July 14, 2026
  • July 14, 2026
Breaking News
June 19, 2026

பாலன் தி பாய் திரைப்பட விமர்சனம்

By 0 163 Views

ஒரு கயவனால் வஞ்சிக்கப்பட்ட அபலையான பர்சானா பலதிங்கள், அவனால் வயிற்றில் ஒரு குழந்தையை சுமந்த நிலையில் அவனைக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகிறாள். 

அங்கேயே பல வருடங்களைக் கழித்து சிறுவனான தன் மகனுடன் சிறையிலிருந்து வெளியே வரும் அவர். சமுதாயத்தில் யார் மீதும் நம்பிக்கை வைக்க முடியாமல் பல இடங்களில் பலவிதமான அடையாத்தோடு அலைகிறார்.

காரணம் தான் மகன் வஞ்சகனாகவோ, வஞ்சிக்கப்பட்டோ வாழக் கூடாது என்பதால்தான்.

மாறி மாறி ஓடும் வாழ்க்கைப் பாதையில் தனிமையில் வாழும் ஒரு மூதாட்டியை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கிடைக்க, ஒரு கட்டத்தில் அங்கேயே வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்து, மகனையும் பள்ளியில் சேர்க்கிறார்.

பள்ளி முடிந்து வரும் மகனை எப்போதும் அழைத்து வரும் அவர், மகனுக்கு ஒரு கட்டளை இடுகிறார். எவ்வளவு நேரம் ஆனாலும் தான் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் அது.

அப்படி ஒருநாள் அவன் காத்திருக்க, பர்சானா வரவில்லை. சிறுவனை போலீஸ் மீட்டுக் கொண்டுபோக, தாயும், மகனும் மீண்டும் இணைந்தார்களா என்பதுதான் மீதிக் கதை.

உண்மையிலேயே சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்ட பெண் கூட பர்சானாவின் உணர்வுகளோடு வாழ்திருப்பாளா தெரியாது. அத்தனை உணர்வு பூர்வமான அற்புத நடிப்பு. அந்தக் கண்களில் நம்பிக்கை இன்மையும், எந்நேரமும் குற்ற எண்ணமுமாக வளைய வருகிறார்.

அவரது மகனாக வரும் சிறுவன் ஆதிசேஷன் நெஞ்சை அள்ளுகிறான். வேறு வேறு அடையாளங்களை மாற்றிக் கொள்ளும்போது “அடுத்த கதை என்னம்மா..?” என்று பர்சானாவிடம் அவன் கேட்பது அழகு மற்றும் நெகிழ்ச்சி.

வளர்ந்த பதின்வயது சிறுவனாக வரும் ஜினள் நடிப்பும் நன்று. 

குயுக்தியுடன் அலையும் போலீஸ் அதிகாரி ஜீன் பால் லாலின் வில்லத்தனம் பயமுறுத்துகிறது.

எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக பாதிப்படத்துக்கு மேல் உள்ளே வருகிறார் டொவினோ தாமஸ். கொஞ்சநேரம் கழித்துதான் அவரை அடையாளமே தெரிகிறது. அத்தனை அருமையான ஒப்பனை, நடிப்பு.

சுஷின் ஷியாமின் இசையும், ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவும் கைகோர்த்து படத்தின் நேர்த்தியை உறுதி செய்கிறது.

படத்தின் ஒரே குறை முதல் பாதியில் குறையின்றி செல்லும் திரைக்கதை பின் பாதியில் சற்றே லாஜிக்குகள் இன்றி தடுமாறுகிறது.

அதைச் சரியாகக் கையாண்டிருந்தால் முழுமையான திருப்தி கிடைத்திருக்கும்.

இருந்தாலும் வித்தியாசமான கதைக்களத்தில் ஒரு வாழ்க்கை அனுபவம்.

– வேணுஜி