January 19, 2022
  • January 19, 2022
Breaking News
August 15, 2019

இந்திய ராணுவத்தை வலிமையாக்க முப்படைகளுக்கும் ஒரே தலைவர் – மோடி

By 0 497 Views

இந்தியாவின் 73-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று (15-08-2019), தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

அதன்பின்னர், பிரதமர் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினார். இந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய சுதந்திர தின உரையில் பேசியவற்றிலிருந்து…

“நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது சுதந்திர தினம்.

நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடுமையான மழை பெய்து மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடு பட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைக்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது. காஷ்மீரில் சுமுக நிலையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன. நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும்.

2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது. பொறுப்பேற்ற 10 வாரத்திற்குள்ளாகவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது மத்திய அரசு.

இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. முத்தலாக் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இஸ்லாமிய சகோதரிகளுக்கு நன்மைகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியா தற்போது தண்ணீரின் தேவையை நன்கு உணர்ந்துள்ளது. இதையொட்டியே விவசாயி களின் நலனுக்கான பல்வேறு நடவடிக்கை, நீர்வளத்தை காக்க ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப் பட்டுள்ளது.

இன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் உள்ளன, நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலைதான் உள்ளது. நாட்டு மக்கள் அனைவரது வீடுகளிலிலும் தண்ணீர் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் ஜல் ஜீவன் மிஷன்.

பல ஆண்டுகளுக்கு முன் ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார், அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டு இருக்கிறது. அதுபோலவே மருத்துவ துறை மக்கள் நலன் சார்ந்து பல மாற்றங்களை கண்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களை செய்யத் தொடங்கிவிட்டோம்.

ஊழல் என்னும் கொடிய நோயை அகற்ற அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது.

கடந்த 5 ஆண்டுகளாக வணிகர்களின் நிம்மதியான வாழ்விற்கு, தடையாக இருந்த பல்வேறு சட்டங்கள் அகற்றப் பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. சாலை, ரயில் நிலையங்களை அரசு நவீனப்படுத்தி வருகிறது,

நமது படைகள் தான் நமது பெருமை. நமது முப்படைகளையும் மேலும் கூர்மையாக்க, இந்த செங்கோட்டையில் நான் மிக முக்கிய முடிவை அறிவிக்கிறேன். இந்தியாவுக்கு இனி முப் படைகளுக்கும் ஒரே தலைவர் (Chief of Defence Staff – CDS) தான். நமது படைகளை இந்த முறை மேலும் வலிமையாக்கப் போகிறது.

‘இந்தியாவில் தயாரிக்கப்படும்’ பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளது. இதன் மூலம், உள்ளூர் உற்பத்தியையும், கிராமப்புற பொருளாதாரங்களையும் முன்னேற்ற முடியும்..!”