தலைப்பைப் பார்த்ததும் ஏதோ உலகத் தொழிலாளர்களுக்கு ஒரு உயரிய செய்தியைச் சொல்லுகிறார்கள் போலிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றியது.
ஆனால் இதில் இயக்குனரும் நாயகனும் ஆன சந்தோஷ் நம்பிராஜன் சொல்லி இருப்பது வேலைக்காக வெளிநாடு செல்லும் உழைப்பாளிகளைப் பற்றிய கதை.
அதிலும் நன்கு படித்து தொழிலுக்காகவோ, அல்லது உயர் பதவிகளுக்காகவோ வெளிநாடு செல்பவர்களைப் பற்றிய படம் இதுவல்ல. உள்நாட்டில் பிழைக்க வழி இல்லாமல் வெளிநாடுகளுக்கு சம்பாத்தியத்துக்காகச் சென்று தொழிலாளிகள் படும் இன்னல்களைப் பற்றிய கதை.
இயக்குனராகவும், நாயகனாகவும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மிகப் பெரிய பாரத்தை ஏற்றிருக்கும் சந்தோஷ், நடிக்கவும் தெரிந்தவர் என்பதால் இந்த நாயகன் வேடம் அவருக்குப் பெரிய பொருட்டாகத் தெரியவில்லை.
தன் இயல்புப் படியே இயல்பாக நடித்துக் கடந்திருக்கிறார். தவிர இதுவரை அவர் படங்களில் ஏற்றிராத அளவுக்கு இந்தப் படத்தில் நகைச்சுவை நடிப்பிலும் ஒரு வெள்ளோட்டம் பார்த்திருக்கிறார்.
நாயகி குஷி, அறிமுக நடிகையாம். அந்த தடுமாற்றம் ஆரம்பக் காட்சிகளில் தெரிகிறது. ஆனால் போகப் போக அந்த குடும்பத்து உறுப்பினராக ஆகி விடுவதை போலவே, நமக்கும் அந்நியமில்லாமல் ஆகிவிடுகிறார்.
அவர் காபி போட, பிளாஸ்க்கை கையில் எடுத்தாலே தியேட்டர்களில் ஆர்ப்பரிப்பு அதிகமாகி விடுகிறது. காதல் ரசத்தில் இது ஒரு காபி ரகம்.
நாயகனை விட அம்மாவாக நடித்திருக்கும் அன்புராணி அத்தனை இயல்புடன் நடித்திருக்கிறார்.
இன்ன பிற வேடங்களில் நடித்திருக்கும் கார்த்திக் சிவன், சிங்கப்பூர் துரைராஜ், இயக்குநர் சம்பத்குமார் உள்ளிட்டவர்கள் தங்களால் ஆனதைச் செய்திருக்கிறார்கள்.
பெரிய படங்கள் என்றால் மட்டுமே அப்போதெல்லாம் சிங்கப்பூருக்கு போவதை மாற்றி, இந்தச் சின்னப் படமும் சிங்கப்பூரில் எடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.
ஆனால் சிங்கப்பூரின் பளபளப்பான பகுதிகளுக்கு இவர்கள் செல்லவில்லை. பரிதவிப்பான மனிதர்களின் பகுதிகளில் மட்டுமே தங்கள் பயணத்தைக் சுருக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சந்தோஷ் மற்றும் குஷி ஒருவரோடு ஒருவர் அறிமுகமாகும் காட்சி கொஞ்சம் ரசனையானது. அங்கே ஆரம்பித்து திருமணம் ஆகி… (அதையெல்லாம் காட்டவே இல்லை – பட்ஜெட் பத்தாவது மாமே…) அவர்களது முதல் இரவில் சூடு பிடிக்கிறது திரைக்கதை.
குஷியுடனான சந்தோஷின் முதல் இரவு ஏடா கூடமாகப் போய் மூன்றாவது பகலில் கை கூடுவதில் அவரைவிட நமக்குதான் பெரிய குஷி ஏற்படுகிறது. படத்தின் ரசனையான பகுதியும் அதுவே.
ஆனால், நகைச்சுவைக்கு என்று வைக்கப்பட்ட மற்ற காட்சிகள் ஒப்புக்கு ‘நகைச்சு’ வைக்கக் கூட முடியாத அளவுக்கு பலவீனமானவை.
மற்றபடி வெளிநாடு செல்பவர்களின் குடும்பங்களில் ஏற்படும் நல்லது கெட்டதுகளுக்கு அவர்களால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுவதும், பல குடும்பங்களில் அவர்கள் வீட்டில் இருப்பதைவிட வெளிநாட்டிலேயே இருந்து சம்பாதித்தால் போதும் என்ற உறுப்பினர்கள் நினைப்பதுவும் கனமான விஷயங்கள்.
சதீஷ் துரைகண்னுவின் ஒளிப்பதிவு, கண்ணு வைக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் படத்தைக் காப்பாற்றி விடுகிறது.
ஆனால், மசூத் ஷம்ஷாவின் இசை இடைவேளையில் கேண்டீனில் கிடைக்கும் முரட்டு சம்சா அளவுக்குக் கூட உதவவில்லை. படத்தின் மிகப்பெரிய குறை இந்த இ(ம்)சைதான்.
வெளிநாடுகளில் தொழிலாளர்கள் படும் பாட்டை விட இந்தப் படத்தை பட்ஜெட் படுத்திய பாடுதான் பெரிதாக இருந்திருக்கும் என்று தெரிகிறது. ஆனால் அதனைத் திறமையாக சமாளித்துக் கடந்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன்.
உழைப்பாளர் தினம் – இருப்பதைப் பிடிக்க பறப்பவர்களின் கதை..!
– வேணுஜி