எம்ஜிஆர் காலத்து ரசிகர்களுக்கு இந்தத் தலைப்பு மிகவும் பரிச்சயம். அவர் நடித்த அந்தத் தலைப்பில் இப்போது சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் ஃபேமிலி ஆக்ஷன் டிராமா இது.
பூ ஒன்று புயலாகிப் பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த படத்தில் சமந்தா புயலாக இருந்து பூவாக மாற முயற்சிக்கிறார். அது முடிந்ததா என்பதுதான் கதை.
ஆயினும் அவர் புயலாக இருந்ததையெல்லாம் பின்னால்தான் சொல்கிறார்கள் படத்தொடக்கத்தில் தனது காதல் கணவருடன் கணவரது கிராமத்து வீட்டுக்கு வருகிறார் சமந்தா. காதல் திருமணம் என்பதால் மூன்று வருடங்களாக எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தவர்கள் இப்போது சமந்தா கணவரின் தங்கை திருமண நிமித்தம் இப்போது வருகிறார்கள்.
ஏற்கனவே தங்கள் மீது கோபமாக இருக்கும் கணவரின் பெரிய குடும்பத்து உறுப்பினர்கள் இப்போது தன்னை எப்படி நடத்துவார்களோ என்ற பதட்டத்துடன் வரும் சமந்தா… ஆனாலும் அவர்களிடம் நல்ல பெயர் எடுத்தே தீருவது என்ற தீர்மானத்தில் வருகிறார்.
இதற்கிடையில் ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இயக்கத்தின் தலைவன் சிறையில் கைதியாக இருந்து கொண்டு சமந்தாவைத் தேடிக் கொண்டிருக்கிறான். இப்போது அந்த கிராமத்துக்கு சமந்தா வந்திருக்கும் தகவல் கிடைத்ததும் சமந்தாவை கண்டுபிடித்து விட்ட சந்தோஷத்தில் சிறையில் இருந்து தப்பி வருகிறான்.
இந்த இரண்டு விஷயங்களும் ஒன்று சேரும் இடத்தில் ஒற்றைப் பெண்ணாக சமந்தா இவற்றையெல்லாம் எப்படி சமாளித்தார் என்பதுதான் மீதிக் கதை.
அமைதியாக அறிமுகமாகும் சமந்தாவுக்கு இப்படி ஒரு மிரள வைக்கும் ஃப்ளாஷ் பேக் இருப்பது ஆச்சரியத்தை தருகிறது.
துளசி செடி போல அழகாக குடும்பத்துக்கு அறிமுகமாகி அவர்களிடம் நல்ல பெயர் எடுக்கும் சமந்தா, தன் பழைய வாழ்க்கைக்குள் செல்ல நேரிட்டதும் நடை, உடல் மொழி, பாவனை என்று எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு மிடுக்கோடு நடை போடுவது அற்புதம்.
கிளைமாக்ஸ்-இல் ஒற்றை பெண்ணாக அத்தனை பெரிய ரவுடி கும்பலை எதிர்த்து அவர் சண்டை போடுவது எல்லா ஹீரோக்களுக்கும் சவால் விடுவது போல இருக்கிறது.
அவரது கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலேவை விட, அந்த தீவிரவாத இயக்கத் தலைவன் குல்ஷன் தேவய்யாவுடன்தான் சமந்தாவின் கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
சமந்தாவின் மாமியாராக கெளதமி…(காலம் தான் இவ்வளவு வேகமாக ஓடுகிறது..?)
இவர்களுடன் மாமனாராக நடித்திருக்கும் ஆனந்த், பாட்டியாக நடித்திருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி, தோழியாக நடித்திருக்கும் மன்ஜூஷா, கொழுந்தனாக நடித்திருக்கும் சைதன்ய கிருஷ்ணா, கணவரின் தம்பி மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீமுகி உள்ளிட்டோர் அந்த குடும்பத்து உறுப்பினர்களாக பொருந்திப் போயிருக்கிறார்கள்.
சமந்தாவுக்கு அடுத்த படி வில்லனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யாதான் மனதில் பதிகிறார். கொஞ்சம் பிரகாஷ்ராஜ் கொஞ்சம் சம்பத் இவர்களின் கலவையாக வரும் அவர் இனிவரும் படங்களிலும் வில்லனாக மிரட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டப்படுத்தி இருக்கிறது. அன்புமயமான குடும்பத்தையும், வன்ம மயமான போராட்ட களத்தையும் மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார் அவர்.
சந்தோஷ் நாராயணனின் இசைதான் படத்துக்கு ஹைலைட். அவரது சிக்னேச்சர் ஆக பாடல்களில் தனித்துவம் தெரிகிறது. அதேபோல் ஆங்கில படங்களுக்கு சவால் விடும் விதமாக அமைந்த பின்னணி இசையும் அட்டகாசம்.
ராஜ் நிடிமொரு, வசந்த் மரிம்கண்டியின் கதைக்கு ராஜ் நிடிமொரு திரைக்கதை அமைத்திருக்க இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி இதை எல்லா கிளாஸ் மக்களும் விரும்பும் விதத்தில் ஒரு ஜனரஞ்சக படமாகக் கொடுத்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதியை குடும்பங்கள் கொண்டாடும் கதையாக கலகலப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி, இரண்டாம் பாதியில் கலவர பூமியை களேபரத்துடன் கையாண்டு கிளைமாக்ஸ் இல் இரண்டையும் இணைத்து ஒரு முடிவு சொல்வது ‘நச்..!’
எங்கள் தங்கம் – 916 ஹால்மார்க் கோல்ட்..!
– வேணுஜி