நகர மத்தியில் ஓடிய கொரோனா சந்தேகத்திற்குரிய நபரை, கவச உடையில் சினிமா பாணியில் விரட்டி பிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக் கின்றனர் கேரள போலீசார்.
இந்தகாட்சியை நேரில் பார்த்த பொதுமக்கள் சிறிது நேரத்திற்கு வெலவெலத்துப் போனார்கள்.
பத்தனம்திட்டா நகரில் நேற்று மதியம் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்த நிலையில், முக கவசம் சரியாக அணியாமல் கழுத்தில் மாட்டியபடி ஸ்கூட்டரில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கின்றனர்.
அதற்கு அந்த நபர், ‘நான் ஒன்றும் கொரோனா நோயாளி அல்ல. அதற்காக சவுதியில் பெற்ற சான்றிதழ் வீட்டில் வைத்திருக்கிறேன். அதனால் முக கவசமே கூட தேவைவில்லை. என்னை போக விடுங்கள்’ என்றிருக்கிறார்.
அந்த நபரின் பேச்சில் சந்தேகம் எழுந்த போலீசார், அவரது வீட்டு தொலைபேசி எண்ணை வாங்கி, அதில் அழைத்து விசாரித்திருக்கின்றனர்.
அப்போது, அவர் சவுதி அரேபியா, ரியாதில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்புதான் ஊர் திரும்பினார் என்றும் வீட்டிலேயே கோரண்டைனில் இருந்து வந்தார் எனவும் தனது மனைவியுடன் சண்டையிட்டு கோபத்தில் ஸ்கூட்டர் எடுத்து கிளம்பி போனதாகவும் தகவல் கிடைத்தது.
உடனே போலீசார், சுகாதார ஊழியர்களை அழைக்க, சிறிது நேரத்தில் ஆம்புலன்சில் பறந்து வந்திருக்கின்றனர் அவர்கள். வண்டியில் ஏறச் சொன்னபோது அதற்கு மறுப்பு தெரிவித்தவர் அவர்களிடம் சண்டையிட்டு, தப்பியோடியிருக்கிறார்.
சுகாதார ஊழியர்கள் கவச உடையோடு நகரநெரிசலில் அந்த நபரை துரத்திப் பிடிக்க, மீண்டும் தப்பியோட முயன்றிருக்கிறார் அவர். தொடர்ந்து, போலீசாரின் ஒத்துழைப்போடு அவரது கை கால்களை கட்டி ஸ்ட்ரக்சரில் தூக்கிப் போட்டு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவ மனைக்கு கொண்டு போனார்கள்.
‘நாங்களே பணிச்சுமையால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இந்த நிலையில் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் அவர் நடந்து கொண்டதால் தான் கட்டிப் போட்டு தூக்கி செல்ல வேண்டியதாயிற்று’ எனக் கூறும் போலீசார் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுத்திருக்கின்றனர்.
கவச உடை அணிந்து அறைகளுக்குள் பணி புரிவதே சிரமமாக உள்ள நிலையில், தப்பியோடிய ஒருவரை உச்சி வெயிலில் விரட்டிப் பிடிப்பது எப்படி இருக்கும் என்பதை அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் என்கிறார்கள் சுகாதார பணியாளர்கள்.
எல்லாம் சரி… அதற்காக கொரோனா சநதேகமுள்ள ஒரு மனிதனை இப்படியா மிருகத்தைப்் போல் விரட்டி பிடிப்பார்கள்..? கீழே வீடியோ…