எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதிக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வை மத்திய கல்வி வாரியம் நடத்துகிறது.
இதில் பங்கேற்க விண்ணப்பித்த தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மாநில அளவில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், நீட் தேர்வுக்காக வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணத்துடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளார்.
இந்த உதவியைப் பெற நீட் போட்டி நுழைவு தேர்வின் நுழைவு சீட்டின் நகல், படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு மாணவர்கள் இந்த தொகையைப் பெற முடியும்..
இதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டால் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல் / ஆலோசனை மைய 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெறலாம்.