சஸ்பென்ஸ் த்ரில்லர் போல ஆரம்பித்து சமூகத்துக்குச் செய்தி சொல்லி முடியும் படம். இதனை எல்லா கரம் மசாலாக்களும் சேர்த்து ஒரு கமர்சியல் விருந்தாக அளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் தாமர கண்ணன்.
தொழிலதிபர் முகேஷ், மர்ம மனிதர்களால் கடத்தப்படுகிறார். பின்னர் இறந்து போன அவரது சடலம் கிடைக்கிறது. தொடர்ந்து அவரது மனைவியும் விபத்தொன்றில் படுகொலை செய்யப்படுகிறார். இப்போது மீதம் இருப்பது அவர்களது மகள் நிக்கி கல்ராணி மட்டுமே. அவரையும் குறி வைக்கிறது அந்த மர்ம கும்பல்.
இன்னொரு பக்கம் ஆட்டோ ஓட்டிக்கொண்டு சமுதாயத்துக்குத் தன்னாலான நன்மைகளைச் செய்து வருகிறார் கிரீஷ் நெய்யார். நிக்கியின் அம்மா விபத்தில் இறக்கும் போது ஒரு உண்மையை கிரீஷிடம் சொல்லிவிட்டுச் சாக அதன் மூலம் நிக்கி கல்ராணியின் வாழ்க்கைக்குள் வருகிறார் கிரீஷ்.
கதையின் மூன்றாவது இழையாக மனிதர்கள் மேல் நம்பிக்கை அற்றுப்போய் மிருகங்கள் வாழும் காட்டில் தனித்து வசித்துக் கொண்டிருக்கிறார் தொழில்துறை ஆலோசகர் அர்ஜுன். (அப்படித்தான் அவரை சொல்கிறார்கள் ஆனால் அவர் எப்போதும் போல ஆக்ஷன் கிங் ஆகவே இருக்கிறார். )
மேற்படி கிரீஷும் நிக்கி கல்ராணியும் அர்ஜுன் வசம் வந்து சேர, நிக்கியின் பெற்றோர் எதனால் கொல்லப்பட்டார்கள், அவர்களைப் பழி தீர்க்க இந்த டிரையோவால் முடிந்ததா என்பது மீதி.
அர்ஜுனிடம் தெரியும் இளமைக்கும், சுறுசுறுப்புக்கும் அவருக்கு நிக்கி கல்ராணி ஜோடியானால் கூட ஏனென்று கேட்க முடியாது. ஆனால் அவரது வயதுக்கு நியாயமாக நிக்கி கல்ராணி அம்மாவின் முன்னாள் காதலனாக வருகிறார் அவர். அதற்கே அவரைப் பாராட்டலாம். மற்றபடி அவர் ஆக்ஷனில் அதிரிப்புதிரியாக அதே வேகம் – நடிப்பில் அதே விவேகம்.
அங்கங்கே ஷாக் ஆகி, அழுது, ஆத்திரப்பட்டு நடித்திருக்கும் நாயகி நிக்கி கல்ராணி படத்துக்குள் எடுப்பார் கைப்பாவையாக வருகிறார்.
கிரீஷ் நெய்யார்தான் ஹீரோவோ என்று நினைக்கும் அளவுக்கு அவர் பாத்திரத்திற்கு படத்தில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ஆனால் அர்ஜுன் கதைக்குள் வந்ததும் அவர் பின்னால் சென்று விடுகிறார்.
கடைசிக் காட்சியில் மட்டுமே வரும் ஹரிஷ் பெராடி தன்னுடைய அக்மார்க் வில்லன் நடிப்பில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில் எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது கதை. எடுத்துக்கொண்ட கதைக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இலலாமல் கிரீஷ் நெய்யாரின் தங்கை, அவரது திருமணம் என்று போகும் திரைக்கதை வெறும் புட்டேஜுக்கு மட்டுமே உதவியிருக்கிறது.
ஆனால் அர்ஜுன் உள்ளே வந்ததும் சூடு பிடிக்கும் கதை இரண்டாவது பாதியில் பரபரவென்று நகர்ந்து கடைசியில் சமுதாயத்தில் இப்போது அங்கங்கே நடக்கும் உண்மைச் சம்பவங்களைப் பிரதிபலித்து ஒரு செய்தியும் சொல்லி முடிகிறது.
ரதீஷ் வேகாவின் பின்னணி இசை கதையின் பரபரப்புக்கு உதவுகிறது. ஆனால் பாடல்கள் இந்தப் படத்துக்குத் தேவை இல்லாத துருத்தல்.
காடும் காடு சார்ந்த பகுதியில் பெரும்பாலும் நகரும் கதைக்கு ரவிச்சந்திரன் மற்றும் பிரதீப் நாயரின் ஒளிப்பதிவு உறுதுணையாக அமைந்திருக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சியில் கலை இயக்குனருக்கு மிகப்பெரிய வேலை இருந்திருக்கிறது. அவரும் அதை கவனிக்கத்தக்க அளவில் செய்து நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்கிறார்.
மூடநம்பிக்கைகளுக்கு எதிரான படம் என்பதால் முழு மனதோடு இதனை வரவேற்கலாம்.
விருந்து – த்ரில்லர் பிரியர்களுக்கு..!
– வேணுஜி