சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
படத்தில் ரஜினியுடன் நடித்த சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கலந்துகொண்ட விழாவில் ரஜினி பேசியதிலிருந்து…
“கஜா புயலால் உயிரிழந்து, வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் தருணம் இது. கஜா புயல் மிகப்பெரிய பேரழிவு அரசாங்கத்தால் மட்டும் அதனை சரிசெய்ய முடியாது. நாம் எல்லோரும் கரம் கோப்போம்.
2.0 படத்தை வெற்றியடைய வைத்த அனைவருக்கும் நன்றி. இதற்கான பாராட்டுகள் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனத்தையே சேரும். 2.0 படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே கலாநிதி மாறன்தான். எனக்காகவும் ஷங்கருக்காகவும் படத்தை வாங்கினார். படம் வெற்றி பெற்ற பிறகு எனக்கு 1 கோடி ரூபாய் கொடுத்தார். 2.0 படத்தையும் அவர்கள் தயாரித்திருக்க வேண்டியது. ஆனால், இடையில் படத் தயாரிப்பை அவர்கள் நிறுத்தி வைச்சிருந்ததால் அது நடக்கவில்லை.
சிறிய இடைவேளைக்குப் பின்னர் சன்பிக்சர்ஸ் மீண்டும் தயாரிப்பில் இறங்குவதாக தெரிவிச்சாங்க. விஜய்யுடன் ஒரு படம் பண்ணுறோம் நீங்களும் ஒரு படம் பண்ணுங்க என்றனர். இவ்ளோ சிறப்பான ஒரு தயாரிப்பாளர் கிடைக்கும்போது யார் தான் வேண்டாம் என்று சொல்வாங்க. மகிழ்ச்சி, பண்ணலாம்னு சொன்னேன். சில இயக்குநர்களிடம் கதை கேட்டோம். எதுவும் செட்டாகவில்லை.
அப்போ 2014 -ல் கார்த்திக் சுப்புராஜ் ஒரு கதை சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது. உடனே நான் கார்த்தியை தொடர்பு கொண்டேன். அவரை தயாரிப்பாளரிடம் பேசச் சொன்னேன் அவரும் பேசினார். படம் ஓ.கே ஆனது. ‘பேட்ட’ படத்தை தமிழ்நாட்டில் எடுக்க முடியாது. அன்பு தொல்லை. அதனால் வெளிமாநிலத்தில் பண்ண முடிவு செய்தோம்.
Rajini vijaysethupathi
கார்த்திக் என்னுடைய மிகப்பெரிய ரசிகர். எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணி இருந்தார். வில்லன் யாருன்னு கேட்டேன் விஜய் சேதுபதின்னு கார்த்தி சொன்னார். எனக்குச் சந்தேகம் எப்படினு கேட்டேன். நான் பார்த்துக்கிறேன் சார்னு கார்த்தி சொன்னார். அதுக்கப்புறம் விஜய் சேதுபது ஓ.கே சொல்லிட்டாருன்னு சொன்னார். விஜய் சேதுபதியோட படம் பார்த்திருக்கிறேன். அவருடன் பழகிய பின்னர்தான் தெரிந்தது. அவர் சாதாரண நடிகன் இல்லை. அவர் ஒரு மகா நடிகன். நல்ல மனிதர், பொறுமையான மனிதர். பேச்சு, சிந்தனை, கற்பனை வித்தியாசமானது. ரொம்ப நாளுக்குப் பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் கிடைத்தது.
பிளாஷ்பேக் கதாநாயகியாக திரிஷா நடிச்சிருக்காங்க. அந்தக் கதாபாத்திரம் பண்ண திரிஷாவே தயாராக இருந்தார். சிம்ரனுடன் டூயட் பாடும் போது கூச்சமாக இருந்தது. சசிகுமாரின் கதாபாத்திரம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை சிறப்பாக இருக்கும்படியானது.
சசிகுமார் ஒரு மீசை வைத்த குழந்தை. அவர் படத்தை தயாரிக்காமல் நடித்தால் நன்றாக இருக்கும் நவாசுதீன் சித்திக் எது செய்தாலும் வித்தியாசமாகச் செய்வார். ஒவ்வொரு ரசிகரும் எப்படி ஆசைப்படுவாரோ அதை யோசித்து, கேட்டு கேட்டு பண்ண வைத்தார் கார்த்திக். எதுவுமே ‘எக்ஸ்ட்ரா’ இருக்கக்கூடாது என்று பார்த்து பார்த்து எடுத்துள்ளார்.
சின்ன வயசுல இருந்தே அனிருத்தை பார்க்கிறேன். பெரிய ஆளா வருவார் என்று அப்போதே நினைத்தேன். அனிருத் தான் அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என்று தனுஷ் சொன்னார். பொங்கலுக்கு நல்ல பொழுதுபோக்கு படமாக ‘பேட்ட’ இருக்கும் சில நாள்களில் எனது பிறந்தநாள் வரப்போகுது. பிறந்தநாளுக்கு இங்கே இருக்க மாட்டேன். தவறாக நினைக்க வேண்டாம்.
என்னை நடிக்க வைத்த கார்த்திக், சண்டை போட வைத்த பீட்டர் ஹெய்ன் உள்ளிட்ட படக்குழு அனைவருக்கும் நன்றி..!’’
Related