அஜித் ‘நடிப்பில்’ இப்படி ஒரு படம் பார்த்து நாளாகிறது – சென்டிமென்ட் அளவில்… ஒரு பாசக்காரத் தந்தையாக அவர் வரும் இந்தப் படம் அவர் கரியரிலேயே புதுசு.
இதற்கு முன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவர் இதேபோல் ஒரு பெண் குழந்தைக்குத தந்தையாக நடித்திருந்தாலும் அது சொன்ன செய்தி வேறு. ஒரு அப்பாவாக ஒரு பெண்குழந்தையின் அன்புக்கு ஏங்கும் இந்தப் பாசப்படைப்பு அஜித் ரசிகர்களைத் தாண்டி பொதுவான குடும்ப உறுப்பினர்களைக் குறிவைத்து சென்று சேரும்.
ஊர்த்திருவிழாவில் தொடங்கும் படத்தில் அஜித் இருக்கும் ஊரே அவருக்கு உறவுகளாக இருந்தும் திருமணமான அவர் தனித்து வாழ்வதாக ஆரம்பிக்கிறார்கள். ஒரே வரியில் சொல்வதானால் மீண்டும் அவர் தன் மனைவியிடமும் பாசம் காட்டிய குழந்தையிடமும் சேர்ந்தாரா என்பதுதான் கதை. அதை காதல், வீரம், சென்டிமென்ட், ஆக்ஷன் எல்லாமும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிவா.
வீரம் படத்தில் அஜித் ஏற்ற இறுகிய வேடத்தை கொஞ்சம் சென்டிமென்ட் கொண்டு இளக்கினால் அதுதான் இதில் அவர் ஏற்றிருக்கும் ‘தூக்கு துரை’ வேடம். அந்தத் தும்பைப் பூ வேட்டி, சட்டையை விட அவரது இளகிய மனதும் அத்தனைத் தூய்மையாக இருக்கிறது. சாராயம் காய்ச்சுபவர்களைத் துவைத்து எடுக்கையில், தான் சாராயம் குடிக்காத ஊரில் யாரும் சாராயம் குடிக்கக் கூடாது என்று அவர் அதற்கு விளக்கம் சொல்வது ‘லந்து’.
ஊருக்குள் போலீஸே எதிர்க்காத அவரை மெடிக்கல் கேம்ப் நடத்த வந்த நயன் தாரா எதிர்த்து போலீஸில் புகார் கொடுத்த துணிவைப் பாராட்டி, அதற்காக லாக்கப்புக்குள் தானே சென்று பூட்டிக் கொள்வதும், அவருக்கு ஒத்தாசையாக ஊரும் உறவும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் டேரா அடிப்பதும் ‘லக லக.’
அந்த ஊடலே நயன்தாராவுடனான காதலுக்குக் காரணமாகி ஒரு பெண் குழந்தையைக் கொடுக்க, அவரது வீரமே அந்தக் காதல் வாழ்க்கைக்கு வில்லனாகி இருவரையும் பிரித்து வைக்கிறது.
மும்பையில் தொடரும் பின்பாதியில் பெற்ற மகளுக்கே பாதுகாவலராகச் சேர்ந்து அவளுடன் கழிக்கும் பொழுதுகளை இனிமையாக்கிக் கொள்ளும் அவர், மகளின் ஆசைக்கனவுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி அவளுக்குத் தன் மேலிருந்த தவறான தோற்றத்தைப் போக்குவது அழகு. அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் யாரிடமும் அடிவாங்காத அவர் மகளுக்காக வில்லன் ஜெகபதிபாபுவிடம் அடி வாங்கிச் சரிவது ரொம்பவே புதியது.
முதல் முறையாக இதில் அஜித் மதுரைத் தமிழ் மணக்கப் பேசி வருவது ரசிக்க வைக்கிறது. எவருக்கும் அஞ்சாத அவர் மனைவியிடம் கொண்ட காதலுக்காகவும், மகளின் நல்வாழ்வுக்காகவும் மனைவி இடும் அத்தனைக் கட்டளைகளுக்கும் பணிவதும், அதன் உச்சக்கட்டமாக எதிரியிடம் அடி வாங்கிச் சரிவதும் மகளை அவள் நோக்கத்தில் வெல்ல உந்து சக்தியாக இருப்பதும் அவர் நடிப்பில் கண்ணீர் வரவழைக்கும் கட்டங்கள்.
மகளிடம் “இன்னொரு முறை அப்பான்னு கூப்பிடு..!” என்று அவர் மருகும் இடங்கள் நம்மை உருக வைப்பவை. அதற்காகப் படம் முழுவதும் அழுகாச்சியாக இருக்குமோ என்று பயந்துவிட வேண்டாம்.
அஜித்தின் ஃபைவரிட் பைக் ஆக்ஷன், அதிரடி சண்டைக் காட்சிகள் மகளின் மனதைப் பாதித்து விடக்கூடாதென்று அவளிடம் சிரித்து பேசிக்கொண்டே சண்டையிடுவது, ஒரு சென்டிமென்ட் கதையில் காட்சிக்குக் காட்சி பிரமாண்டம் என்று அழகியலிலும் மின்னுகிறது படம்.
