‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாலும் அதற்கு முன்பே மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சித்தார்த்.
கடந்த 23 வருடங்களாக இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து விட்ட சித்தார்த், தான் நடித்து சம்பாதித்த பணத்தை வைத்து சொந்தப் படங்களையும் தயாரித்து வருகிறார்.
இப்போது தன் ‘எடாக்கி என்டர்டைன்மென்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவர் தயாரித்திருக்கும் படம் ‘சித்தா’. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ சேதுபதி ‘ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் இயல்பான ஒரு ஹீரோவாக வருகிறார் சித்தார்த்.
இதில், சித்தார்த்துக்கு ஜோடியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நாயர், குழந்தை நட்சத்திரம் சரஸ்ரா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த முக்கிய பாத்திரங்கள் தவிர ஏனைய பாத்திரங்களில் வருவோர் அனைவருமே புது முகங்களாம்.
பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார். மேலும், படத்திற்கான விளம்பரப் பாடல் ஒன்றுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த (செப்டம்பர்) மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சித்தா’ படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்க, நான்கு மொழிகளுக்கும் சித்தார்த்தே தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் பப்ளிசிட்டி வேலைகளை ஆரம்பித்திருக்கும் நிலையில் சித்தார்த்தம் எஸ்.யு.அருண்குமாரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள்.
“சித்தப்பா என்பதன் சுருக்கம் தான் ’சித்தா’. ஹீரோவுக்கும், அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்புதான் கதை. இது ஒரு சர்வதேச தரமுள்ள படம். வெளியான பிறகு நிச்சயம் பல விவாதங்களை ஏற்படுத்தும். அதற்கு முன் இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பார்த்த பிறகு அவர்களுடன் நான் விவாதம் நடத்த இருக்கிறேன்.
தொடர்ந்து, இந்தப் படத்தைப் பலருக்கு நாங்கள் போட்டுக் காட்டத் திட்டமிட்டுள்ளோம். தற்போது நாங்கள் யாரை மதிக்கிறோமோ, அவர்களுக்கு எல்லாம் படத்தைப் போட்டுக் காண்பித்து விட்டோம். அவர்கள் பாராட்டிய காரணத்தால் வெளியீட்டுக்குத் தயாராகி விட்டோம்” என்ற சித்தார்த் தொடர்ந்து படம் பற்றிப் பேசினார்.
“இது ஒரு கிட்னாப் திரில்லர் ஜேனர் படம். ஆனால், அதை எதார்த்தமாக சொல்லியிருக்கிறோம், படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி இருக்குமோ, அதுபோன்ற உணர்வு ஏற்படும் வகையில் சொல்லியிருக்கிறோம்.
கடத்தல் திரில்லர் என்றதுமே இதுவரை நீங்கள் பார்த்த படங்களை நினைவில் வைத்துக் கொண்டு இந்த படத்தைப் பார்த்தால் ஏமாந்து போவீர்கள். முழுக்க முழுக்க மிக எதார்த்தமான படமாகத்தான் இது இருக்கும்.
சினிமாவுக்கு வந்த 23 வருடங்களில் நானே இந்தப் படத்தில் புதிதாகத் தெரிகிறேன். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் அருண் குமார் என்னை மீண்டும் நடிகராக அறிமுகப்படுத்துகிறார் என்று சொல்லும் அளவுக்கு படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தை இரண்டு வருடங்களில் முடித்திருக்கிறோம். ஆனால் இதன் படைப்பு நேர்த்தியில் எங்கள் முழு அனுபவத்தையும் உழைப்பையும் கொட்டி இருப்பதால் என் 23 வருட உழைப்பில் உருவான படம் இது என்று சொல்வேன்.
தூய்மைப் பணியாளராக வரும் நிமிஷா சஜயன் நடிப்பில் மிரட்டி விட்டார். அவர் முதல் நாளில் எப்படி நடித்தாரோ, அதே போல்தான் இறுதி நாள் வரை நடித்தார். அந்த கதாபாத்திரத்தை மிக சரியாக கையாண்டிருந்தார்.
நான் உட்பட இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும்… ஒரு காட்சியில் ஒரு வசனம் பேசி நடித்திருப்பவர்களுக்கு கூட முறையான பயிற்சிப் பட்டறை வைத்து நடிக்க வைத்திருக்கிறோம்.
இந்தப் படத்தை முழுமையான ‘பான் தென்னிந்தியப் படம்’ என்று சொல்லலாம்.
‘சித்தா’ படத்தைப் பற்றி நான் மிகவும் அதிகமாக பேசுவது போல் தோன்றும். ஆனால் நீங்கள் படத்தைப் பார்த்ததும் நான் குறைவாகத்தான் பேசி இருக்கிறேன் என்று புரிந்து கொள்வீர்கள்..!”
இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் பேசும்போது, “ ஒரு குழந்தை காணாமல் போகிறது, அந்த சம்பவத்தால் ஒரு குடும்பம் எப்படி சிதறிப்போகிறது, பிறகு அது ஒன்றாக சேர்வது எவ்வளவு பெரிய போராட்டம் என்ற அளவில் கதை நகரும். இப்படி ஒரு கதை எழுத நம் சமூகத்தில் நடந்த பல சம்பவங்கள் தூண்டுதலாக இருந்தது.
ஒரு படம் பண்ணலாம் என்று நாங்கள் பேசி சித்தார்த் எனக்கு அட்வான்ஸ் கொடுத்த பிறகு அவரை வைத்து தான் இந்த கதையை எழுதினேன். இப்படி எழுதுவது எனக்கு ஒரு புது அனுபவம்.
சித்தார்த்துக்கும், நிமிஷாவுக்கும் அழகான காதலும், இதுவரை படங்களில் சொல்லாத சித்தப்பா, அண்ணன் மகள் இடையிலான உணர்வுப்பூர்வமான பாசப் போராட்டமும் படத்தில் இருக்கிறது..!” என்றார்.
இவர்கள் நம்பிக்கையை ‘சித்தா’ காப்பாற்றும் என்று நம்பலாம்.