மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், ‘கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்’ எனும் தலைப்பில் நூல் ஒன்று தயாரிக்கப்பட்டது. இந்த நூல் கடந்த 2 ஆண்டுகளில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செய்த பணிகளை உள்ளடக்கமாகக் கொண்டது.
இந்த நூல் வெளியீடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (11-08-2019) நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவே தலைமை தாங்க, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நூலை வெளியிட்டார்.
இவ்விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமையுரை ஆற்றிய வெங்கையா நாயுடு பேசியதிலிருந்து…
“2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஒருவர் பெற்ற வெற்றி செல்லாது என அப்போது சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகும் இன்னும் விசாரணை நிலையில்தான் உள்ளது. இதுபோன்ற வழக்குகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று காலநிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
மத்திய நிலைக்குழு பரிந்துரையின்படி வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க நாட்டின் தெற்கு, மேற்கு மற்றுக் கிழக்கு பகுதிகளில் சுப்ரீம் கோர்ட்டின் கிளை நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பு சார்ந்த வழக்குகளை விசாரிக்க தனி அமர்வும், மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிப்பதற்கென தனி அமர்வுகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் முதல் துவக்கமாக சென்னையில் சுப்ரீம் கோர்ட்டின் கிளை அமைக்கப்பட வேண்டும்..!”