தலைப்பைப் பார்த்துவிட்டு கிளுகிளுப்பான படம் என்று வரும் சபலிஸ்டுகள் நிச்சயம் ஏமாற மாட்டார்கள். ஆனால், அவர்களை உள்ளுக்கிழுத்து திருத்துவது… அல்லது அந்த செய்கை தவறு என்று உணரவைப்பதுதான் படத்தின் ‘நல்ல’ நோக்கம்.
அந்த வகையில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சஜோ சுந்தரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
அடுத்தவரின் அந்தரங்கத்தைப் பார்க்கும் ஆவல்தான் சபலப்படுபவர்களை இப்படித் தவறு செய்ய வைக்கின்றது. தாழ்ப்பாள் ஓட்டைக்குள் எட்டிப் பார்க்கும் நிலையிலிருந்து முன்னேறி (!) இன்றைய டிஜிட்டல் உலகம் அடுத்தவர் அந்தரங்கத்தை அவர்கள் அறியாமலேயே கடத்தி உலகின் உள்ளங்கைக்குள் கொண்டு சேர்த்து விடுகிறது.
அப்படி மனைவியை செல்போனில் படம் பிடித்து ரசிப்பது கணவனானாலும் சரி…. அடுத்த பெண்களை ஆடையின்றி ரசிக்கும் ஆண்மகனானாலும் சரி அது அவர்களுக்கே எமனாக எப்படி வந்து சேர்கிறது என்பதை உறுத்தாத பாடமாகத் தந்திருக்கிறார் இயக்குநர்.
அது மட்டுமல்லாமல் அடுத்த வீட்டுப் பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் லட்சக்கணக்கில் பணம் கொழிக்கும் ஒரு அன்டர்கிரவுண்ட் தொழிலாகவும் இருப்பதைப் பார்க்கும்போது அதிர்ச்சியளிக்கிறது.
படத்தில் முன்னணிக் கதாநாயகன் இல்லை, கதாநாயகிகள் இல்லை. நடித்திருப்பவர்களைப் பாராட்ட அவர்களின் பெயர்ப்பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அப்படி அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் அனைவருமே தேவைக்கானதைத் தந்திருக்கிறார்கள்.
அதிலும் ஆஹிருதி சிங், ரியாமிக்காவின் துணியின்றி நடித்த துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும். படத்தைப் பரபரப்பாக வைத்திருக்கிறது திரைக்கதை. ஒளிப்பதிவும், இசையும் தேவைக்கேற்றபடி பயணித்திருக்கின்றன.
பாலியல் வீடியோ பார்க்கும் வழக்கமுள்ள அரசியல் தலைவர் அதில் தன் மகளையே காண நேர்ந்த அவலத்தில் கட்சியின் நிலையைக் காரணம் காட்டிக் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வது பரிதாபம்.
அதேபோல் இப்படி ஆபாச வீடியோவில் சிக்கி சீரழிந்த நாயகி, கிளைமாக்ஸில் இன்னொருவர் வாழ்க்கை தர முன்வந்தபோதும் ஏற்காமல் “நல்லவேளை… எனக்குக் குழந்தையில்லை. இருந்திருந்தால அதன் வாழ்வும் அவமானப்பட்டிருக்கும்..!” என்பதும் உருக்கம்.
எக்ஸ் வீடியோஸ் – பாராட்ட வேண்டிய பாலியல் கல்வி..!