தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்வது குறித்தும், தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பான சந்திப்பு நேற்று (ஜூலை 6) மாலை ஜூம் செயலி வழியே நடைபெற்றது.
தயாரிப்பாளர்கள் தரப்பில் பாரதிராஜா, கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ், சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், தேனப்பன், ஜே.எஸ்.கே .சதீஷ் ஆகியோரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் திருப்பூர் சுப்பிரமணி, செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோவன், உட்லண்ட்ஸ் வெங்கடேஷன், திருச்சி மீனாட்சிசுந்தரம், திருச்சி ஸ்ரீதர் ஆகியோரும் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தரப்பில் சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் மன்னன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அப்போது அனைவருமே மிகவும் ஒற்றுமையுடன் இணைந்து இது தொடர்பாக விவாதித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
“கூட்டம் மிகவும் சிறப்பான முறையில் இருந்தது. விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள். இதில் தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஒற்றுமையாகக் கலந்து பேசினோம்.
தயாரிப்பாளர்கள் கூறும் கருத்துகளுக்கு நாங்கள் செவி சாய்க்கிறோம் என்று சொன்னோம். நாங்கள் கூறிய கருத்துகளுக்கு அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். திரைத்துறையின் சார்பில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கோரிக்கைகளைத் தயார் செய்து அரசாங்கத்திடம் கொடுக்கவுள்ளோம்.
இது தொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சரையும், ஜிஎஸ்டி வரி தொடர்பாக நிதியமைச்சரையும், அவர்கள் இருவரின் மூலமாக முதல்வரையும் சந்தித்துக் கோரிக்கை வைக்கவுள்ளோம்.
திரையரங்குகள் சிறப்பாகச் செயல்பட்டால் தொழில் நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்கள் செழித்து வளர்ந்தால் மட்டுமே இந்தத் தொழில் நன்றாக இருக்கும். அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கலாம் என்று ஏகமானதாக முடிவு செய்யப்பட்டது. கோரிக்கைகளைத் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாரதிராஜா சார் தேனியில் இருக்கிறார். அவர் சென்னை வந்தவுடன் செய்தித்துறை அமைச்சர் மற்றும் முதல்வரிடம் சந்திக்க நேரம் வாங்கி, “நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்கு இந்தக் கோரிக்கைகளைச் செய்து கொடுங்கள்” என்று வலியுறுத்தவுள்ளோம்.
திரைத்துறையினர் ஒற்றுமையாகப் போய் என்ன கேட்டாலும் செய்து கொடுப்பார்கள். ஒருவருக்கு ஒருவர் குற்றச்சாட்டிக் கொண்டிருந்த காலம் எல்லாம் மறைந்துபோய், எல்லாருமே ஒரே நேர்கோட்டில் இருக்கிறோம்.
தயாரிப்பாளர்கள் நஷ்டமடைய நஷ்டமடையத் தொழில் வீணாய்ப் போகிறது. ஆகையால், தயாரிப்பாளர்கள் என்ன கேட்டாலும் செய்து தருகிறோம் என்று கூறியுள்ளோம். நமக்குள் உள்ள பிரச்சினையை உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றோம். அதற்கு அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
அதேபோல் இயக்குநர் எஸ்.ஏ.சி. சாரும் பேசினார். நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்தக் கோரிக்கைகள் நல்லபடியாக நிறைவேறும் வரை காழ்ப்புணர்ச்சியைக் காட்டிக் கொள்ளக்கூடாது என்று கூறினார். அதைத்தான் இயக்குநர் பாரதிராஜா சார், சத்யஜோதி தியாகராஜன் சார் உள்ளிட்ட அனைவருமே கூறினர்”.
இத்துடன் நடிகர்களை சந்தித்து சம்பளக் குறைப்பு பற்றியும் பேச இக்கூட்டத்தில் முடிவெடுத்த தாக தெரிகிறது.
நீங்க எடுததது சரி… அவங்க ஒத்துக்கணுமே..?