April 19, 2024
  • April 19, 2024
Breaking News
January 7, 2022

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே திரை விமர்சனம்

By 0 443 Views

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் இது.

இளம் பெண் ஒருத்தி தற்கொலை செய்து கொள்வதிலிருந்து படம் தொடங்குகிறது. அதேபோன்ற தற்கொலைகள் மேலும் ஒன்றிரண்டு  நடக்க போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் அரவிந்த் என்ற வாலிபன் நந்தினியை காதலிக்கிறான். அரவிந்தை நந்தினியும் முழுதாக நம்புகிறாள். இதற்கு இடையில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்கள் வீட்டு பாத்ரூமில் கேமராவை வைத்து படம் எடுப்பது காண்பிக்கப்படுகிறது.

ஒருகட்டத்தில் நந்தினிக்கு ஒரு இளைஞனால் செல்போன் தொடர்பாக தொடர்பு ஏற்பட அவளை தொடர்ந்து காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி வருகிறார். இதனால் மனச் சிக்கலுக்கு உள்ளாகும் நந்தினி அரவிந்திடம் மனிதர்கள் இல்லாத தனி இடத்துக்கு பயணம் ஒன்று போய்வரலாம் என்கிறாள்.

இருவரும் கொடைக்கானலுக்கு ஜாலி டூர் செல்கிறார்கள். சென்ற இடத்தில் ராஜ்கமல் பற்றிய ஒரு திடுக்கிடும் உண்மை தெரிய என்ன ஆகிறது என்பது கிளைமாக்ஸ்.

சின்னத்திரையில் அறியப்பட்ட நடிகரான ராஜ்கமல்தான் படத்தின் கதாநாயகன் அரவிந்த். எதிர்மறை  கதாபாத்திரம்தான் என்றாலும் தன்னால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார்.

செல்போன் மூலம் சிக்கிக்கொள்ளும் பெண்களிடம் காதல் வசனம் பேசிக் கவரும் போதும், தன் வலையில் சிக்கியவர்களிடம்
மிரட்டும் போதும் நல்ல, கெட்ட என இரு முகங்களைக் காட்டியிருக்கிறார்.

நாயகி நந்தினியாக வரும் ஸ்வேதா பண்டிட் அங்கங்கே அடடே என்று பாராட்ட வைக்கிறார். நாகரீக உடைகளில் கிளாமராகவும் தெரிகிறார். ஒரு காதலியாகக் கொஞ்சும் போதும் துரோகம் அறிந்து குமுறும்போதும் போதும் நன்றாகவே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் மது நிறைவாகச் செய்திருக்கிறார் கடந்த படங்களில் பார்த்ததை விட உடற்கட்டை தேற்றிக் கொண்டு அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நந்தினியின் அறையில் தங்கியிருக்கும் தோழியின் அண்ணனாக வரும் அவர் நந்தினியையும் தன் தங்கையாகவே பார்ப்பது சிறப்பு.

ஆபாசப்படம் எடுக்கும் நாசகாரக் கும்பலில் வரும் ஆப்பிரிக்க நடிகரும் நன்றாகவே வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

வை- பை மூலம் செல்போன்களின் தகவல்கள் திருடப்படுவதைக் காட்டி , தொழில்நுட்ப வசதிகள் எந்தளவுக்கு ஆபத்தானது குறிப்பாகப் பெண்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என்று எச்சரித்து இருக்கிறது படம்.

நகைச்சுவைக் காட்சிகள் என்ற பெயரில் சில அசட்டுத்தனமான காட்சிகள் உள்ளன. பாடல் காட்சிகளில் கொடைக்கானல் மலைப்பகுதியைச் சுற்றி அலைந்து திரிந்து படம்பிடித்துள்ளார்கள்.

சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் விவேக் சக்ரவர்த்தியின் இசையும் கைகோர்த்து வேலை பார்த்திருக்கிறார்கள்.

கிளைமாக்ஸ் காட்சியில் காதலியிடம் நாயகன் மன்றாடுவது இயல்பு நிலையில் இருந்து மாறுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி கதை சொல்ல வந்த படம் உருவாக்கத்தில் தொழில்நுட்ப ரீதியில் கொஞ்சம் பின்னோக்கியே உள்ளது.

‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ என்று இருக்க வேண்டிய தலைப்பு பென் என்று மாறிப்போனது தணிக்கை கெடுபிடிகளால் தானோ..?

விழிப்புணர்வுக் கருத்தை பட்ஜெட்டுக்குள் சொல்லியிருப்பதற்காக, குறைகளைப் புறந்தள்ளி விட்டு இயக்குநர் வரதராஜைப் பாராட்டலாம்.