November 24, 2024
  • November 24, 2024
Breaking News
July 3, 2022

ராக்கெட்ரி திரைப்பட விமர்சனம்

By 0 443 Views

எறும்பு நடக்கும்போது பேலன்ஸ் தவறினால் எந்த பழுதும் நிகழ்ந்து விடப் போவதில்லை. அதுவே யானையின் நடை இடறி விடும்போது அது எழுந்து கொள்வதற்கு பல காலம் ஆகலாம். மாதவனே இயக்கி நடித்திருக்கும் இந்தப்படம் சொல்ல வரும் செய்தி இதுதான்.

ஒரு நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு அந்த நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எந்த அளவுக்கு உதவுகிறார்கள் என்பதை பொது சமுதாயம் எப்போதுமே நினைத்துப் பார்க்க தவறிவிடுகிறது. அப்படி நினைக்கா விட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவர்கள் மீது அவதூறு வரும்போது அதை அப்படியே நம்பிவிடும் பொதுப் புத்திதான் மிகவும் அபாயகரமானது என்கிறார் மேடி என்கிற மாதவன்.
 
ஒரு விஞ்ஞானியைக் காணவில்லை எனவும், தேச துரோக வழக்கில் ஒரு விஞ்ஞானி சம்பந்தப்பட்டிருக்கிறார் எனவும், ஒரு விஞ்ஞானியின் பிணம் கண்டெடுக்கப்பட்டது எனவும் நாம் நாளிதழ்களில் அவ்வப்போது செய்திகளைப் பார்த்து வருகிறோம் ஆனால் அதன் பின்னால் இருக்கும் உண்மைத் தன்மையை எப்போதாவது உணர்ந்து இருக்கிறோமா தெரியவில்லை.
 
அப்படி ஒரு அவதூறு இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்காற்றிய நம்பி நாராயணன் மீது திணிக்கப்பட்ட போது அவர் வாழ்ந்து கொண்டிருந்த கேரளம் அவரையும் அவர் குடும்பத்தையும் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. அந்தப் பழியில் இருந்து அவர் மீண்டு வர பல காலம் ஆனாலும் அதன் வடுக்கள் இன்னும் குறையாமல்தான் இருக்கின்றன.
 
இந்த உண்மை வரலாற்றை திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லியே ஆக வேண்டும் என்கிற மாதவனின் முழு முயற்சி தான் இந்த படம். 
 
திட எரிபொருட்களின் மூலமே ராக்கெட்டை ஏவ முடியும் என்று இருந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக திரவ எரி பொருளில் இயங்கும் என்ஜின் மூலம் ராக்கெட்டைப் பறக்க வைப்பது சுலபம் என்று படாத பாடுபட்டு நிரூபித்தவர் நம்பி நாராயணன். அதன் விளைவாகத்தான் அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் விண்வெளித் துறையில் சாதிக்க முடியாமல் தடுமாறிய செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ராக்கெட் அனுப்பும் திட்டத்தில் இந்தியா வெற்றி கண்டது.
 
இதற்கு ஆதார காரணமாக இருந்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் 60 வருட போராட்டத்தை இரண்டரை மணிநேர செல்லுலாயிடில் தந்திருக்கிறார் மாதவன். 
 
இந்தியா பின் தங்கியிருந்த விண்வெளி அறிவியலில் தன் அறிவின் மூலம் பல சாதனைகளை நிகழ்த்தி இங்கே பயில முடியாத விஷயங்களை வெளிநாடு சென்று பயின்று அவர்களுக்கும் தன் அறிவின் மூலம் உதவிகள் செய்து இந்தியாவுக்கான திரவ ஏரி பொருள் என்ஜின்களை ரஷ்யாவில் இருந்து தருவித்து இந்த சாதனையைச் செய்வதற்கு நம்பி நாராயணனுக்கு பல வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. 
 
அன்றைய பொழுதில் இந்தியா தயாரித்த எஞ்சினை சோதித்துப் பார்க்கும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு கூட பொருளில்லாத நிலையில்தான் இந்தியா இருந்தது என்ற உண்மை சுடுகிறது. அதையும் வெளிநாட்டில் சென்றே சோதித்து விட்டு வந்ததுடன்  மிகக் குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து திரவ எரிபொருளில் இயங்கும் கிரையோஜன் என்ஜின் பாகங்களைப் பெற்று அதையும் நேரடியாக இந்தியாவுக்கு கொண்டு வர முடியாத சூழலில் பாகிஸ்தான் வழியாக இந்தியா கொண்டு வந்த நம்பி நாராயணனுக்கு இந்தியாவில் சிலை வைக்கவில்லை – மாறாக தேசத் துரோக குற்றம் சாட்டப்படுகிறது.
 
