ஜல்லிக்கட்டு எப்படி வெறும் விளையாட்டாக மற்றும் இல்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகத் திகழ்கிறதோ, அப்படி கடற்கரையோர மீனவ கிராமங்களில் நடக்கும் படகுப் போட்டிகளின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தும் கதை.
அப்படி நடக்கும் போட்டிகளுக்குத் தலைமை தாங்கி நடத்தும் மண்டாடி வகையறாக்களின் அருமை.பெருமைகளையும் இதில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி.
ஹீரோவாக மாறியதில் இருந்து தான் ஒவ்வொரு படத்தையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சூரி, மிகுந்த அர்ப்பணிப்புடன் தேர்வு செய்து நடித்திருக்கும் படமும் கூட.
முத்துக்காளி என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சூரி, மாஸ் நாயகனுக்கான அத்தனை தகுதிகளும் தன்னிடம் இருக்கிறது என்பதை காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளிலும், ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் மிரட்டியிருக்கும் சூரி, பண்பட்ட நடிப்போடு, கடுமையான உழைப்பின் மூலமாகவும் வியக்க வைத்திருக்கிறார். அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன், அமைதியான காதல் காட்சிகள் மற்றும் கலங்கடிக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் என படம் முழுவதும் மண்டாடி என்ற கடலோடியாக வாழ்ந்திருக்கிறார்.
சூரிக்கு இணையான கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் சுஹாஸ், சாட்டப்புலி என்ற கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு. சூரியுடன் நட்பு பாராட்டும் போதும், பகைமையோடு வலம் வரும் போதும், மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்டியிருப்பவர், தன் பார்வைகளின் மூலமாகவே தன் பகை உணர்வை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மகிமா நம்பியார் அழுத்தமான கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டிருக்கிறார். காதலையும், காதல் முறிவையும் பெண்கள் எளிதாக கடந்துபோகும் மனநிலையை தனது நடிப்பில் நேர்த்தியாக பிரதிபலித்திருக்கிறார்.
மச்சமுனி என்ற கதாபாத்திரத்தில் மூத்த மண்டாடியாக நடித்திருக்கும் சத்யராஜ், மாஸான கதாபாத்திரத்தில் கிளாசாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.
மாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர், ஆரம்பக் காட்சியில் அதிரடியாக அறிமுகமாகி கவனம் ஈர்ப்பதோடு, தன் அம்மா தான் சூரியின் முன்னாள் காதலி என்று தெரிந்த பிறகு அவர் சூரியை எதிர்கொள்ளும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைத்தாலும், எதிர்பார்க்காத ஒரு விசயத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறும் தன் மனநிலையை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சூரியின் நண்பராக நடித்திருக்கும் பாலசரவணன், சாதாரண வசனங்களை கூட டைமிங்கோடு பேசி சிரிக்க வைக்கிறார். இறுக்கமான சூழல்களை தனது திரை இருப்பு மற்றும் வசன உச்சரிப்பால் இலகுவாக மாற்றியிருக்கும் பாலசரவணன் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி.
மகிமா நம்பியாரின் கணவராக நடித்திருக்கும் ரவீந்திர விஜய், சுஹாஸின் தந்தையாக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சிவா, சூரியின் நண்பராக நடித்திருக்கும் ராம்ஸ், சுஹாசின் மச்சானாக நடித்திருக்கும் பத்மன், ஆடுகளம் முருகதாஸ், சுஹாசின் மகனாக நடித்திருக்கும் கிரிஷ் ஹாசன் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
Related Posts
’இம்மார்டல்’ வெற்றி விழாவில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பழைய பைக்கை…
‘வைல்ட் தமிழ்நாடு (Wild Tamil Nadu)ஆவணப்படம் விமர்சனம்
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் கடல் பயணம் மற்றும் கதாபாத்திரங்களின் பயணம் இரண்டையும் காட்சிப்படுத்திய விதம் மிரட்டல். கடலில் நடக்கும் பாய்மரப் படகுப் பந்தயம் மற்றும் கரையில் நடக்கும் ஆக்ரோஷமான மோதல்கள் இரண்டையுமே மெய்சிலிரிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பாய்மரப் படகு பந்தயத்தை வெவ்வேறு விதமாக காட்சிப்படுத்தினாலும், அதில் இருக்கும் ஆபத்து, அந்த ஆபத்தையும் மீறிய வீரர்களின் சாகசங்களை நம் கண்முன் நிறுத்திய நடிகர்களின் உடல்மொழியை மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தி பந்தயத்தை நேரில் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் இருந்தாலும் மனதில் நிற்கவில்லை. இருந்தாலும், பந்தயக் காட்சிகளுக்கும், ஆக்ஷன் காட்சிகளுக்கும் பின்னணி இசை கூடுதல் பலம் சேர்த்திருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை வசனமே இல்லாத காட்சிகளில் கூட நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஈ.ராகவுக்கு விருது நிச்சயம். கதை சொல்லிய விதம், சண்டைக்காட்சிகளை தொகுத்த முறை மற்றும் பந்தயக் காட்சியை பயணிக்க வைத்த விதம் ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆரம்பக் காட்சியிலேயே பார்வையாளர்களின் கவனத்தை திரையின் பக்கம் ஈர்க்கும் விதமாக காட்சிகளை தொகுத்திருக்கும் ராகவ், இறுதி வரை திரைக்கதையை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் பயணிக்க வைத்திருக்கிறார்.
பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயண், மஹேஷ் மேத்யூ என்று மூன்று சண்டைப்பயிற்சியாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். மூவரது பணியும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பந்தயக் காட்சியை படமாக்கிய விதம் பிரமிக்க வைக்கிறது.
கலை இயக்குநர் டி.ஆர்.கே.கிரண், இயற்கை எது, செயற்கை எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு தனது பணியை செய்திருக்கிறார்.
அமீர் ஜமால் கான் மற்றும் மதிமாறன் புகழேந்தி ஆகியோரது வசனங்கள் எளிமையாக இருந்தாலும் கூர்மையாக இருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் மதிமாறன் புகழேந்தி, இதுவரை திரையில் சொல்லப்படாத மீனவர்களின் வாழ்வியலை, பிரமிக்க வைக்கும் காட்சி மொழியில் மிக சிறப்பாக சொல்லியிருக்கிறார். நாயகன் சூரியை மாஸாக காட்டினாலும், அவரை சுற்றி பயணிக்கும் கதாபாத்திரங்களும் பார்வையாளர்கள் மனதில் நிற்கும்படி காட்சிகளை வடிவமைத்திருப்பவர், சிறு சிறு கதாபாத்திரங்களை கூட கவனம் ஈர்க்கும்படி பயணிக்க வைத்திருக்கிறார்.