January 17, 2026
  • January 17, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • வெள்ள குதிர திரைப்பட விமர்சனம்
November 30, 2025

வெள்ள குதிர திரைப்பட விமர்சனம்

By 0 71 Views

‘ கூடா நட்பு கேடாய் முடியும்…’ என்று புரிய வைக்கும் கதை. அதை இயல்பான கதையோட்டத்தில் சொல்லி வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார். 

நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ் உடனும் மகனுடனும் தங்கள் மூதாதையர் வாழ்ந்த மலை கிராமத்தை நோக்கி கடுமையான பாதையில் நடந்து போகிறார்கள். 

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் மலை இறங்கி போய் வேலை பார்த்திருந்தாலும் பணம் சம்பாதிக்கும் ஆவலில் தவறான நட்புகள் தந்த பகைமையால் அங்கும் வாழ முடியாமல் மீண்டும் தொடங்கிய இடத்திலிருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கும் நோக்கில் அவர்கள் வருகிறார்கள். 

ஹரிஷ் ஓரியின் அப்பாவை பற்றி அந்த கிராமத்தில் யாரும் அறியாமல் இருக்க ஆனால் வெள்ள குதிரை வைத்திருந்த தாத்தாவை பற்றி சொன்னால் ஒரு மூதாட்டியின் மூலம் அடையாளம் தெரிகிறது. 

பிழைக்க வேறு வழியில்லாத நிலைமையில் தலைமறைவு வாழ்க்கை நடத்த, பாதைகள் அற்ற அந்த மலை கிராமம் பெரும் பாதுகாப்பை தருகிறது. ஆனால் அங்கும் ஹரிஷின் சின்ன புத்தி தலை தூக்க தொடங்க… அவர்கள் வாழ்க்கை என்ன ஆகிறது என்பது மீதி கதை. 

ஹரிஷ் ஓரி மற்றும் அவரது மனைவியாக வரும் அபிராமி போஸின் நடிப்பு கனக் கச்சிதம். அவர்களது மகனாக வரும் சிறுவனது நடிப்பும் அபாரம். 

இவர்கள் மட்டும் அல்லாமல் உடன் நடித்திருக்கும் விஜயகுமார், ரெஜின், மெலடி டார்கஸ் உள்ளிட்டோரின் நடிப்பும் படு இயல்பாக அமைந்திருக்கிறது. 

படத்தில் இசை இருந்ததா என்று கேட்க வைக்கும் அளவில் பரத் ஆசிவகன் இசையமைத்திருந்ததே நல்ல இசைக்குச் சான்று. 

பாதைகள் அற்ற அந்த மலையில் ஏறிப் போய் எப்படித்தான் படப்பிடிப்பு நடத்தினார்கள் என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்தேவ்.

மேற்குத்தொடர்ச்சி மலை படம் தந்த அதிர்வுகளை நாம் இந்த படத்திலும் உணர முடிவதே இந்தப் படத்தின் தரத்துக்கு சான்று. 

முக்கியமாக அந்த மலைப்பாதை எப்படி எல்லாம் செல்கிறது என்பதற்கான பூகோள வரைவுகளை படத்தின் காட்சிகள் நம் மனதில் ஆழப் பதிய வைத்து விடுகிறது. 

பல உலக திரைப்பட விருதுகளை பெற்றிருக்கும் இந்த படம் மேலும் பல விருதுகளை குவிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

அத்தனை நிஜத்துக்கு நெருக்கமான இயக்கத்தால் நம்மை படத்துடன் கட்டிப் போடுகிறார் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார்.

வெள்ள குதிர – உள்ளம் அதிர..!

– வேணுஜி