தாமஸ் ஆல்வா எடிசன் 1891-ம் ஆண்டில் இதே நாளில்தான் கைனெட்டோஸ்கோப் என்று அழைக்கப்பட்ட திரைப்பட கேமராவை கண்டுபிடித்தார். ப்ரொஜெக்டோஸ்கோப் என்ற திரைப்பட ப்ரொஜெக்டரையும் கண்டுபிடித்தார்.
1882ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் டாக்டர் ஜுல்ஸ் மாரே என்ற விஞ்ஞானிக்கு ஒரு யோசனை தோன்றியது. வேட்டைத் துப்பாக்கி ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்தத் துப்பாக்கியைச் சலனபடக் கேமராவாக உருமாற்றத் திட்டமிட்டார்.
அதன் குண்டு செல்லும் குழாயின் முகப்பில் ஒரு லென்ஸைப் பொருத்தினார். அதற்குப் பின்னாலுள்ள குண்டுகள் போடும் அறையைப் படச்சுருள் (தகடு) இயங்கும் ஒளிபுகாத இருட்டறையாக அமைத்தார். படம் பதியும் தகட்டுச்சுருள், பல்சக்கரங்கள் உதவியுடன் ஒரு வினாடியில் பலமுறை நகர்வதற்கான ஒரு பொறியையும் உள்ளே அமைத்தார். அதைத் துப்பாக்கியின் குதிரைப்பகுதியின் விசையில் இணைத்தார். குதிரையை விரலால் இழுத்தால், தகட்டுச் சுருள் அடுத்தடுத்து நகர்ந்து, வரிசையாகப் படம் பதியுமாறு உருவாக்கினார்.
இந்தக்கேமராவால் வினாடிக்குப் பதினாறு படங்கள் பிடிக்க முடியவில்லை. வெறும் 12 படங்கள் மட்டும் பதிவாகக்கூடிய வேகத்திலேயே அது இருந்தது. எனினும், திரைப்படக் கேமரா கண்டுபிடிப்பில் இது ஒரு மைல்கல் என்று கூறலாம். இதனை வைத்து டாக்டர் மாரே 1889இல் பாரிஸ் நகர விழாவில் மக்களைத் தம் துப்பாக்கிக் கேமராவால் படம்பிடித்து, அந்தப்படத்தை மக்கள் முன் போட்டுக்காட்டினார். அது இயல்பான சலனமாக இருக்கவில்லை. தரம் குறைந்த படப்பிடிப்பு என்றாலும் அதுதான் உலகின் முதல் படப்பிடிப்பு. ‘ஷுட்டிங்-கன்’ என்ற வேட்டைத் துப்பாக்கியைக் கேமராவாக உருவாக்கிப் படம் பிடித்ததை நினைவு கூர்வதாகத்தான் இன்றைக்கும் சினிமாப் படபிடிப்பை ‘ஷுட்டிங்’ என்று அழைக்கிறோம்.
டாக்டர் ஜுல்ஸ் மாரேயின் உதவியாளராக இருந்த ஜர்ஜெஸ் டெமனி என்பவர், அந்த வேட்டைத் துப்பாக்கிக் கேமராவில் பல முன்னேற்றங்களைச் செய்து வடிவமைத்தார். அப்படியும் வினாடிக்கு 12 படங்களுக்கு மேல் படம் எடுக்க முடியவில்லை. அவர் அதனை காமண்ட் என்பவரிடம் 1893இல் ஒப்படைத்தார்.
இதே காலத்தில் அமெரிக்கா நியூயார்க்கில் ஒளி விளக்கு, ஒளிப்படம் தொடர்பான ஆய்வுகளை நிகழ்த்தி வந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். அவர் தம் உதவியாளரான கே.எல்.டிக்ஸனுடன் சேர்ந்து சலனப்படக் கேமராவைக் கண்டுபிடிக்கத் தீவிரமாக முயன்றார்.
எட்வர்டு மைபிட்ஜின் சாதனைகளும், டாக்டர் மாரே கண்டுபிடித்த வேட்டைத் துப்பாக்கிக் கேமராவும் அவருள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. டாக்டர் மாரேயின் கேமராவால் ஒரு வினாடிக்கு 12 படங்கள் பிடிப்பதே சிரமமாக இருந்தது. சலனப்படம் இயல்பானதாகத் தோன்ற வேண்டுமானால் ஒரு வினாடிக்கு 16 படங்களைப் பதிவது முக்கியம் என்பதை தாமஸ் ஆல்வா எடிசன் உணர்ந்திருந்தார்.
அந்தக் கேமராவுடன், படம்பிடித்த படச்சுருளைப் போட்டுக்காட்டப் ‘புரஜெக்டர்’ என்ற படங்காட்டிக் கருவியையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு முயன்றார். எடிசனும் டிக்ஸனும் எடுத்த முயற்சியில் தோல்வியையே சந்தித்தனர். ஒரு வினாடிக்கு 16 படங்களைப் பதியும் கேமராவை உருவாக்குவது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. இருந்தாலும் எடிசன் தன் முயற்சியில் பின்வாங்கிவிடவில்லை.
இந்த காலகட்டத்தில்தான், அதாவது 1888-1889 ஆண்டுகளில், ஜார்ஜ் ஈஸ்ட்மென் மற்றும் டாக்டர் ஹன்னி பால்குட்வின் இருவரும் சேர்ந்து செல்லுலாய்டு பிலிம் சுருளைக் கண்டுபிடித்து விற்பனைக்கு விட்டனர்.
அந்தப்படச்சுருள் இப்போதுள்ள மாதிரியில்லை. பிலிமின் அகலம் நமது சுட்டு விரல் நீளத்திற்கு இருந்தது.
எடிசன் அந்த செல்லுலாய்டு படச்சுருள்களை வாங்கி ஆராய்ந்தார். அதில் படங்களைப் பதிவுசெய்வது எளிமையாகவும் துல்லியமாகவும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அந்தப் படச்சுருளுக்கு ஏற்பக் கேமராவைத் திருத்தி வடிவமைத்தார். வினாடிக்கு 16 படம் பிடிக்கும் கேமரா தயாரானது.
அது இன்றுதான்..!