October 22, 2026
  • October 22, 2026
Breaking News
September 24, 2026

லெனின் பாண்டியன் திரைப்பட விமர்சனம்

By 0 70 Views

ஒரு இடைவெளிக்குப்பின் வந்திருக்கும் மண் மனம் மாறாத ஒரு நெகிழ்ச்சிப் படைப்பு.

மதுரைக்குப் பக்கமிருக்கும் ஒரு கிராமத்தில் ஆறு வறண்டு மணல் மேடுகளாக நிற்க, மணல் கொள்ளையர்கள் அங்கிருக்கும் நிலங்களை ஆக்கிரமித்து மணலைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதைப் பற்றி விவசாயி கங்கை அமரன் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிய ஆர்டிஓவையும் மணல் மாபியாக்கள் கொன்றுவடுகிறார்கள்.

நியாயம் கேட்க போலீஸ் ஸ்டேஷன் போன அமரனை அடித்து நொறுக்குகிறார் மாபியாக்களின் கையாளான போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட்.

இன்னொரு பக்கம் புதிதாக போலீஸ் வேலையில் சேர்ந்த அப்பாவி நாயகன் தர்ஷனை அவரது மேலதிகாரிகள் கேவலமாக நடத்துகிறார்கள்.

இந்நிலையில் தன் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி நீதிமன்றம் போகும் கங்கை அமரனுக்கு நீதியரசர் மரியம் ஜார்ஜ் மூலமாக போலீஸ் காவல் போடப்படுகிறது. அந்தக்.காவல் போலீஸாக தர்ஷன் நியமிக்கப்படுகிறார்.

குழந்தை இல்லாத தம்பதிகள் அமரனும், அவர் மனைவி ரோஜாவும் தர்ஷன் மீது சொந்தப் பிள்ளை போல் பாசம் காட்டி அவரது காதலுக்கு உதவியும் செய்கிறார்கள்.

இதற்கிடையில் மாபியாக்களான ஆடுகளம் நரேன் மற்றும் அவரது தம்பி யுகேந்திரன் உள்ளிட்ட வில்லன் கோஷ்டி அமரனைப் போட்டுத்தள்ள சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல் தர்ஷனுக்கு ஒரு சொந்த.வாழ்க்கை சிக்கல் வர, இவற்றின் முடிவு என்ன ஆனது.என்பது மீதிக் கதை.

அப்பாவி முதியவர் வேடத்துக்கு கங்கை அமரன் மெத்த பொருத்தமாக இருக்கிறார். தான் வளர்த்த ஆடு இறப்புக்கு நியாயம் கேட்கபோய் பின்னர் ஒரு சமூக போராளியாக உருவாக்கப்படும் அவர் பாத்திரம் படத்தைதத் தொய்வு இல்லாமல் கொண்டு செல்கிறது.

அவர் சொல்லும் தன் கதை சுருக்கம் அற்புதம். அவர் விரும்பி உண்ண ஆசைப்படும் முட்டை காளான் உணவு அவருக்கு வாய்க்காமல் போவது பரிதாபம்.

கங்கை அமரனின் ஏமாளித்தனத்திற்கு இப்படி ஒரு ஜோடி இருந்தால்தான் அவரால் வாழ முடியும் என்ற அளவில் அவருக்கு வாராது வந்து வாய்த்த ஜோடியாக நடித்திருக்கும் ரோஜா, சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்.

அன்னை இல்லத்தில் இருந்து அறிமுகமாகி இருக்கும்  இன்னொரு நாயகன் தர்ஷன் கணேசன், ஆரம்பத்தில் தன் பொறுப்பு எதுவென்றே தெரியாமல் இருந்து போகப்போக சூழ்நிலைகள் புரிந்து வெகுண்டு எழுவது வரை மிகச் சரியாக பயணித்து இருக்கிறார்.

நீதிபதியாக வரும் ஜார்ஜ் மரியான் தோன்றும் எல்லா காட்சிகளும் சரி அவர் பேசும் வசனங்களும் சரி அற்புதமாக அமைந்திருக்கின்றன. அந்தக் காட்சிகளில் எல்லாம் தியேட்டர் கலகலக்கிறது.

இவர்களுடன் நடித்திருக்கும் போஸ் வெங்கட், யுகேந்திரன், அர்ச்சனா, ஆடுகளம் நரேன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஒரு கிராமத்தின் வறட்சியை கூட அழகியல் மாறாமல் அற்புதமாக திரையில் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே.

இளையராஜாவின் இசையும். மண் மணம் மாறாத படங்களும் தேனும் திணை மாவும் போல. இசைஞானியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் யானை பலம் கொடுத்திருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன், தன் கதைக்குப் பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுத்ததிலேயே பாஸ்மார்க் பெற்று விடுகிறார். 

அதைத் தாண்டி அவர்களிடம் அற்புதமான நடிப்பை வாங்குவதில் அசாத்திய திறமை காட்டி முதல் மதிப்பெண்ணே பெற்றுவிடுகிறார்.

ஆனாலும் முதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பின்னர் கிளைமாக்ஸ் வரும்போது வேகம் எடுத்து விடுகிறது.

அதேபோல் படத்தில் துப்பாக்கி அதிகபட்ச இடங்களில் வெடிக்கிறது. பல உயிர்களையும் குடிக்கிறது. 

அது குறித்த துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுத்ததாக படத்தில் காட்சிகள் இல்லை. 

இப்படிப்பட்ட லாஜிக் குற்றங்களை மீறி படத்தில் பேசப்படும் மனிதம் நம்மை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி விடுகிறது.

லெனின் பாண்டியன் – நீதியின் கார்டியன்..!

– வேணுஜி