கேரள போலீஸ் மற்றும் சிபிஐ வசம் 50 நாட்களுக்கு சித்திரவதை செய்யப்பட்டது இந்த நாட்டின் வானியல் வளர்ச்சியை நம்பிய நம்பி நாராயணன் மட்டுமல்ல – இந்த சமூகத்தின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருந்த அவரது குடும்பமும்தான். அந்த வலிகளை அதி அற்புதமாகக் கையாண்டு நமக்கு காட்சி படுத்தியிருக்கிறார் மாதவன்.
 
பல வருடப் போராட்டத்தின் முடிவில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று நிருபிக்கப்பட்டாலும் அதை முழுமையாக இன்னும் இந்த சமுதாயம் ஏற்றுக் கொண்டதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். நம்பி நாராயணனின் வாழ்க்கை அனுபவங்களை தொலைக்காட்சிக்காக பேட்டி எடுக்கும் நடிகர் சூர்யாவின் வாயிலாக இந்தக் கதை நமக்கு கடத்தப்படுகிறது.
 
இந்த நிஜக் கதையை திரைக்கதையாக மாற்றி தானே இயக்கி நடித்திருப்பதில் அணு அணுவாக நம்பி நாராயணனின் வாழ்க்கையை உணர்விலும் உதிரத்திலும் ஏற்றுக்கொண்ட மாதவன் அச்சு அசலாக ஒரு விஞ்ஞானியாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார்.
 
அந்தந்தப் பருவத்து உடல் தோற்றம், மனவியல் சிந்தனைகள், பேச்சு வழக்கு என்று ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தி நடித்திருக்கும் மாதவனுக்கு வரும் வருடத்தின் உயரிய விருதுகள் கிடைக்கப்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அதிலும் தன்னால் பாதிக்கப்பட்ட ஒரு பாத்திரம் தான் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் தன்னைக் காண வந்திருக்க, மாதவன் அவரை எதிர்கொள்ளும் விதம் அபாரம்.
 
அதேபோல் சிபிஐயில் மனசாட்சி உள்ள அதிகாரியான நாயர் வந்த பிறகு அவர் மீதான குற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக துடைக்கப்படும் வேளையில் “உங்கள் துறையில் இருந்தே உங்களுக்கு உதவ யாரும் முன் வரவில்லையே..?” என்று நாயர் இயல்பான சந்தேகத்தைக் கேட்க, ஒரு அசட்டையான சிரிப்புடன், “ஒரு ராக்கெட் கவுந்தா எப்படி ரியாக்ட் பண்ணனும்னு தெரிஞ்சவங்களுக்கு ஒரு மனுஷன் கவுந்தா எப்படி ரியாக்ட் பண்ணனும்னு தெரியலை போல இருக்கு..!” என்பது அற்புதமான இடம். அந்த இடத்தில் நடிப்புக்கு மட்டுமல்லாமல் உரையாடலுக்கும் தனியாக மேடியைப் பாராட்டியாக வேண்டும்.
 
தன் போராட்டங்களை பிளாஷ்பேக்கில் சூர்யாவிடம் மாதவன் சொல்லி முடிக்க சூர்யாவின் பார்வையிலிருந்து மீண்டும் கேமரா திரும்பும் போது அங்கே நடிகர் மாதவனுக்கு பதிலாக நிஜ நம்பி நாராயணனே அமர்ந்திருப்பது நம்மை புல்லரிக்க வைக்கும் காட்சி. 
 
“ஒரு நாயைக் கொல்லணும்னா அதுக்கு வெறி புடிச்சிருச்சுன்னு நம்ப வெச்சா போதும்… அது மாதிரி ஒரு மனிதனைப் பழிதீர்க்க அவன் தேசத்துரோகின்னு சொல்லிட்டா போதும்..!” என்று மாதவனைப் பேட்டி காணும் சூர்யா சொல்வது நம் உணர்வு நரம்புகளைத் தாக்குகிறது.
 
அப்போது படம் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கே ஒரு விசும்பல் எழ, அந்த விசும்பலுக்கான இடத்தை சரியாகக் கணித்த சூர்யாவும் திரையில் விசும்பிக் கொண்டிருப்பது மெத்தப் பொருத்தம். அந்த ‘ கௌரவ ‘ வேடத்திலும் தன் நடிப்பின் மீதான கௌரவத்தை காப்பாற்றிக் கொள்கிறார் சூர்யா.
 
சில காட்சிகளே ஆனாலும் மாதவனின் மனைவியாக வந்திருக்கும் சிம்ரனின் நடிப்பு அதி அற்புதம். அதுவும் இந்த சமுதாயம் படுத்திய பாட்டில் கிட்டத்தட்ட மன நோயாளியாகவே மாறிப்போய்… மீண்டு வந்த மாதவனைப் பார்த்து அலறலுடன் ஒரு பிளிறலும் செய்கிறார் பாருங்கள்… சிம்ப்ளி ஆசம்… சிம்ரனிஸம்!
 
