October 5, 2024
  • October 5, 2024
Breaking News
January 22, 2024

குழந்தை ராமரை வரவேற்க ராம ஜோதி ஏற்றுங்கள் – பிரதமர் மோடி

By 0 649 Views

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா திங்கள்கிழமை (ஜனவரி 22) வெகு விமரிசையாக நடந்தது. 51 அங்குல உயர குழந்தை ராமர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நேரடியாகக் காண திரைப் பிரபலங்கள், விளையாட்டு நட்சந்திரங்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாதுக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

பகல் 12:29:03 மணியில் இருந்து 12.30:35 மணிக்குள் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இது தனிச்சிறப்பான முகூர்த்த நேரம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, கருவறையில் ராமர் சிலை முன்னால் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமர்ந்திருந்தனர்.

கோயில் அர்ச்சகர்களின் வழிகாட்டுதலின் கீழ் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியார் பூஜைகளை செய்தனர். கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்கினர். மேலும், பல்வேறு அர்ச்சனைகளை செய்தனர். குழந்தை ராமருக்கு மலர்கள், பழங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

பிராணப் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ராம ஜோதியை ஏற்றிக் குழந்தை ராமரை வரவேற்குமாறு பிரதமர் மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், “குழந்தை ராமர் இன்று அயோத்தி தாமில் உள்ள தமது பிரமாண்டமான ஆலயத்தில் அமர்ந்துள்ளார். இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில், ராம ஜோதியை ஏற்றி, தங்கள் வீடுகளிலும் அவரை வரவேற்குமாறு நாட்டு மக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஸ்ரீராம்!” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இத்துடன், தான் ராம ஜோதியை ஏற்றியுள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.

முன்னதாக, அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிராண பிரதிஷ்டை விழாவையொட்டி அனைவரின் வீடுகளிலும் தீபம் ஏற்றிக் கொண்டாட முன்னணி இந்து அமைப்புகள் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டனர்.

அனைவர் வீடுகளிலும் மாலை கார்த்திகை தீபம்போல் அகல் விளக்குகளில் தீபமேற்றி ஒளி வெள்ளத்துடன், ராமரைப் போற்றி வணங்குவோம் என பாஜக தலைவர்களும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியும் நாட்டு மக்களுக்கு ராம ஜோதி ஏற்ற வலியுறுத்தியுள்ளார்.