September 23, 2026
  • September 23, 2026
Breaking News
September 23, 2026

தி கிராண்ட் மாஸ்டர் திரைப்பட விமர்சனம்

By 0 8 Views

இப்படிப் பிறந்தவன் இந்தத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் – இதெல்லாம் செய்யக்கூடாது என்கிற சனாதன நெருக்கடியைத் தாண்டி சாதித்த ஒரு சிறுவனின் கதை.

அதற்குத் துணையாகவும், தூணாகவும் இருந்த அவனது அம்மாவின் போராட்டம்தான் படத்தின் அடி நாதம்.

கணவன் இல்லாமல் வாழ்ந்து வரும் அபர்ணதி, தன் மகனை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்கிற ஒரே சிந்தனையுடன் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கிறார். 

ஆனால் அவரது மகனுக்கோ சதுரங்கத்தில் சாம்பியனாக வேண்டும் என்கிற ஆவல் உள்ளூர இருக்கிறது. அந்த ஆசைக்கு உரம் போட்டுக் கொண்டிருக்கிறார் குப்பை மேட்டில் வாழ்ந்து வரும் பித்தனைப் போன்ற ஒரு ஞானி.

ஆனால் அவருடன் தன் மகனை சேரவிடாமல் தடுக்கும் அபர்ணதி, அவனைப் படிப்பில் கவனம் வைக்கச் சொல்கிறார். ஆனால் பள்ளிக்குச் சென்றாலும் துரத்தும் சாதீயக் கொடுமை அவனைப் படிக்க விடாமல் செய்கிறது. எனவே சதுரங்க விளையாட்டில் முன்னேறினால் தனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பும் சிறுவன் அதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறுகிறான். 

இந்தச் செயலால் அதிர்ச்சி அடைந்த அபர்ணதி அவன் ஆசைப்படியே சதுரங்க விளையாட்டில் பயிற்சி பெற வைக்க முயல்கிறார். ஆனால் அங்கேயும் சாதீயக் கொடுமை அவர்களைத் தள்ளி வைக்க… அது முடியாமல் போகிறது. 

ஏற்கனவே ஆதிக்க சாதியினரால் தன் கணவனைப் பறிகொடுத்து தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அபர்ணதியால் இந்த சாதீய சமூக அமைப்பில் தனியே நின்று போராடித் தன் மகனை சாம்பியனாக்க முடிந்ததா, அதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்ன என்பதெல்லாம் மீதிக் கதை.

இந்தியாவில் எத்தனை விருதுகள் இருக்கின்றனவோ அவை எல்லாவற்றுக்கும் தகுதியானவர்தான் அபர்ணதி. 

துப்புரவுத் தொழிலாளியாகவும் தாழ்த்தப்பட்டவராகவும் தன் உடலையும் நடிப்பையும் இந்த அளவுக்கு வருத்தி மாற்றிக் கொள்ள இன்னொரு நடிகையால் முடியுமா என்று தெரியவில்லை. 

இதுபோன்ற பாத்திரங்களில் நம் மனதை கடந்த காலத்தில் கவர்ந்த ஷோபா போன்று இந்தக் காலத்தில் அபர்ணதி இருக்கிறார். ஆனால் ஷோபாவுக்கு அப்பாவியான முகம். இவருக்கோ எத்தனை பேர் எதிர்த்து வந்தாலும் அவர்களைக் கண்களால் எரித்து விடும் வீரியம். 

தன் மகனைக் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து வெளியேற்றிய ஆசிரியரை பிடி பிடி என்று பிடிக்கும் போதும், மலையளவு பலமும் அந்தஸ்தும் கொண்ட சுரேஷ் மேனனை சவாலுக்கு இழுத்து அவரை குப்பத்தில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்ய வைக்கும் போதும் பெண் புலியாக கர்ஜிக்கிறார் அபர்ணதி.

தமிழ்ப் பட உலகம் கொண்டாடித் தீர்க்க வேண்டிய ஒரு நடிகை என்றால் அது அபர்ணதிதான்.