தனி ஆவர்த்தனமாகக் கடந்த படங்களில் நடித்து வந்த நயன்தாராவுக்கு ஹீரோவுடன் நடிக்க நேர்ந்த் இந்த வேடம் மிகப் பொருத்தமானது. அஜித்தையே தன் கட்டளையில் பணிய வைக்க நயன்ஸை விட்டாலும் ஆளில்லை. அஜித்தும், நயன்தாராவும் வரும் காட்சிகள் ‘ஸ்டார் வேல்யூ’ என்றால் என்ன என்பதை உணர வைக்கின்றன. ஆனாலும் மகளைப் பார்த்துக்கொள்ள தன் கணவனையே அப்பாய்ண்ட் செய்துவிட்டு அதற்கு “எவ்வளவு சம்பளம் வேண்டும்..?” என்பது ‘டூ மச்..!’
அவர்களது மகளாக வரும் அனிகாவின் நடிப்பும் நன்று. “அங்கிள்…” என்று கூப்பிட்டு அஜித்துடன் பழகினாலும் “அவர் கூட இருக்கும்போது ஏதோ ஒரு ஃபீலிங் வருதும்மா…” என்று நெகிழும்போதும், தனக்காக அஜித் அடி வாங்குகையில், “யார்ம்மா இவர்… எனக்காக உயிரைக் கொடுக்கிறார்..?” என்று நயன்தாராவிடம் கேட்டு அவர்தான் தன் தந்தை என உணர்கையில் உணர்ச்சி பொங்க “அப்பா..!” என்று பொங்கும்போது கண்கள் ஓரத்தில் கண்ணீர் துளிர்க்காதவர்கள் கல் நெஞ்சுக்காரர்கள். வெல்டன் அனிகா..!
நம்பர் ஒன்னாக இல்லாவிட்டால் பெற்ற மகளைக் கூட ஏற்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் ஜெகபதி பாபு அதற்காக எந்த எல்லைக்கும் செல்வது மகா வில்லத்தனம். அதற்காக ஒரு டீன் ஏஜ் குழந்தையைக் கொல்ல அத்தனை பயங்கரமான ஆயுதங்களை வைத்து ஆட்களை ஏவ வேண்டுமா என்பது மட்டும் அந்த ஏரியாவில் எழும் கேள்வி.
கடைசியில் அவரும் தன் மகள் நிலை கண்டு வருந்துவதும், அஜித்தின் பாசத்திலும், வளர்ப்பிலும் திருந்துவதும் ‘சினிமா க்ளிஷே’ என்றாலும் நல்ல செய்தி. நம் கனவுகளைக் குழந்தைகள் மீது திணிக்கக் கூடாதென்று அஜித் சொல்வதுதான் படத்தின் ஒட்டுமொத்த செய்தி. அதேபோல் கணவனைக் கொஞ்சமாவது மதிக்க வேண்டும் என்பதும் நயன்தாராவிடம் சொல்லாவிட்டாலும் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி.
தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு இருப்பதால் முன்பாதி கலகலக்கிறது. இரண்டாம் பாதியில் விவேக் வந்து நம்மை உற்சாகமாக இருக்க உதவுகிறார். நயன்தாராவுக்கும், அஜித்துக்கும் என்ன உறவு என்று அவர் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பதை ரசிக்கலாம். இருந்தும் ஒரு கட்டத்தில் சட்டென்று காணாமல் போய்விடுகிறார் அவர்.
வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவைக் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். படம் தொடங்குகையில் தமிழ்நாட்டில் இன்னும் மிச்சமிருக்கும் விவசாய நிலங்களை அவர் கேமராவின் வழியே பார்க்கும்போது மனது குளிர்கிறது. அதேபோல் இரண்டாம் பாதியில் அவர் காட்டும் மும்பையின் பகட்டு வாழ்வும் கூட மின்னுகிறது.
இமானின் இசையமைப்பில் ‘கண்ணான கண்ணே….’ பாடல் சித் ஸ்ரீராமின் குரலில் தியேட்டரை விட்டு வந்து பலமணிநேரமாகியும் காதுகளிலிருந்து வெளியேற மறுக்கிறது. ‘அடிச்சுத் தூக்கு…’ வழக்கமான ஹீரோ ஒர்ஷிப் பாடல். பின்னணி இசையிலும் கவனிக்க வைக்கிறார் இமான். கிளமாக்ஸ் நெகிழ்ச்சிக்கு அவர் இசையின் பங்கு கணிசமானது.
கடந்த படத்தில் விட்டதற்கு மேலேயே இயக்குநர் சிவாவும், தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனும் இதில் பிடித்து விடுவார்கள். அதற்கு அஜித் காட்டிய விஸ்வாசமே ‘தல’யாய காரணம்.
விஸ்வாசம் – ‘தல’ பொங்கல்..!
– வேணுஜி