April 25, 2024
  • April 25, 2024
Breaking News
December 15, 2021

உத்ரா படத்தின் திரை விமர்சனம்

By 0 428 Views

ஆவிகளில் இந்த உத்ரா ஒரு வித்தியாசமான ஆவி. அது பீடித்த வட்டப்பாறை ஊரில் ஒருவரும் மகிழ்ச்சியாக இருக்க கூடாது. இரவில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள கூடக் கூடாது.

அட… டீ கடை வடை பஜ்ஜியில் கூட உப்போ காரமோ போட்டு சாப்பிடக் கூடாது. இப்படி ஏதாவது கூடினால் போச்சு. உடனே வந்து அடித்து துவம்சம் செய்துவிடுகிறது உத்ரா ஆவி.

இந்த மேட்டரை அரசல்புரசலாக தெரிந்துகொண்டு அந்த ஊருக்கு வரும் மூன்று ஜோடி மாணவர் அணி ஆவியை எப்படி சோதிக்கிறது. பதிலுக்கு ஆவி அவர்களை எப்படி சோதிக்கிறது என்பதுதான் கதை.

ஆனாலும் ஆவிக்கு ஒரு கேரக்டர் கொடுக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் நவீன் கிருஷ்ணா.

வட்டப்பாறை ஊருக்குள் மட்டுமே உத்ரா ஆவியின் ராஜ்ஜியம் இருக்கிறது என்பதை காட்ட வட்டப்பாறை என்று பெயர் எழுதியிருக்கும் போர்டுக்கு வெளிப் பக்கம் வந்தால் டார்ச் எரிவதும் உள்பக்கம் போனால் டார்ச் அணைந்து விடுவதுமாக அவ்வளவு பர்ஃபெக்ட்டான ஆவியாக இருக்கிறாள் உத்ரா.

முதல் பாதி முழுக்க இந்த விவரணையிலையே படம் ஓடிவட பின்பாதியில் உத்ரா எப்படி ஆவி ஆனாள் என்பதற்கான விளக்கம் வருகிறது.

அதில் கவனம் ஈர்ப்பவர் உத்ராவாக நடித்திருக்கும் ரக்‌ஷாராஜ். குஷ்புவின் சாயலில் கொழுக் மொழுக் என இருக்கும் அவர் நடிப்பும் துடிப்பு.

இரண்டாம் பாதியில் எண்ட்ரி கொடுக்கும் நாயகன் விஸ்வா அப்பாவியாக வருகிறார். முதல்பாதியில் என்ட்ரி கொடுக்கும் மூன்று ஜோடி கல்லூரி மாணவ மாணவியரில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடி மட்டுமே மனதில் பதிகிறது.

தமிழ்பட உலகில் கே ஆர் விஜயா ரம்யா கிருஷ்ணனுக்கு பிறகு இந்தப் படத்தில் அம்மன் ஆகியிருக்கிறார் கௌசல்யா. ஆனால் கிளைமாக்ஸுக்கு முன்னால் மட்டும் வந்து தலை காட்டுகிறார்.

ஸ்ரீசாய் தேவ் இசையில் பாடல்கள் தேவலை. பின்னணி இசை ஓகே. ஒளிப்பதிவு செய்த ஏ.ரமேஷ் பட்ஜெட்டிலும் பளிச் காட்டியிருக்கிறார். 

முன்பாதியில் முறுவலிக்க வைக்கும் படம் பின்பாதியில் சற்றே வேகம் கூட்டுகிறது. 

உத்ரா – உல்லாசத்துக்கு ஆப்பு வைக்கும் ஆவி..!