் செய்வதே எங்களின் நோக்கம். எண்டோஸ்கோபிக் ஃபியூஷன் அறுவைசிகிச்சை உத்தியின் அறிமுகம், பொருத்தமான நோயாளிகளுக்கு குறைந்தபட்ச கீறல் மற்றும் வலியுடன் பாதுகாப்பான சிகிச்சையை வழங்கி விரைவாக குணமளிப்பதில் எங்களின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது,” என்று தெரிவித்தார்.