அகிலன் கண்ணன் அவர்கள் சித்திரப் பாவை பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். அதைப் படித்ததும் என் கதை திருடப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. அதுவும் எப்பேர்ப்பட்ட கதை. இன்னும் கூட அனைவராலும் பாராட்டப் படும் கதை. படித்தவர்களால் மறக்க முடியாத கதை.
” தரையில் இறங்கும் விமானங்கள்.”
இதைப் போய் திருடி இருக்கிறார்கள். அதுவும் நான் மிகவும் மதிக்கும் அஜீத் அவர்கள் நடித்த படம்.
” முகவரி ”
என்ற பெயரில் படமாகியிருந்தது.
பின்னால் அஜீத்தின் சொந்தப் படம் என்று கூட சொன்னார்கள்.
கதை டிஸ்கஷன் போதே கையில் தரையில் இறங்கும் விமானங்கள் புத்தகத்தை வைத்துக் கொண்டே டிஸ்கஸ் பண்ணுகிறார்கள் மேடம்.உடனே எதாவது செய்யுங்கள் என்றார் பூபதி பாண்டியன்.
நிச்சயமாக அஜித் தரையில் இறங்கும் விமானங்கள் படித்திருக்க மாட்டார். ஆனால் கதை விவாதத்தில் உட்கார்ந்த இயக்குனர், உதவி இயக்குனர் மற்றவர்கள்…?
அதுவும் மிகப் பிரபலமான அந்தக் கதையைத் திருடுகிற குற்ற உணர்ச்சி கூடவா இருக்காது. தெரிந்து விடும் என்பது தெரியாதவர்களா அவர்கள்..?
குறைந்த பட்சம் இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்களை தழுவி எடுக்கப்பட்டது என்று டைட்டிலில் கார்டாவது போட்டிருக்கலாம். போட்டிருக்க வேண்டும்.அனுமதிதான் பெறவில்லை.இதைச் செய்கிற மனசு கூட இல்லையே என்கிற ஆதங்கம் இன்று வரை எனக்கு உண்டு.
பூபதி பாண்டியன் தவிர நிறைய பிரபல இயக்குனர்களும் கூட சொன்னார்கள். ஆனால் இந்த சினிமாக் காரர்கள் கூட யார் மாரடிக்க முடியும்? யாரால் கோர்ட் கேஸ் என்று அலைய முடியும்? விட்டு விட்டேன்.
இப்போதும் கூட அஜித் அவர்கள் கண்டு கொள்ளலாம். அல்லது பாரதி ராஜா அடிக்கடி சொல்வது போல் அரிதாரம் பூசுபவன் எவன் நல்லவன் என விட்டும் விடலாம்.