November 21, 2024
  • November 21, 2024
Breaking News
January 11, 2023

வாரிசு திரைப்பட விமர்சனம்

By 0 975 Views

காலம் காலமாக சினிமாவில் கழுவிக் கழுவி காயப் போட்டுக் கொண்டிருக்கும் கதை. வீட்டுக்கு ஆகாதவன் என்று அப்பாவாலும் சகோதரர்களாலும் நிராகரிக்கப்படும் ஒரு பிள்ளை கடைசியில் தான் மட்டுமே அந்த குடும்பத்தின் வாரிசு என்று நிரூபிக்கும் கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய கதை.

மிகப்பெரிய தொழிலதிபர் சரத்குமாரின் மூன்று மகன்களில் கடைசி மகன்தான் விஜய். (அட… படத்திலும் அவர் பெயர் விஜய்தாங்க). மற்ற இரண்டு பிள்ளைகளும் அப்பாவின் சொல்கேட்டு அவரது தொழிலை கவனித்துக் கொண்டிருக்க, தன் சொந்தக்காலில் சுய விருப்பப்படி வாழ நினைக்கிறார் விஜய். இதுவே அந்த வீட்டை விட்டு வெளியேறக் காரணமாக அதற்கு பின் நடப்பதெல்லாம் எல்கேஜி, யுகேஜி சமாச்சாரங்கள்.

அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தன்னை நிறுவ போராடிக் கொண்டிருக்கும் விஜய்க்கு இந்த படம் ஒரு அமில சோதனைதான்.

நடனம், நடிப்பு, காமெடி என்று அத்தனை ஏரியாக்களிலும் கலக்கக்கூடிய விஜய்க்கு இந்த படத்தில் கிடைத்திருக்கும் இடம் டைனோசர் பசிக்கு பிவிஆர் பாப்கார்ன்தான்.

தெலுங்கில் பெரிய இயக்குனர், பெரிய தயாரிப்பாளர் என்ற நம்பிக்கையில் விஜய் ஒத்துக்கொண்டு இதில் நடித்த நம்பிக்கையில் மண் விழுந்துவிட்டதுதான் சோகம்.

ஆனாலும் ஒவ்வொரு பாடலிலும் விறுவிறுக்க வித்தியாசமான நடனங்கள் ஆடி அசத்தியிருக்கிறார் விஜய். யோகி பாபுவுடன் வரும் காமெடி காட்சிகளில் எல்லாம் யோகி பாபுவுக்கு சரி நிகர் சமானமாக கவுண்டர் கொடுத்து தியேட்டரை கலகலப்புடனேயே வைத்திருக்கிறார்.

“காதல் என்பது பூ மாதிரி… ஒரு தடவை உதிர்ந்துட்டா அதை ஒட்ட வைக்க முடியாது…” என்று அவரே ஒரு காலத்தில் பேசிய வசனத்தை இப்போது லந்து பண்ணுவது ஆகப் பெரிய காமெடி. அதேபோல் தன்னைத் தெரியாத மாதிரி காட்டிக் கொண்டு நடிக்கும் ரஷ்மிகாவிடம் தான் யார் என்பதை விளக்க அவர் படும் பாட்டை ரசிக்கலாம்.

நாயகியாக ரஷ்மிகா மண்டனா. ரஷ்மிகாவிடம் வேறு எதை எல்லாமோ எதிர்பார்த்தோம். ஆனால் அவர் இதை தானே எதிர்பார்த்தீர்கள் என்கிற கதையாக ‘கிரில்டு சிக்கன்’ கணக்காக தொடை தெரிய கிளாமரில் வந்து இம்சிக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் சமகால ஹீரோக்களாக  சரத்குமார், விஜய் நடித்த படங்கள் எல்லாம் வெளியாகி கொண்டிருந்தபோது, விஜய்க்கு தானே அப்பாவாக நடிக்கக்கூடும் என்று சரத்குமாரே அப்போது எதிர்பார்த்து இருக்க மாட்டார். இந்தப் படத்தில் அதுதான் நடந்திருக்கிறது.

