June 15, 2026
  • June 15, 2026
Breaking News
February 7, 2026

ரெட் லேபில் திரைப்பட விமர்சனம்

By 0 105 Views

புதுமுக ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பான விஷயம். எனவே ஹீரோவாக விரும்புவார்கள் அவர்களே தயாரிப்பாளரானால்தான் உண்டு. 

அந்த வகையில் தானே தயாரித்து இந்த படத்தின் ஹீரோ ஆகியிருக்கிறார் லெனின். புது முகத்துக்குரிய பட்ஜெட்டில் நேர்த்தியாகப் படத்தை தர முடிவெடுத்த அவர் இயக்குனர் கே.ஆர்.வினோத் திறமையில் தன் முயற்சியில் வெற்றி அடைந்தாரா என்று பார்க்கலாம். 

ஒரு கல்லூரிதான் கதைக்களம். அந்தக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவரான லெனின், படித்த காலத்தில் அடிதடி வம்பு வழக்கு என்று போய் அந்த ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டரின் பகைமையை சந்தித்தவர். 

இன்றைய காலகட்டத்தில் அவருடன் படித்தவர்கள் கல்லூரியில் வேலை பார்க்க… இவர் தான் உண்டு, தன் தொழில் உண்டு என்று அமைதியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போதைய கல்லூரியில் தேர்தல் வர, அதில் நிற்க முடிவெடுக்கும் நல்ல மாணவனுக்கு எதிராக அராத்து எம்எல்ஏ ஆர். வி.உதயகுமாரின் மகன் களத்தில் இறங்க அவனை புத்திசாலித்தனமாக அடக்கும் விதமாக கல்லூரிக்குள் மீண்டும் பிரவேசிக்கிறார் லெனின்.

அத்துடன் ஆர்வி உதயகுமாரின் மகளை காதலிக்கவும் செய்கிறார் லெனின். அக்காவை காதலித்து தம்பியை எதிரியாக்கி கொண்ட சூழலில் இந்த விஷயம் ஆர்வி உதயகுமாருக்கு தெரிய வந்து தன் ரவுடி மைத்துனனுக்கே மகளை கல்யாணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் நடத்தி விடுகிறார். 

அதே வேளையில் இவர் எப்போது தன் கையில் சிக்குவார் என்று அந்த ஏரியா இன்ஸ்பெக்டரும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைய, காதலிக்கு நிச்சயம் செய்த ரவுடியை சந்தர்ப்பவாசமாக லெனின் கொலை செய்வதுடன் முதல் பாதி முடிவடைகிறது. 

இத்தனை சிக்கல்களுக்கும் பின் பாதியில் எப்படித்தான் தீர்வு சொல்லப் போகிறார்களோ என்கிற பதை பதைப்பை ஏற்படுத்தி அதை பக்காவாக செய்து முடித்திருக்கிறார்கள். 

தன் வயதுக்கும் தோற்றத்துக்கும் ஏற்ற வேடமேற்றிருக்கிறார் நாயகனாக நடித்திருக்கும் லெனின். முதல் படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் இனி போகப் போக தன் நடிப்புத் திறமையை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். 

எந்த இக்கட்டான சூழலிலும் பதட்டம் அடையாதவாறு பக்காவான திட்டங்களை திட்டம் அவரது கேரக்டரைசேஷனும் அருமையாக இருக்கிறது.

நாயகனுக்கு ஏற்ற இயல்பான நாயகியாகியிருக்கிறார் அஸ்மின். முன்னணி நாயகிகளுக்கு கூட கிடைக்காத விதத்தில் கிளைமாக்ஸ் – இல் இவரது பாத்திரம் முக்கியத்துவம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வில்லன் எம்எல்ஏவாக நடித்திருக்கும் ஆர்.வி.உதயகுமாரின் நடிப்பு நன்று. ஆனால் அவரும் வழக்கமான வில்லன்களை போல் அடியார்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறார்.

ஆர் வி உதயகுமார், முனீஷ்காந்த், அனுமோகன் தவிர மற்ற எல்லா பாத்திரங்களும் நாம் அறியாத முகங்களாக தான் இருக்கிறார்கள். இருந்தாலும் திரையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

ஒரு பெரிய படத்துக்குண்டான அளவில் ஒவ்வொரு பிரேமிவேலும் கூட்டத்தைக் இருக்கிறது கட்டி வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன்.

கைலாஷ் மேனின் இசை பாடல்களை தாண்டி பின்னணி இசையில் பெரிய வேலை பார்த்திருக்கிறது.

பொன்.பார்த்திபனின் கதை திரைக்கதை வசனத்தில் குறை என்று ஏதுமில்லை. 

ஆனால் இரண்டாவது பாதி படத்தின் பரபரப்புக்கு ஏற்றவாறு முதல் பாதியை இன்னும் சுவாரஸ்யப் படுத்திருக்கலாம். 

கல்லூரிக்குள் ஒரு பக்கம் ஃபேர்வெல் விழா நடந்து கொண்டிருக்க..  இன்னொரு பக்கம் தன்னால் கொல்லப்பட்ட ரவுடியின் உடலை மறைக்க லெனின் போராடிக் கொண்டிருக்க, வேறு ஒரு கொலை விஷயத்தில் அந்த ரவுடியை தேடி போலீசும் கல்லூரிக்குள் நுழைய… அடுத்தடுத்து நகரும் திரைக்கதை பரபரப்பில் ஆழ்த்துகிறது.

புதுமுகங்களை வைத்து இந்த அளவுக்கு நியாயமான படத்தை இயக்குநர் கே.ஆர்.வினோத் தந்திருப்பதால் நல்ல பட்ஜெட்டும் பெரிய ஹீரோவும் அமைந்தால் இவரும் இன்னொரு எச்.வினோத் போல வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Red label – Good Effort..!

– வேணுஜி