April 28, 2024
  • April 28, 2024
Breaking News
July 9, 2020

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது

By 0 649 Views

சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.

அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, சாத்தான்குளத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தியது.

தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு 5 காவலர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேருக்கும் 15 நாள் போலீஸ் காவல் வழங்கிய தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மீண்டும் 23-ந்தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

நீதிபதி உத்தரவை தொடர்ந்து காவலர்கள் சாமத்துரை, வெயிலுமுத்து, செல்லத்துரை பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

உடல்நலக்குறைவு காரணமாக எஸ்எஸ்ஐ பால்துரை, காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்னர் பாதுகாப்பு நலன் கருதி பேரூரணி சிறையில் இருந்த 3 காவலர்கள் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் நாளை முதல் (10- 07-2020) விசாரணையை தொடங்க உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.

சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் 7 பேர் விசாரணையை மேற்கொள்ள நாளை காலை சிறப்பு  விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வருகிறார்கள்.