சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில்…
நடிகை நந்திதா ஸ்வேதா பேசும்போது,
“சினிமாத் துறைக்கு வரும்போது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால், நான் லிட்டல் சூப்பர் ஸ்டாருடன் நடித்து விட்டேன் என்பதில் மகிழ்ச்சி…” என்றார்.
அறிமுக நடிகை நிதி அகர்வால் பேசும்போது,
“சிம்புவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. சிம்பு திறமையானவர். அவர் சிங்கிள் டேக் நடிகர். இரண்டாவது டேக் போகவே மாட்டார்…” என்றார்.
இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது,
“சிம்புவைப் பற்றி எங்களைவிட ரசிகர்களாகிய உங்களுக்குத்தான் அதிகமாக தெரியும். ஏனென்றால் எங்களைவிட அதிகமாக நீங்கள்தான் அவரை அதிகமாக பின்தொடருகிறீர்கள்.
ஆனால், சிம்புவுடன் நான் பழகும்போது தான் தெரிந்தது. அவருக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று. இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் என்பதில் ஐயமில்லை. இந்த வருடத்திலேயே அவர் நடிப்பில் 3 படங்கள் வெளியாகும்.
சிம்புவை வைத்து இயக்க போகிறேன் என்றதும் பல தயாரிப்பாளர்கள் எனக்கு போன் செய்து வேண்டாம் என்றார்கள். ஆனால், சிம்பு மற்றவர்கள் சொல்வதற்கு காது கொடுக்காதீர்கள். என் பின்னால் நீங்கள் மட்டும் இருங்கள், படப்பிடிப்பிற்கு 9ஆம் தேதி அன்று நான் இருப்பேன் என்றார். அதேபோல், நானும் இயக்கினேன். ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பு முடிந்து பொங்கலுக்கு வெளியிடுகிறோம்…”
சிம்பு பேசும்போது..
“முதலில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்த கலைஞர்கள், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இறைவனுக்கு மட்டும் தான் தெரியும் இந்த படம் எப்படி விரைவாக முடிந்தது என்று.
‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் பாதியில் நின்றது. அந்த சமயத்தில் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும் என்று இப்படத்தின் கதையை கூறினார் இயக்குநர்.
இப்படத்தின் கதையைக் கேட்டதும், கொரோனாவால் அனைவருக்கும் எதிர்மறையாக, மனைஉளைச்சலில் இருக்கும் சமயத்தில் இப்படத்தின் கதை நேர்மறையாக இருந்தது. ஆகையால், இப்படம் பார்க்கும் அனைவருக்கும் நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.. அதனால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
என்னுடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நான் ஒன்று கூற விரும்புகிறேன். அனைவரும் உங்கள் உள்ளத்தை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவரிடம் அறிவுரைக் கேட்பதை நிறுத்துங்கள். உங்கள் உள்ளத்தில் தான் இறைவன் இருக்கிறான். அதைதான் நான் செய்தேன்.
கொரோனா காரணமாக சிலர் திரையரங்கில் வெளியிடுகிறார்கள், சிலர் ஓடிடியில் வெளியிடுகிறார்கள். அது அவரவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் சினிமா என்றால் தியேட்டரில் பார்ப்பது தான் சுகம். அதனால் இப்படம் தியேட்டரில் தான் வரும்.
என் ரசிகர்களுக்கு ஒன்று கூற ஆசைப்படுகிறேன். இனிமேல் பேசுவதற்கு எதுவுமில்லை செயல் மட்டும் தான்.
இந்த வருடத்திலேயே 3 படங்கள் வரப்போவதாக கூறினார்கள். அது உண்மைதான். ‘மாநாடு’, ‘பத்து தல’, அதற்கடுத்து ஒரு படம் இருக்கிறது. சுசீந்திரன் சார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கிறேன் என்றார்.
விழாவின் இறுதியாக ‘ஈஸ்வரன்’ படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது.