June 9, 2026
  • June 9, 2026
Breaking News
March 12, 2026

போலீஸ் ஃபேமிலி திரைப்பட விமர்சனம்

By 0 191 Views

அடிக்கடி நடைபெறும் லாக்கப் மரணங்களை நினைவுபடுத்தும் கதை. அப்படி மதுரைப்பக்கம் கஞ்சா வைத்திருந்ததால் சந்தேகப்பட்டு லாக்கப்பில் அடைத்த இளைஞனை சுகுமார் உள்ளிட்ட நான்கு போலீஸ்காரர்கள் நையப்புடைப்பதில் அவர் மயக்கமாகிறார்.

அதற்குப் பின்தான் அவர் மதுரையில் தலைமறைவாக இருக்கும் அரசியல் பின்புலமுள்ள தாதா சரவணனின் மகன் எனத் தெரிகிறது.

அதில் பயந்துபோன போலீஸ்காரர்கள் அந்த இளைஞனை யாருமற்ற இடத்தில் போட்டுச் செல்ல, மறுநாள் அவன் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாகத் தெரிகிறது.

மகன் இறந்ததால் வெறி கொண்ட தாதா சரவணன் அதற்குக் காரணமான நான்கு போலீஸ்காரர்களின் குடும்பங்களைyum தண்டிக்க முடிவெடுக்கிறார்.

அவர் நினைத்தபடி அவர்களை தண்டிக்க முடிந்ததா அந்த தண்டனையிலிருந்து அவர்கள் தப்பினார்களா இதன் முடிவு என்ன என்பது மீதிக் கதை.

காதல் சுகுமாருக்கு இதில் முக்கியமான பாத்திரம். நகைச்சுவைக்கு துளியும் இடம் கொடுக்காமல் முழுதும் சீரியசான பாத்திரத்தை விரும்பி ஏற்று நடித்திருப்பது புரிகிறது.

பொதுவாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் அப்பாவி வேடத்தில் வரும் சரவணனுக்கு இதில் கொடூரமான தாதா வேடம் கிடைத்திருக்கிறது.

எதிர்த்த எவரையும் கொல்வது என்பது சித்தப்பு வாழ்க்கையில் அதிகபட்ச சித்தரிப்பு.

இவர்களைத்தாண்டி ராஜா மலைச்சாமி, நிஷா துபே, சுரேகா ஆர், ரோஜன் லியோன், ரத்னம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா உள்ளிட்டு முகம் தெரியாமல் நடித்திருக்கும் அத்தனை பேரும் அந்தந்த பாத்திரங்களில் பொருந்தி இருக்கிறார்கள்.

ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவும், ஜெயா கே. தாசின் இசையும் இந்த முயற்சிக்கு துணை புரிந்திருக்கின்றன.

சின்ன பட்ஜெட்டில் சீரியசான முயற்சியை மேற்கொண்டு எழுதி இயக்கியிருக்கும் பாலு. எம் நல்ல பட்ஜெட் கிடைத்தால் வெளிச்சத்துக்கு வந்து விடுவார்.

ஆனால், பரபரப்பாக நகரும் இந்தத் திரைக்கதையை, லாஜிக்குடன் நம்பகமாக மாற்றுவது எப்படி என்பதை அவர் கற்றுக் கொள்ளலாம்.

அதற்கு பட்ஜெட் தேவையில்லை.

போலீஸ் ஃபேமிலி – பொல்லாதவர்கள்..!

– வேணுஜி