May 18, 2024
  • May 18, 2024
Breaking News
June 3, 2020

3 மணி நேரத்தில் 4 ரீல்களுக்கு இசை அமைத்த சாதனை – இசைஞானி பற்றி ஏவிஎம் சரவணன்

By 0 1061 Views

AVM Saravananநியாயப்படி இன்றுதான் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள். ஆனால் ஜூன் 3 ஆகிய இன்று தலைவர் கலைஞரின் பிறந்தநாள் என்பதால் தன் பிறந்த நாளை ஒரு நாள் முன்னதாக மாற்றிக்கொண்டார்.

ஆக இசைஞானியின் உண்மையான பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை முன்பொரு சமயம் ஏவிஎம் சரவணன் அவர்கள் சொன்னதிலிரந்து பகிர்ந்துள்ளோம்…

“இயக்குனர் பாக்யராஜூடன், நாங்கள் இணைந்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வெற்றிக்கு, மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தவர் இசைஞானி இளையராஜா.

அவரது இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. அதே போல் படத்திற்கு அவர் அமைத்த பின்னணி இசை கூட அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகளின் போது, ‘இந்தப் படத்திற்கு சங்கர்–கணேஷை இசையமைக்க வைக்கலாம்’ என்று என்னுடைய மூத்த சகோதரர் ஏவி.எம்.குமரன் விருப்பம் தெரிவித்தார். ஆனால் பாக்யராஜ், ‘இல்லை சார்.. இந்தப் படம் பெரிய அளவில் வரப்போகிறது. எனவே இளையராஜா சாரை கேளுங்கள்’ என்று கூறிவிட்டார்.

இதையடுத்து நான், இளையராஜாவுக்கு போன் செய்து, ‘உங்களைப் பார்க்க வேண்டும்’ என்று கூறினேன். அவரும் உடனடியாக என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார்.

அவரிடம், ‘நாங்கள் பாக்யராஜை வைத்து ஒரு படம் பண்ணுகிறோம். அந்தப் படத்திற்கு நீங்கள்தான் இசை அமைக்க வேண்டும்’ என்றேன்.

நான் சொன்ன மறுநொடியே என்னை கையெடுத்து கும்பிட்டவர், ‘என்னை விட்டுடுங்க சாமி.. அந்த ஆளுக்கு நான் மியூசிக் போட மாட்டேன். வேறு யாரையாவது வைத்து மியூசிக் போடுங்கள். வேறு எந்த படமாக இருந்தாலும் நான் பண்றேன். இந்தப் படத்திற்கு மட்டும் பண்ண மாட்டேன்’ என்று கூறி மறுத்து விட்டார்.

ஏற்கனவே வேறு ஒரு படத்தில் இளையராஜாவுக்கும், பாக்யராஜூக்கும் இடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருப்பது பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது.

மறுநாள் காலையில் பாக்யராஜ் வந்ததும், இளையராஜா என்னிடம் சொன்னதை அவரிடம் கூறினேன்.

அதைக் கேட்ட பாக்யராஜ், உடனடியாக பிரசாத் ஸ்டூடியோ சென்று, இளையராஜா அறையின் வாசலில் போய் நின்றிருக்கிறார். அவரைப் பார்த்ததும் இளையராஜா, அந்த அறையில் இருந்து மேலே உள்ள அறைக்குச் சென்றுவிட்டார்.

ஆனாலும் கூட மதியம் வரை அறையின் வாசலிலேயே நின்றிருக்கிறார் பாக்யராஜ். மதியம் இளையராஜா அறையை விட்டு வெளியே வந்ததும், அவரிடம், ‘இந்தப் படத்திற்கு நீங்க தான் இசையமைக்க வேண்டும்’ என்று சமரசம் பேசியிருக்கிறார்.

மேற்கொண்டு மறுக்க முடியாத இளையராஜா, மறுநாள் என்னிடம் வந்தார். ‘அவர் என்னை சமாதானப்படுத்தி விட்டார். அதனால் இந்தப் படத்திற்கு நான் இசையமைக்கிறேன்’ என்று கூறினார். சினிமாத் துறையைப் பொறுத்தவரை இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது சகஜமான ஒன்று.

‘முந்தானை முடிச்சு’ படத்திற்குள் இளையராஜா வந்தபிறகு அவரது பணி மெச்சத் தகுந்ததாக இருந்தது. படத்திற்கு மிகச் சிறந்த முறையில் இசை அமைத்துக் கொடுத்தார். இப்போது கூட சிலர், ரீ–ரெக்கார்டிங் பணிக்காக 15 முதல் 20 நாட்கள் வரை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இளையராஜா தன்னுடைய ரீ–ரெக்கார்டிங் பணியை 4 முதல் 5 நாட்களுக்குள் முடித்துவிடும் திறமைசாலி.

பக்தியில் சிறந்த இளையராஜா பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார். கடைசி 4 ரீல்களுக்கு ரீ–ரெக்கார்டிங் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அன்று இரவு இளையராஜா, திருவண்ணாமலை புறப்படுவதாக இருந்தார். மாலை 6 மணிக்கு கொஞ்சம் ஓய்வு எடுத்தபோது, ‘ராஜா! இன்னும் 4 ரீல் இருக்கு. முடிக்க முடியுமா? என்ன பண்ணப் போகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

எப்போதும் இளையராஜா உள்ளே உட்கார்ந்து ‘மிக்சிங்’ பார்ப்பார். கோவர்தன் வெளியே இருப்பார். அன்று கோவர்தனை ‘மிக்சிங்’ பார்க்கச் சொல்லி குறிப்புகளை கொடுத்து விட்டு, இளையராஜா போய் ரீ–ரெக்கார்டிங் பணியை கண்காணிக்கத் தொடங்கிவிட்டார். கடைசி 4 ரீலும் இரவு 9.15 மணிக்குள் முடிந்துவிட்டது.

இடையில் எந்த ஒரு ஓய்வும் எடுக்கவில்லை. முடிக்க வேண்டும் என்பதற்காக ஏனோதானோ என்று முடிக்கவில்லை. மிகப் பிரமாதமாக ரீ–ரெக்கார்டிங் பணியை முடித்துக் கொடுத்திருந்தார். இந்த அளவுக்கு செய்வதற்கு இளையராஜாவை விட்டால், வேறு ஆள் கிடையாது. அதனால்தான் நான் முன்பே சொன்னேன், ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வெற்றிக்கு பாக்யராஜூக்கு அடுத்தபடியாக பாராட்டத் தகுந்தவர் இளையராஜா தான்.

படத்தில் ஐந்து பாடல்கள்தான். ஆனால் கேசட்டில் ஆறு பாடல்கள் இருக்கும். இளையராஜா டைட்டில் பாடல் பாடினால், படம் நன்றாக ஓடும் என்று ஒரு சென்டிமென்ட் இருந்தது. அதனால் ஒரு பாடலைச் சேர்த்தோம். சமீபத்தில் மறைந்த நா.காமராஜ் ‘விளக்கு வச்ச நேரத்திலே..’ என்ற பாடலை எழுதிக்கொடுக்க, அதனை இளையராஜா பாடினார்..!”