முதல் பாதியில் டெக்னிக்கலாக கடக்கும் கதையில் அவ்வளவு சுவாரஸ்யம் ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் நாவல் படிக்கிற உணர்வில் நகர்கிற தன்மை இது போன்ற பயோபிக் படங்களில் விமர்சன ரீதியாக ஏற்கக் கூடியதே. என்ன ஒன்று… வெகுஜன சினிமா ரசிகனை இந்த உத்தி கவராது என்பதுதான் வணிக சோதனை..!
 
இதனைச் சரிக்கட்டும் விதமாக ரஷ்யா பறக்கும் இரண்டாம் பாதியில் படத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அதிலும் ரஷ்யாவில் புரட்சி வெடிக்கும் நேரத்தில் இந்தியாவுக்கு ராக்கெட் என்ஜின் பாகங்களைத் தர ரஷியா ஒத்துக்கொண்ட விஷயம் அமெரிக்காவுக்குத் தெரியவந்து, அதைத் தடுத்து நிறுத்த அவர்கள் வருவதற்குள் ரஷ்யாவில் இருந்து தன் டீமுடன் அடிக்கும் பனிப்புயலில்… நம்பி நாராயணன் விமானப்பயணம் மேற்கொள்வது ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கான விறுவிறுப்பைத் தருகிறது.
 
நிஜ நம்பி நாராயணனை நமக்கு காட்டி விடும்போது ஒப்பனை கொண்ட மாதவனும் தன் நரைமுடியை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்து கொண்டிருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது.
 
ஒரு சரியான பின்னணி இசை படத்தின் ஏற்ற இறக்கங்களை சமன் செய்து சீர் தூக்குவது. ஆனால் சாம் சி. எஸ் க்கு அந்த அனுபவம் போதாமல் படம் ஏறும் போது ஏறுவதும் இறங்கும்போது இறங்குவதுமாகவே இசைத்துத் தன் கடமையை முடித்துக் கொண்டிருக்கிறார்.
 
படத்தின் பெரிய பலம் பட்ஜெட் குறைவாக இருந்தாலும் ஒரு பிரம்மாண்ட படம் போல் காட்டி இருக்கும் சிர்ஷா ரேவின் ஒளிப்பதிவுதான். திரைக்கதையின் வழியாகவே எடிட்டரும் பயணப்பட்டு இருக்கிறார்.
 
விஞ்ஞானத்தையோ விஞ்ஞானிகளையோ நம்பி இந்த நம்பி நாராயணன் கதையை மாதவன் எடுக்க வாய்ப்பில்லை. தரமான படங்களை ரசிப்பார்கள் என்ற நல்ல ரசனையை நம்பி மட்டுமே தன் முயற்சியில் படமெடுத்த மேடியின் படத்தில் திடீரென்று மோடியின் அரசு உள்ளே நுழையும் போது திரைக்கதை ஒரு குலுங்கு குலுங்கி ஆட்டம் காண்பதை உணர முடிகிறது. படத்தில் பூசப்பட்டிருக்கும் காவி சாயத்தைக் கழுவி இருந்தால் ஒரு காவியமாகவே இந்த படம் நிலைத்திருக்கும் என்பதையும் சொல்லி ஆக வேண்டும் – வேண்டாதவர்கள் கழுவி ஊற்றுவதை துடைக்கவும் அது பயன்பட்டிருக்கும்.
 
ஆனால் இவ்வளவு தைரியமாக எடுத்த படத்தில் நம்பி நாராயணனை பழியில் சிக்க வைத்த அந்த சக்தி யார் என்பதை சொல்லாமலே விட்டிருப்பதும் மிகப் பெரிய குறை. வில்லன் இல்லாத கதையில் ஹீரோவின் வீரியமும் குறைவுதானே..?
 
எப்படி இருந்தாலும் இந்த அரிய முயற்சிக்காக உலகின் உயரிய சர்வதேசப் பட விழாக்களில் தனிக் கவனம் பெறுவதிலும், விருதுகளைத் தட்டிக் கொண்டு வருவதிலும் இந்தப் படம் முன்னிலை வகிக்கும்.
 
அதுவரை வணிகரீதியாக தட்டுத் தடுமாறினாலும் உணர்வு ரீதியாக ரசிகர்கள் தட்டும் கைத்தட்டல்கள் படத்தைக் காப்பாற்றும் என்றும் நம்பலாம்.
 
ராக்கெட்ரி – உயரத்தில்..!..