அன்பிற்குரிய விஜய் சேதுபதி அவர்களே!
வணக்கம்.
நீங்கள் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீ ரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ”முதல் தோற்ற விளம்பரங்கள்” (first look posters) வந்துள்ளன. இவையே கடைசித் தோற்ற விளம்பரமாகவும் இருந்து விட்டால் நல்லது.
இதற்கு மேல் நீங்கள் இந்தப் படத்திலிருந்து விலகிய செய்தி தவிர வேறு எதுவும் வராமலிருக்க வேண்டும் என விரும்பும் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு இந்த மடல். உங்கள் முகவரி எனக்குத் தெரியாது. ஆனால் எப்படியும் இந்த மடல் உங்கள் பார்வைக்குச் சென்று விடும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.
ஒரு நடிகர் என்ற முறையில் எந்தக் கதைமாந்தராகவும் நடிக்க உங்களுக்கு உரிமையுண்டு, அதுதான் உங்கள் ’தொழில் தர்மம்’ என்பதில் ஐயமில்லை. திரு முத்தையா முரளிதரனைப் பொறுத்த வரை உலக சாதனை புரிந்த ஒரு தலைசிறந்த கிரிக்கெட் வீர்ர் என்பதில் மறுப்புக்கே இடமில்லை. ஆக, அவராக நீங்கள் நடிப்பது உங்கள் இருவருக்குமே இயல்பாகப் பெருமை தரக் கூடியது என எடுத்த எடுப்பில் தோன்றத்தான் செய்யும்.
ஆனால், நீங்கள் நடிகர் என்பதோடு குறுகிய காலத்தில் தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற தமிழ்க் கலைஞராகவும் விளங்குவதற்கு உங்கள் நடிப்புத் திறன் மட்டுமே காரணமன்று. அறம் சார்ந்த முற்போக்குக் கண்ணோட்டமும் உடையவராகத் தமிழ் மக்களிடையே நீங்கள் கொண்டிருக்கும் படிமமும் சேர்ந்துதான் உங்களுக்குப் புகழ் சேர்த்துள்ளது எனக் கருதுகிறேன்.
முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் மட்டும்தான் என்றால் இந்த மடல் எழுத வேண்டிய தேவையே எழுந்திருக்காது.
2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டதே சிங்கள அரசின் தமிழர் இனவழிப்பு, போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் சற்றொப்ப ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே, குடும்பத்துடன் சரணடைந்தவர்கள் உட்பட பல்லாயிரம் தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்களே, இந்த உண்மைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும், முத்தையா முரளிதரனுக்கும் தெரியும்.
ஆனால் இந்தக் கொடிய இனவழிப்பைத் தலைமையேற்று நடத்திய இராசபட்சேக்களுக்கு முரளி ஆதரவு தெரிவித்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழரான அவர் இனவழிப்பின் நிறைவை மகிழ்ந்து கொண்டாடி சிங்களப் பேரினவாதிகளுக்குத் தன் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒன்றரை இலட்சம் உயிர்களை மாய்த்த கொலைகாரச் சாதனையை முத்தையா முரளிதரன் இரசித்துச் சுவைத்தார் என்பது தெரிந்த பின்னும் 800 விக்கெட்டுகளைச் சாய்த்த அவரது ’தூஸ்ரா’வை இரசிக்கவும் கொண்டாடவும் தமிழர்களுக்கு எப்படி மனம் வரும்? அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள் விஜய்!
ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புப் போர்க் காலத்தில் நடந்த போர்க் குற்றங்கள், மானிடப் பகைக் குற்றங்கள். மாந்தவுரிமை மீறல்கள் பற்றியெல்லாம் வந்துள்ள ஐநா அறிக்கைகள். மாந்தவுரிமைப் பேரவைத் தீர்மானஙகள், சேனல் நான்கின் ஆவணப் படங்கள்… இவை குறித்தெல்லாம் உங்களுக்குத் தெரியாமலிருக்காது என நம்புகிறேன்.
