April 20, 2024
  • April 20, 2024
Breaking News
December 26, 2022

உடன்பால் திரைப்பட விமர்சனம்

By 0 498 Views

தியேட்டர்களில் எந்தப் படமும் வெளியாகலாம். ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு என்று படங்களுக்கு சில தகுதிகள் உண்டு. அந்த தகுதியை சரியாகப் புரிந்து கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.

குடும்பத்துடன் அமர்ந்து சிரித்து மகிழ்ந்து  பார்க்க வேண்டிய படமாக அமைந்திருக்கும் உடன்பால், வாழ்க்கையின் நிலையாமையையும், தேவைகளைக் கொண்ட மனித மனங்களின் உக்கிரங்களையும் எள்ளி நகையாடி சாடுகிறது.

நகைச்சுவை நடிகராக அறியப்பட்டிருக்கும் சார்லி, எந்த விதமான குணசித்திர வேடத்தையும் ஏற்று நடிக்க வல்லவர் என்பது தெரிந்த செய்திதான். ஆனால் இதுவரை அவர் நடித்த வேடங்களில் இதுதான் மகுடம் என்று சொல்ல முடியும். அந்த அளவுக்கு மிகையில்லாமல் மிக இயல்பாக நடித்து நம் மனதை நெகிழ வைக்கிறார்.

இரண்டு மகன்கள், ஒரு மகள் என்ற அவரது குடும்பத்தில் அனைவருக்கும் திருமணம் ஆகி விட மூத்த மகனுடன் தன் சொந்த வீட்டில் வசிக்கிறார்.

ஊரிலிருந்து மகளும் மருமகனும் வந்திருக்க குடும்ப சகிதம் காலம் சென்ற சார்லியின் மனைவிக்கு திதி கொடுக்கிறார்கள். ஒருநாளும் இல்லாத திருநாளாக அம்மாவுக்கு திதி கொடுக்கும் மனது மகனுக்கு வந்ததே என்று அவர் மகிழ்ச்சியுறும் நேரத்தில் அது ஒரு திட்டமிட்ட சதி என்று தெரிகிறது.

மகனும் மகளும் சேர்ந்து திட்டமிட்டு அவரது வீட்டை விற்று தங்களுக்கு பாகம் பிரிக்கக் கோருகிறார்கள். இருக்கும் வீட்டை விற்று விட்டால் எங்கே குடியிருப்பது என்ற நியாயமான கேள்வியுடன் அதை மறுக்கும் சார்லி வழக்கமாக செல்லும் ஒரு அங்காடிக்கு  செல்கிறார்.

அங்கு அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த அங்காடி இடிந்து விழுந்ததாக செய்தி வர அதில இறந்தவர்களுக்கு 20 லட்ச ரூபாய் அரசாங்கம் தருவதாக அறிவிக்கிறது, அப்பா இறந்த தூக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் 20 லட்ச ரூபாய் கிடைக்கிறதே என்ற ஆவலில் எல்லோரும் இயங்க, அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவை ததும்ப சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சீனிவாசன்.

வீட்டை விற்க முடியாது என்று மறுத்தாலும் அந்த மறுதலிப்பையும் கூட ஒரு வித பாசத்துடன் வெளிப்படுத்தி இருக்கும் சார்லி நடிப்பில் மின்னுகிறார். பேரன் பேத்தியுடன் கொஞ்சும் கலகலப்பில் ஆகட்டும், பேரனையும் தாத்தா என்று அழைப்பதில் ஆகட்டும், இந்தப் படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களது தந்தையோ அல்லது தாத்தாவோ நினைவுக்கு வந்து போவார்கள்.

சார்லின் மூத்த மகனாக லிங்கா நடித்திருக்கிறார். வீட்டின் செலவுகளை சுமக்க முடியாத அழுத்தத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சுயநலம் மேலிடும்  நடிப்பில் லிங்கா பளிச்சிடுகிறார்.

தங்கையும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஈகோவில் இடித்துக் கொள்ள இடையில் மாட்டிக் கொண்டு விழிக்கும் அந்த வேடத்தை அற்புதமாகக் கையாண்டு இருக்கிறார் லிங்கா.

அவரது மனைவியாக நடித்திருக்கும் அபர்நதியின் நடிப்பு பற்றியும் சொல்லத் தேவையில்லை. ஏற்கனவே தேன் என்ற படத்தில் நடித்து நம் மனங்களில் குடிபுகுந்த அபர்நதிக்கு இதிலும் பேர் சொல்லத் தக்க வேடம். அதை அனாயாசமாக நடித்துக் கடந்திருக்கிறார்.

சார்லின் மகளாக காயத்ரி. இவரது நடிப்பு பற்றியும் சொல்லத் தேவையில்லை. அண்ணனுக்குத் தப்பாத தங்கையாக சுயநலம் மிளிரும் பாத்திரத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கு சரியாக வந்து விட வேண்டும் என்கிற பேராசை மேலிதும் காயத்ரியின் பங்களிப்பு கச்சிதம்.

காயத்ரியின் கணவனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா படத்துக்குப் படம் திறமையில் உயர்ந்து கொண்டே போகிறார். ஒன்றுக்கும் ஆகாத மாப்பிள்ளையாக வரும் அவர் வாயைத் திறந்தாலே நகைச்சுவை பொத்துக் கொண்டு வருகிறது.

லிங்கா, காயத்ரியன் கடைசி தம்பியாக வரும் தீனாவின் நடிப்பும் மிகப் பொருத்தமாக இருக்கிறது அதேபோல் லிங்காவின் அத்தையாக வரும் தனமும் ரசிக்க வைக்கிறார்.

திரைக்கதையில் ஓரிடத்தில் விசு படத்தை மேற்கோள் காட்டுகிறார்கள் – உண்மைதான். இந்தப் படமும் விசு இல்லாத குறையை நிவர்த்தி செய்கிறது.

முதல் பாதிப் படம் கடந்ததே தெரியவில்லை. இரண்டாவது பாதி படம் சற்றே மெதுவாக நகர்ந்தாலும் இறுதியில் அவ்வளவு நேரம் நாம் சிரித்ததை மறந்து இரண்டு சொட்டு கண்ணீர் விடுகிறோம்.

மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு அற்புதம். ஒரு வீட்டுக்குள்ளேயே கோணங்களை மாற்றி மாற்றி சலிப்படையாமல் எடுத்திருக்கிறார். சக்தி பாலாஜியின் பின்னணி இசையும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால் திரைக்கதையே நகைச்சுவையாக இருக்கும்போது இவர் பின்னணி இசைக்குள்ளும் நகைச்சுவையை ஊட்ட வேண்டும் என்பதற்காக இசையில் செய்யும் சில நையாண்டிகளை குறைத்து இருக்கலாம்.

ஆஹா தமிழ் ஒரிஜினலாக இந்தப் படத்தை தயாரித்திருக்கும் கே.வி.துரைக்கு பாராட்டுகள்.

குடும்பங்களை குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் அதன் இலக்கை கண்டிப்பாக சென்றடையும்.

உடன்பால் – சிரித்தபடி பார்க்க முடிகிற சீரியஸான முயற்சி..!

– வேணுஜி