சரத்குமாரும் தன் பாத்திரத்தில் ‘நடிக்காமல் நடிக்க’ முயற்சி செய்திருக்கிறார்.

அவரே நடித்த சூரிய வம்சம் படத்தின் இன்னொரு பிரதிதான் இந்தக் கதையும். அதில் சின்ராசு ஆக இவரே வந்த கேரக்டரில் இந்த படத்தில் விஜய் வந்திருக்கிறார்.

அதேபோல் விஜய்க்கு நிஜத்தில் தம்பி வயதுள்ள ஷாம், இந்த படத்தில் அவருக்கு அண்ணனாக நடித்திருக்கிறார். எதிர்காலத்தில் விஜய்யின் அப்பாவாகவும் நடிக்கக்கூடும்.

விஜய்யின் இன்னொரு அண்ணனாக ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார்.

ஜெயசுதா விஜய்யின் அம்மாவாகவும், குடும்ப நண்பரும் மருத்துவருமாக பிரபுவும், வில்லன்களாக பிரகாஷ்ராஜ் மற்றும் கணேஷ் வெங்கட்ராமும் நடித்திருக்கிறார்கள்.

மேக்கப் மேனின் கோளாறா அல்லது ஒளிப்பதிவாளர் பழனி கார்த்திக்கின் கோளாறா என்று தெரியவில்லை, எவர் முகங்களின் குளோசப்பையும் நம்மால் ரசிக்கவே முடியவில்லை.

பிரம்மாண்ட படம் என்று காட்ட செலவழித்திற்கும் பணத்தில் கொஞ்சமேனும் நல்ல மேக்கப்புக்கு பயன்படுத்தி இருக்கலாம்.

தமனின் இசையில் ” ரஞ்சிதமே …” ஏற்கனவே ஹிட் அடித்து விட அந்தப் பாடல் எப்போது வரும் என்று ஏங்க வைத்து விடுகிறது. திரையில் அந்த பாடல் வரும்போது ‘ஒன்ஸ் மோர்’ கேட்காத குறை.

விஜய் மீது என்ன கோபமோ இயக்குனர் வம்சி பைடிபள்ளிக்கு. ஒரு அரத பழசான கதையை கொடுத்து விஜய்யின் ஆற்றலை வீணடித்திருக்கிறார். அப்பா செண்டிமெட்டில் நம்ம சொந்தக் கதை மாதிரியே இருக்கிறதே என்று விஜய்யும் ஒத்துக் கொண்டாரோ..?

அம்பானிக்கு ஈடான ஒரு பெரிய தொழிலதிபரின் குடும்பம், வீட்டுக்குள் பேசித் தீர்க்க வேண்டிய வீட்டு விஷயங்களை எல்லாம் பார்ட்டி வைத்து ஊரைக் கூட்டி  தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு உறவினர், பந்துக்கள் மத்தியில் அவமானப்படுகிறார்கள்.

ஒரு டோர் டெலிவரி டாக்டர் கிடைத்தும் கணவர் அவ்வப்போது ‘டல்லா’க உட்கார்ந்து விடுவதைக் கவனித்து என்ன ஏதென்று விசாரிக்காமலா இருப்பார் ஜெயசுதா?

இவ்வளவு தட்டையான ஒரு இடைவேளைக் காட்சியை எந்த விஜய் படமும் இதுவரை கொடுத்ததில்லை.

படம் முடியும்போது விஜயின் ‘ பீஸ்ட் ‘ படமே ‘பெஸ்ட்’ என்று ஆகிவிடுகிறது.

விஜய் ரசிகர்களுக்காவது பிடித்திருந்தால் மகிழ்ச்சிதான்..!

வாரி(விட்ருச்)சு..!