எவ்வளவு தரவுகள் தேவையானாலும் உங்களுக்கு அனுப்ப தமிழ் இளைஞர்கள் அணியமாய் உள்ளனர்.
உங்களைப் போன்றவர்களை இழந்து விடக் கூடாது என்ற அக்கறை தவிர வேறு நோக்கமில்லை.
நீங்கள் நினைக்கலாம், யாரோ சிலர் விடுக்கும் வேண்டுகோளை மதிக்க வேண்டுமா என. இல்லை, விஜய். இது உலகத் தமிழினத்தின் ஒன்றுபட்ட இதயத் துடிப்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இலங்கையில் நடந்தது இனக்கொலை என்று தமிழகச் சட்டப் பேரவையும் சிறிலங்காவின் வட மாகாண சபையும் ஒருமனதாக இயற்றிய தீர்மானங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இலங்கையைப் புறக்கணிக்கும் கோரிக்கையின் தொடர்ச்சியாகத்தான் அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் சென்னையில் இலங்கை வீர்ர்கள் விளையாடும் ஐபிஎல் போட்டிகள் நடத்தத் தடை விதித்தார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
இன்றளவும் சன் முதலாளி கலாநிதி மாறன் தனது ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக விலைக்கு வாங்கி வைத்துள்ள முத்தையா முரளிதரனை அன்று தமிழகத்தின் சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளே விட மறுத்தார்.
இன்று அதே முரளிதரனின் படிமம் உங்கள் அரிதார வடிவில் தமிழ்நாட்டுக்குள்ளும் புலம்பெயர் தமிழுலகத்துக்குள்ளும் நுழையும் முயற்சி பத்துக் கோடித் தமிழர்களையும் இழிவுபடுத்துவதல்லவா?
விளையாட்டிலும் கலையிலும் அரசியல் கலக்கலாமா? என்று ஒரு கலப்படக் கும்பல் கிளம்பி வரும்.
அவர்களுக்கு நீங்கள் எடுத்துக்காட்ட வேண்டிய சில வரலாற்றுப் பக்கங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன். “கொழும்புக் கொழுப்பைக் கரைக்கும் அரசியல் எது?” என்ற கட்டுரையில் தோழர் நலங்கிள்ளி புரட்டிக் காட்டும் அந்தப் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:
தமிழகத்தில் அனைவரும் அறிந்த பெயர் மார்லான் பிராண்டோ. ஆலிவுட்டின் பெரும் நடிகர். சிவாஜி கணேசனைத் தமிழகத்தின் மார்லான் பிராண்டோ என்று தமிழ்த் திரைச் சுவைஞர்கள் போற்றிய போது, இல்லை, மார்லான் பிராண்டோதான் அமெரிக்காவின் சிவாஜி என்றார் அறிஞர் அண்ணா. மார்லான் பிராண்டோ நாயகனாக நடித்த ’காட்ஃபாதர்’ நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
இப்படிப்பட்ட நடிகர்தான் உலகத் திரைப்பட நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் 1961இல் ஒரு கோரிக்கை விடுத்தார். ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகும் முன்பு அப்படத்தைத் தென்னாப்பிரிக்காவில் திரையிடக் கூடாதென ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
ஏன் தெரியுமா? தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசு, கறுப்பின மக்களை எதிர்த்து இனஒதுக்கலைக் கடைப்பிடித்து வந்ததால் அந்த அரசை எல்லா வகையிலும் உலகமே புறக்கணித்தது. இந்தப் புறக்கணிப்பில் ஆலிவுட்டும் சேர்ந்து கொண்டது. ஆலிவுட் கலைஞர்களில் வெள்ளையர்கள் பெரும்பான்மையாக இருந்தும் அவர்களைத் திரட்டி தென்னாப்பிரிக்காவுக்குப் பாடம் புகட்டியவர் மார்லான் பிராண்டோ.