அவரது மகனாக வரும் சிறுவன் அஸ்வின் நடிப்பும் அபாரமாக இருக்கிறது. அம்மாவின் சீற்றம் சற்றும் குறையாமல் தன்னுடைய வயதுக்கு மீறியும் தன்னை எதிர்த்தவர்களுக்கு வார்த்தையாலே பதில் சொல்லும் துடிப்பில் மிளிர்கிறான்.

அபர்ணதியின் கணவராக வரும் லிங்கேசும் அவரைப் போலவே நடிப்புக்காகத் தன்னை அர்ப்பணிக்கக் கூடியவர் என்பது இந்தப் படத்தின் மூலமும் இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாய் தண்ணீர் கிடைக்காமல் அவர் தவிக்கும் தவிப்பு நம் இதயத்தைப் பிசைகிறது.

ஆதிக்க வர்க்கத்தின் அடையாளமாக வரும் சுரேஷ் மேனனின் மிடுக்கும் நடிப்பும் அபாரம். என்னதான் படப்பிடிப்புக்காக என்றாலும் சாக்கடையை சுத்தம் செய்யும் காட்சியில் அவர் உண்மையிலேயே சாக்கடைக்குள் இறங்கி நடித்திருப்பது பாராட்டத்தக்கது.

அபர்ணதிக்கு இருக்கும் ஒரே ஆதரவான தோழி தமிழரசியும் கவனிக்க வைக்கிறார். அஸ்வினுக்கு மாற்றான் தாயாக அவர் வரும் காட்சிகள் எல்லாம் தமிழ் சினிமாவுக்கு புதிது.

குடிசைப் பகுதியையும் குப்பை மேட்டையும், அங்கு வாழும் மக்களின் அழுக்குத் தோய்ந்த வாழ்க்கையையும் அதன் இயல்பு மாறாமல் ஒளிப்பதிவில் கொணர்ந்திருக்கிறார்கள் அர்ஜுன் ரவி, ஞானசேகர் ஆர் எஸ்.

தினேஷ் ஆண்டனியின் இசையும் படத்துடன் பக்காவாக பொருந்துகிறது. 

படத்தை எழுதி இயக்கி இருக்கும் வெற்றி செழியன், உரையாடல்களை எழுதுகோலில் எழுதினாரா அல்லது கத்தியைக் கொண்டு எழுதினாரா என்று தெரியவில்லை… அவ்வளவு கூர்மை.

“ஓடுபவனுக்கு பல வழிகள்… ஆனால் துரத்துபவனுக்கு ஒரே வழிதான். இதைப் புரிந்து கொண்டு நீ ஓடு..!” என்று தன் மகனுக்கு அபர்ணதி கூறும் அறிவுரை அவரது தேர்ந்த உரையாடலுக்கு சான்று.

அதேபோல் படம் முடிந்ததும் உண்மையான துப்புரவுத் தொழிலாளிகளை பேட்டியாக எடுத்து இணைத்திருப்பது நம் கண்களைக் குளமாக்குகிறது.

ஆதிக்க சாதியினர் ஆக்கிரமித்திருந்த எல்லா போட்டிகளிலும் தாழ்த்தப்பட்டவர்களும் முன்னேறி களம் கண்டிருக்கும் இன்றைய சூழலில் சதுரங்க விளையாட்டில் மட்டும் அப்படி ஒரு திருப்பம் நிகழ்ந்ததாகப் பதிவில்லை.

ஆனால் அது நிகழ்ந்தே தீரும் என்பதற்கான நல்ல நம்பிக்கையை இந்த படம் ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுகளை குறிக்கும் தரத்துடன் இருக்கிறது என்பது மட்டுமின்றி திரையரங்குகளில் காணும் போதும் பரபரப்பு குறையாத படமாக இது அமைந்திருக்கிறது. 

அதிலும் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க, வில்லன் சுரேஷ் மேனனின் பிடி இறுக இறுக, அவர் கண்களில் மண்ணைத் தூவி அபர்ணதி ஆடும் ஆட்டம் ஒரு நல்ல ஆக்சன் படத்துக்குச் சமம்.

தி கிராண்ட் மாஸ்டர் – ஒரிஜினல் சதுரங்க வேட்டை..!

– வேணுஜி