September 15, 2026
  • September 15, 2026
Breaking News
February 11, 2026

மை லார்ட் திரைப்பட விமர்சனம்

By 0 783 Views

‘மனிதர்கள் இறக்கிறார்கள் – ஆனால் மனிதம்  மரிப்பதில்லை.! என்பதுதான் படத்தின் அடிநாதம். அதைச் சொல்வதற்கு தமிழ்ப்படவுலகில் சசிகுமாரை விட்டாலும் ஆளில்லை.

தலைப்பைப் பார்த்து இது ஏதோ நீதி மன்றம் சம்பந்தப்பட்ட கதை என்று நினைத்துவிட வேண்டாம். அதிகார மமதையில் ஆதிக்கம் செலுத்த நினைப்பவர்களுக்கு ஒரு சாமானியன் தீர்ப்பு எழுத வாய்ப்புக் கிடைத்தால் அந்தத் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதுதான் கதை.

அப்படி அதிகார போதை கொண்ட மத்திய மந்திரியான ஆஷா சரத்துக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாக, மாற்று சிறுநீரகம் பொருத்த நேர்கிறது. ஆனால் அவரது ரத்த வகை அரிதானதாக இருக்க, சிறுநீரக தானம் பெறுவதற்கான பெரும் தேடலில் இரண்டு பேரைத் தேர்வு செய்கிறார்கள். அந்த இருவருள் ஒருவர் சசிகுமார். 

வெளியுலகுக்கு ஆஷா சரத் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக காட்டிக் கொள்வதால் இந்த ஆபரேஷனை ரகசியமாக நடத்த முடிவெடுக்கிறார்கள். 

இதற்காக கோவில்பட்டியில் இருக்கும் சசிகுமாரைக் கூட்டி வருவதில் இருக்கும் சிக்கல்கள்தான் மொத்த படமும்.

சசிகுமாரின் அறிமுகக் காட்சியே அமர்க்களம். அவரது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருக்க, பிணவறையில் பிரேதமாக இருக்கும் அவர் உயிரோடு வெளியே வந்து போடும் ஒற்றை ஷாட் ஆட்டம் ‘பலே..!’

கொஞ்சம் வெகுளியாக… போதிய கல்வியறிவு பெறாதவராக… ஆனால் மிகவும் நல்லவராக நடிப்பது ஒன்றும் சசிகுமாருக்குப் புதிய விஷயம் இல்லை. அதை இயல்பாக சுமந்து நடித்திருக்கிறார். 

‘மணந்தால் சசிகுமார்…!’ என்கிற ரீதியில் வருகிற மாப்பிள்ளைகளையெல்லாம் தட்டி விட்டு விட்டு இறந்து போன அப்பாவின் ஆவி ஏறியதாக நாடகமாடி சசிகுமாரையே மணக்கும் நாயகி சைத்ராவின் பாத்திரமும் அற்புதம். 

படுக்கையில் இருந்து எழாமல் படுத்துக் கொண்டே நடிப்பில் ஜெயிக்கிறார் மத்திய மந்திரியாக வரும் ஆஷா சரத். பாத்திரத்தை உள்வாங்கி எப்படி அவரால் அத்தனை அற்புதமாக நடிக்க முடிகிறது..? வாவ்..! 

ஆனால் அத்தனை டெரரான அந்த பாத்திரம் பொசுக்கென்று நல்லவராகி விடுவதெல்லாம் சினிமாவிற்கான சமன்பாடு.

ஆனால் நடிப்பில் எல்லோரையும் ஓரம் தள்ளி விடுகிறார் குரு சோமசுந்தரம். அடி வங்கி… உதை வாங்கி… மிதி வாங்கி நியாயத்தின் பக்கம் நிற்கும் பத்திரிகை ஆசிரியரான அவரது பாத்திரத்தில் ஜோக்கரின் தாக்கம் நிறைய…

ஆனாலும் அப்படி தெரிந்து விடாத வண்ணம் வேறு ஒரு முகம் காட்டி நடித்திருக்கிறார் சோமு. சிறந்த துணை நடிகருக்கான விருதுகள் இவருக்கு நிச்சயம் கிடைக்கும்.

படம் தொடங்கியதில் இருந்து நானாவித புரோக்கர் வேலை பார்ப்பவராக வரும் அருள் ஏழிலனின் நடிப்பும் கச்சிதம்..!

நீதிபதியாக வரும் ஜெயபிரகாஷ், முற்போக்கு வழக்கறிஞராக வரும் கோபி நயினார் போன்ற முகம் தெரிந்தவர்கள் மட்டுமல்லாமல் முகம் தெரியாத ஒவ்வொரு பாத்திரமும் அத்தனை பொருத்தமாக நடித்திருப்பதற்கு ஒரே காரணம் இயக்குனர் ராஜு முருகனின் திறன்தான்.

நீரவ் ஷாவால் இப்படியும் இயல்பான ஒளிப்பதிவை தர முடியுமா என்று நாம் ஆச்சரியப்படுவதற்குக் காரணம் இயக்குனரின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்ததுதான்.

ராஜுமுருகனின் படம் என்றாலே ஷான் ரோல்டனும் தனிக் கவனம் எடுத்து தேவைக்கு மிகாத இசையைக் கொடுத்து விடுகிறார்.

படம் நெடுக அரசு நிலைப்பாடுகளின் நடைமுறை முரண்பாடுகளை எள்ளலும் நக்கலுமாக விவரிக்கிறது ராஜுமுருகனின் உரையாடல்.

சற்றே மெதுவான கதை சொல்லல் போலத் தெரிந்தாலும் இடைவேளை காட்சியிலும் கிளைமாக்ஸ் காட்சியிலும் நம்முள் ஒரு பதட்டத்தை படர விட்டு விடுகிறார் அவர். 

சசிகுமாரை சுற்றி எழுப்பப்படும் சதி வலையில் எங்கே கண்ணீரோடு படம் முடியப் போகிறதோ என்ற பதை பதைப்பு நம்முள் எழ, சசிகுமார் எடுக்கும் முடிவு அதைவிட ஆனந்த கண்ணீரில் நம்மை நனைக்கிறது.

உள்நாட்டின் அவலங்கள் தொடங்கி உலகத் தரத்தில் முடிகிறது படம்.

படமாக்கலில் நவீனத்துவம் தொடாததும், நகைச்சுவை என்ற பெயரில் இம்சிக்கும் ஓரிரு காட்சிகளும் மட்டும் குறைகள். 

மை லார்ட் – தனிப் பெரும் கருணை..!

– வேணுஜி