அவ்வளவு பெரிய பாடம் இல்லையென்றாலும் முத்தையா முரளிதரன் போன்றவர்களின் இரண்டகத்துக்கு நீங்கள் சிறிய பாடமாவது புகட்டலாமே விஜய்?
இனஒதுக்கல் கோலோச்சிய காலத்தில் தென்னாப்பிரிக்கா சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டு வந்த தமிழக பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாசை இந்திய அரசு நேரில் அழைத்துக் கண்டித்தது.
விளையாட்டுத் துறைப் புறக்கணிப்பால் தலைசிறந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீர்ர்கள் கிரயம் பொல்லாக், பேரி ரிச்சர்ட்ஸ் போன்றோர் தங்கள் கிரிக்கெட் வாழ்வையே இழந்தனர். தம் வாழ்நாளில் ஒரே ஒரு சர்வதேச ஆட்டம் கூட அவர்களால் ஆட முடியவில்லை.
கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் ஒப்பாரும் மிக்காருமில்லாத மட்டையடி வீர்ராக விளங்கியவர் யார் என்று முத்தையா முரளிதரனிடமே கேட்டுப் பாருங்கள், டான் பிராட்மன் என்ற விடை கிடைக்கும்.
பிராட்மன் 1971ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அதிபர் ஜான் ஃபார்ஸ்டரைச் சந்தித்த போது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் கறுப்பின வீர்ர்களைச் சேர்த்துக் கொள்ளாமை குறித்துக் கேள்வி எழுப்பினார். அறிவில் பின்தங்கிய கறுப்பர்களால் எப்படி வெள்ளையர்கள் போல் அழகாகக் கிரிக்கெட் விளையாட முடியுமெனக் கிண்டலடித்தார் ஃபார்ஸ்டர்.
“நீங்கள் கேரி சோபர்ஸ் எனும் மாபெரும் கறுப்பினக் கிரிக்கெட்டர் பந்தடித்து ஆடும் ஒயிலையும் மிடுக்கையும் கண்டதில்லையா ஃபாஸ்டர்?” எனக் கேட்டார் பிராட்மன். நிறவெறியில் நீங்கள் முரண்டு பிடிக்கும் வரை ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணி ஒருபோதும் தென்னாப்பிரிக்காவில் வாசல் மிதியாது என்று அறிவித்தார்.
மண்டேலா சிறையிலிருந்து மீண்டு வந்ததும், பிராட்மன் குறித்து அன்புடன் வினவினாராம்! விளையாட்டுத் துறையிலான இனஒதுக்கலைக் கைவிட்ட பிறகு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியை நெல்சன் மண்டேலாவே இந்தியாவுக்கு அழைத்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கிரகாம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணி தடையை மீறி தென்னாப்பிரிக்கா செல்லலாம் என 1982இல் முடிவெடுத்தது.
இந்தப் பயணம் கலகப் பயணம் என்றும், பயணம் சென்றோர் கலக அணியினர் என்றும் அழைக்கப்பட்டனர்.
”ஆல்-ரவுண்டர்’ இயான் போதமைத் தவிர முழு வலிமையுடன் தென்னாப்பிரிக்காவில் களமிறங்கிய இந்த இங்கிலாந்து அணியினரை உலக ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். அவர்களைக் “கேவலமான பன்னிருவர்” என இங்கிலாந்து நாடாளுமன்றமே வண்ணித்தது.
அது மட்டுமல்ல, அந்த அணியினர் பன்னாட்டுக் கிரிக்கெட்டிலிருந்து மூன்றாண்டுக் காலத்துக்கு விலக்கி வைக்கப்பட்டனர். இங்கிலாந்தின் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவரான ஜெஃப்ரி பாய்காட் உள்ளிட்டோரின் கிரிக்கெட் வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது.
