July 19, 2026
  • July 19, 2026
Breaking News
February 7, 2026

வித் லவ் திரைப்பட விமர்சனம்

By 0 106 Views

முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது என்பார்கள். அதை அடிநாதமாக கொண்ட புதுமையான காதல் கதை இது.

நாயகன் அபிஷன் ஜீவிந்த்துக்கு திருமணம் செய்து வைக்க அவரது அக்கா ஒரு பெண்ணை பார்த்து அவளை சந்திக்க சொல்கிறார். 

அங்கே அபிஷனுக்காக காத்திருக்கும் நாயகி அனஸ்வரா ராஜன் அபிஷன் படித்த அதே பள்ளியில் ஜூனியர் ஆக இருந்திருப்பது தெரிகிறது.

அதனால் எளிதாக புரிந்து கொள்ளும் இருவரும் இயல்பாக தங்கள் முதல் காதலைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்கள். 

அதன் முடிவில் தங்களது பழைய காதலர்களை சந்தித்து சொல்லாமல் விட்ட காதலை இப்போது சொல்ல முடிவு எடுக்கிறார்கள். அதன் முடிவு என்ன என்பதுதான் கதை. 

பள்ளிக்காலத்தையும் பணி புரியும் காலத்தையும் இணைக்கும் கதை என்பதால் அந்த இரண்டு காலகட்டத்துக்கும் மிகப் பொருத்தமாக இருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். வாத்தியாரிடம் வாங்கிய அடியே அவரது முதல் காதலை துளிர்விட வைக்க, அந்த காதல் முறிவு பெறும் வேளையில் அடி வாங்காமல் வெடிக்கும் அழுகையில் அருமையான நடிப்புத்திறனை வெளிப்படுத்துகிறார்.

அதேபோல் சட்டென்று முடிவெடுக்கும் அவரது குணாதிசயத்தையும் நூல் பிடித்த மாதிரி திரையில் கொண்டு வந்திருக்கிறார். 

நாயகி அனஸ்வராவின் அழகு முகமே அவர் என்ன செய்தாலும் ரசிக்க வைக்கிறது. பள்ளியில் சற்று தடாலடியான பாத்திரமாக இருக்கும் அவர் செய்யும் குறும்புகளும் ரசிக்க வைக்கின்றன. 

கதையின் மையப் புள்ளியையும் கதை முடிவையும் அவரே நிர்ணயிப்பதில் அவரது பாத்திரம் தூக்கலாகத் தெரிகிறது. 

இவர்களது முதல் காதலர்களாக வரும் காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன் இருவரும் புதுமுகங்களாக இருந்தாலும் மனதில் பதிகிறார்கள். 

அபிஷன் வயிற்று எரிச்சலை கொட்டிக் கொள்ளும் அந்த நண்பரும் கவர்கிறார். 

இயல்பான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் வாத்தியார் சரவணன். 

அபிஷனின் அக்காவாக வரும் ஆர் ஜே ஆனந்தியும், அப்பாவாக வரும் தேனி முருகனும் இயல்பான குடும்பத்து பாத்திரங்களாக பரிமளிக்கிறார்கள்.

ஒரே ஒரு காட்சியில் வந்து ஆனந்த அதிர்ச்சி கொடுக்கிறார்கள் டூரிஸ்ட் ஃபேமிலி கேமியோ சசிகுமாரும், குட்டி பையன் கமலேஷ் ஜெகனும். 

தன் பாணியிலிருந்து முற்றிலும் விலகி இளமை பொங்கும் இசையை கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். டைட்டிலில் அவர் பெயரை பார்க்காவிட்டால் இந்த பாடல்களை இசைத்தது யார் என்றுதான் கேட்கத் தோன்றும். வித்தியாசமாக இருந்தாலும் காதல் ரசம் சொட்டும்  பாடல்களை தந்திருக்கிறார் அவர். 

இதுபோன்ற இளமையான காதல் படங்களுக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவை விட்டால் ஆள் இல்லை என்கிற அளவுக்கு இயல்பான… அதே நேரத்தில் ரசிகத்தக்க ஒளிப்பதிவை தந்திருக்கிறார் அவர்.

இதைப் போன்ற காதல் கதைகள் நிறையவே நாம் பார்த்திருந்தாலும் அதில் ஒரு புதுமை செய்து திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் மதன். 

முன்பாதியில் இரண்டு காதல் கதைகள் சொல்லப்பட்டாலும் அவை மெதுவாகவே நகர்கின்றன. அவற்றை இன்னும் கூட சுவாரஸ்யப்படுத்தி இருக்க முடியும். 

ஆனால் பின் பாதிப் படம் பரபரவென்று நகர்ந்து முடிகிறது. 

லாஜிக் தவறுகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஒரு இளமையான காதல் படம் பார்த்த மகிழ்ச்சி கிடைக்கிறது. 

வித் லவ் – வின்னர்..!

– வேணுஜி