நாங்கள் கேட்பது சலுகை அல்ல; உரிமை!
இரண்டு நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம் செய்து திரும்பிய நிகழ்வு பெரும் வேதனையை அளித்தது. தமிழகத்தின் எந்த ஊர்களுக்கு விமானத்தில் பயணித்தாலும் விமான நிலையத்தின் உள் நுழைவாயிலில் நுழைந்து விமானத்தில் ஏறி பயணம் செய்து இறங்கி விமான நிலையத்தின் வெளி வாயிலைக்கடந்து வெளியேறும்வரை ஏதோ வேற்று நாட்டிலோ, வேற்று மாநிலத்திலோ இருப்பது போலவே நான் உணர்கிறேன்.அதே உணர்வும் மன உளைச்சலும் இம்முறையும் எனக்கு நிகழ்ந்தது.
தமிழகத்திற்குள் விமானத்தில் பயணிப்பவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தமிழைப் பேசுபவர்களாகவும், தாய் மொழியாகக் கொண்டவர்களாகவும் இருந்தும் எந்த ஒரு அறிவிப்பும் தமிழில் செய்வதில்லை. மாறாக பெரும்பாலானோருக்கு விளங்காத இந்தியிலும், ஆங்கிலத்திலுமே அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். பயணிப்பவர்களும் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது விளங்காமல் போனாலும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் அறிவிப்பவர்களும் இந்தியிலும், ஆங்கிலத்திலுமே தொடர்ந்து அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இடையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் டெல்லி நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் தாய்மொழிப் பற்றுடன் தமிழில் பேசி பதவி ஏற்றுக்கொண்டதை ஊடகங்களில் கண்டும், படித்தும் நாமெல்லாம் புளகாங்கிதம் அடைந்தோம். பலகட்சிகளில் உள்ள இத்தகைய அரசியல்வாதிகள்தான் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், எதிர்க்கட்சிக் காரர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள்தான் இத்தகைய விமானங்களில் நாள்தோறும் பயணம் செய்கிறார்கள். அத்துடன் தமிழ் மொழியை காக்கவேண்டி ஊடகங்களில் முறையிடுகிறார்கள்; அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்து போராட்டங்களும் நடத்துகிறார்கள். ஆனால் ஒருவரும் இதுவரை விமானத்தில் அறிவிப்பு செய்ததை எதிர்த்து கண்டித்தது இல்லை. நமக்கென்ன என கண்களை மூடிக்கொண்டு காதுகளை பொத்திக்கொண்டு வந்து விடுகிறார்கள்.
ஆனால் பலமுறை நான் என் எதிர்ப்புகளை தெரிவித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னுடன் பயணிப்பவர்கள் தமிழர்களாக இருந்தும் எனக்கு ஆதரவாகப் பேச ஒருவரும் முன் வருவதில்லை. இருந்தும் நேற்றும் முன்பு போலவே தமிழில் அறிவிப்பு செய்யாததை எதிர்த்து காரணம் கேட்டேன். பணிப்பெண்கள் தமிழில் பேசுபவர்களாக இருந்தும் தங்களுக்கு இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்பு செய்ய ஆணை பிறப்பித்திருக்கிறார்கள் என பதில் சொன்னார்கள்.
ஒன்றரை மணி நேர பயணத்துக்கிடையில் அடிக்கடி திடீர் திடீரென பாதுகாப்பு எச்சரிக்கைகளை நமக்குப்புரியாத மொழிகளிலேயே அறிவிக்கிறார்கள். பெரும்பாலான பயணிகளுக்கு புரியும் தாய் மொழி தமிழிலும் அறிவிப்பைச் செய்தால் எந்த மாதிரியான இழப்பு ஏற்படும் என்பதை இந்த நிறுவனங்களும், அரசாங்கமும் நமக்கு விளக்க வேண்டிய கடமை இருக்கின்றது.
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு பல மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இந்திய ஒன்றியமாக இருந்து செயல் படுகின்ற நடுவண் அரசுக்கு அந்தந்த மாநிலங்களுக்கான மொழியையும், அதைச்சார்ந்த மக்களையும் மதித்து ஆட்சி செய்ய வேண்டிய கடமையும், அறமும் இருக்கின்றது. அதன் அடிப்படையில் இனியாவது தமிழகத்திற்குள் மற்றும் தமிழகத்திற்கு வந்து செல்லும் எந்த விமானமாக இருந்தாலும் தமிழிலும் அறிவிப்பு செய்வதை கட்டாயமாக்கும் ஆணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.
அனைவருக்கும் நினைவிருக்கலாம், இறுதியாக சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்திற்கு வந்திருந்த பொழுது சென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்டியதுடன் விமானங்களில் இனி தமிழிலும் அறிவிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவித்தார். நாம் அனைவரும் அதை எண்ணி மகிழ்ந்தோம். ஆனால் இன்றுவரை அது நிறைவேறவில்லை. பிரிட்டிஷ் விமானத்தில் இலண்டனிலும், ஏர் ப்ரான்ஸ் விமானத்தில் பாரிஸிலும் தமிழில் அறிவிப்பு செய்யும் பொழுது கோயம்புத்தூர்,மதுரை,திருச்சி,சேலம் போன்ற ஊர்களுக்கு செல்லும் விமானகளில் இந்தி,ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்வதும் அதை தமிழ் மக்களாகிய நாமெல்லாம் கண்டும் காணாமல் காதை மூடிக்கொண்டு பயணித்துக் கொண்டிருப்பதும் இன்னும் தொடரத்தான் வேண்டுமா என்பதே என் கேள்வி?
ஊடகங்களில் சில நாட்களாக ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து அரசியல்வாதிகளும், தலைவர்களும் இந்தி திணிப்பு செய்தால் உயிரைக்கூட விடத்தயார் என எச்சரிக்கை விடுத்து போராடப்போவதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். முதலில் இவர்கள் தமிழகம் மற்றும் தமிழகத்திற்கு வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யும் வரை அப்படிப்பட்ட விமானங்களில் பயணம் செய்ய மாட்டோம் என அறிவிக்க வேண்டும்.
நாம் தமிழில் அறிவிப்பு செய்யச் சொல்லி மத்திய அரசிடம் கேட்பது சலுகை அல்ல; உரிமை என்பதை இனியாவது அனைவரும் உணருங்கள்.
– தங்கர் பச்சான்
– 16.09.2019