வரலாற்றில் ஒரே ஒரு முறைதான் இந்தியா டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அது 1974ஆம் ஆண்டு. விஜய் அமிர்தராஜ் ஒற்றையர் ஆட்டத்திலும், விஜய் ஆன்ந்த் உடன்பிறப்புகள் இரட்டையர் ஆட்டத்திலும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்ததால் கோப்பை இந்தியாவுக்கே என்று நம்பப்பட்டது.
ஆனால் இந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாட வேண்டிய கட்டாயம். என்ன செய்வது? புறக்கணிப்பது தவிர வேறு வழியில்லை என்று இந்திய அரசு சொல்லி விட்டது.
பிற்காலத்தில் ஐநா துணைக்கூட்டம் ஒன்றில் விஜய் அமிர்தராஜ் இது பற்றிப் பேசினார். ”அப்போது ஏமாற்றமாக இருந்தாலும் இந்தப் புறக்கணிப்பு எவ்வளவு சரியானது என்பதைத் தெரிந்து கொண்ட போது பெருமைப்பட்டேன்” என்றார். விஜய் அமிர்தராஜுக்குக் கிடைத்த பெருமை சிறிதாவது விஜய் சேதுபதிக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா?
ஒப்புக் கொண்டதிலிருந்து இப்போது பின்னெடுப்பது உங்களுக்கு சங்கடமாகத் தெரியலாம், ஆனால் எதிர்காலம் உங்களைப் போற்றும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
விஜய் சேதுபதி அவர்களே! முத்தையா முரளிதரன் பற்றிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்த பின் எப்படிப் பின்வாங்குவது? என்று நீங்கள் தயங்கத் தேவையில்லை. நம் காலத்தின் தலைசிறந்த பூதியல் (இயற்பியல்) அறிவியலர் ஸ்டீபன் ஹாக்கிங் 2013ஆம் ஆண்டு இசுரேலில் ஒரு கல்வி ஒன்றுகூடலுக்கு வந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.
இசுரேல் நாட்டின் அதிபரும் அதில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் பாலத்தீனர்களுக்கு எதிராக இசுரேல் நடத்தி வரும் கொடுமைகளைக் கண்டித்து அவர் இம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல நண்பர்களும் கேட்டுக் கொண்ட போது அதை ஏற்று இசுரேல் செல்வதில்லை என்று அறிவித்தார். துயருற்ற பாலத்தீன மக்களுக்கு அவரால் முடிந்த ஒரு சிறு ஆறுதல்!
உங்கள் சக தமிழர்களுக்கு சிங்களப் பகை புரிந்த கொடுமைகளை நியாயப்படுத்திய ஒருவராக நடிக்க மறுத்து, விஜய், நீங்களும் தரலாமே சிறு ஆறுதல்?
அண்மையில் மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமண்யம் போன்ற தமிழ்நாட்டுத் திரை ஆளுமைகள் இலங்கை செல்ல ஒப்புக் கொண்டு பிறகு தமிழர்களின் வேண்டுகோளை ஏற்றுப் போகாமலிருந்த செய்தி தெரியுமா உங்களுக்கு?
அமிதாப் பச்சன் போன்ற வேற்றுமொழி ஆளுமைகளும் கூட தமிழர்களின் உணர்வை மதித்து இலங்கை நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். சர்வதேச இந்தியத் திரைப்பட விழா சொதப்பியதே. நினைவுள்ளதா? இந்தி நடிகர்கள் கூட தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள். தமிழராகிய நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?
இனவழிப்புக்கு நீதி கோரித் தமிழினம் கடினமான நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு நீதியை மறுக்கும் இனக் கொலைக் குற்றவாளிகளுக்குத் துணைபோகும் இரண்டகருக்கு ஊக்கமளிப்பதாக இருந்து விடக் கூடாது என விரும்புகிறேன், விரும்புகிறோம்.
✍️அன்புடன்,
தியாகு / பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
14/10/2020