நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று காமராஜர் அரங்கில் நடந்தது.
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுடன் நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் சினிமாக் கலைஞர்கள் பங்கேற்று கலைஞர் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கலைஞரின் நினைவுகளைப் பற்றி நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதிலிருந்து…
“திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. அரசியலுக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவரை அரவணைத்துச் செல்ல வேண்டும் அல்லது எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமென்ற நிலையை தன் ராஜதந்திரத்தால் உருவாக்கியவர்.
அதிமுக உருவானபோது எவ்வளவு வஞ்சனைகள் அவருக்கு எதிராக நடந்தன என்று எல்லோருக்குமே தெரியும். அத்தனையும் தாண்டி அரசியலில் ஜொலித்த கருணாநிதியால் அரசியலுக்கு வந்தோர் லட்சம் பேர் உள்ளனர். அவரால் தலைவரானவர்கள் பல நூறு பேர் உள்ளனர்.
அதிமுக உருவானதற்கு காரணம் கருணாநிதிதான். அதிமுகவின் ஆண்டு விழாவில் அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படத்தோடு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைத்திருக்க வேண்டும்.
அவர் இறந்த மறுநாள் காலை ராஜாஜி ஹால் சென்று அவருக்கு இறுதிமரியாதை செய்தபோது ஆயிரக்கணக்கில் மட்டுமே கூட்டம் இருந்தது. எனக்கு அதைப் பார்த்து கொபம் வந்தது. ‘உடன்பிறப்பே’ என்று அழைத்து தமிழர்களுக்காக உழைத்தவர்களுக்கு மக்கள் தரும் மரியாதை இவ்வாளவுதானா என்று நினைத்து வருந்தினேன். ஆனால், பிற்பகலில் டிவியைப் பார்த்தபோது அலைஅலையாக மக்கள் வந்து அஞ்சலி செலுத்தியபோது மகிழ்ச்சியாக இருந்தது.
கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கு ராகுல் காந்தி வந்து இரண்டரை மணைநேரம் காத்திருந்தார். பல மாநில முதல்வர்கள், தலைவர்கள், முப்படை ராணுவ தளபதிகள் என ஒட்டுமொத்த இந்தியாவே வந்த நிலையில் தமிழக முதலமைச்சர் வந்திருக்க வேண்டாமா? ஒட்டுமொத்த அமைச்சரவையே வந்திருக்க வேண்டாமா?.
இருந்தாலும் மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்தார்கள். அந்தத் தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்..!”
திரைத்துறையினருக்கான இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார்..