இப்படி ஒரு காதல் கதையை இதற்கு முன் நாம் பார்த்திருக்கிறோமா என்று தெரியவில்லை.
ஊர் பெரிய மனிதரான மாரிமுத்துவுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த நிலையில் இளைய மகள் உமா திடீரென்று காணாமல் போகிறார். நன்றாக படிக்கக் கடிய பெண் என்பதால் மாரிமுத்துவின் செல்ல மகளாக இருக்கும் அவர் ஏன் வீட்டை விட்டு வெளியேறினார் என்று எல்லோரும் யோசிக்கிறார்கள்.
அவள் காணாமல் போன அதே நேரத்தில் இருந்து வீட்டில் டிரைவராக வேலை செய்யும் மூர்த்தியையும் காணவில்லை. வேறு வகுப்பைச் சேர்ந்தவரான மூர்த்தி தன் மகளை கடத்திக்கொண்டு போய்விட்டார் என்பதாக நினைக்கும் மாரிமுத்து ஆனால் இந்த விஷயம் வெளியில் தெரிந்து விட்டால் தன் மானம் போய்விடும் அத்துடன் முதல் மகளின் திருமணமும் பாதிக்கப்படும் என்பதால் ரகசியமாக அந்த பிரச்சனைக்கு தீர்வு காண நினைக்கிறார்.
ஒரு பக்கம் அவரது மச்சானாக இருக்கும் மன்சூர் அலிகான் டிரைவரின் பெற்றோரை கூப்பிட்டு அவர் மகனை கொன்று விடுவதாக மிரட்ட, ஊர் தலைவரான அழகுமலை அந்த பிரச்சனையை தன் சொந்த பொறுப்பில் எடுத்து அவர்களை தேட ஆரம்பிக்கிறார்.
ஒரு பக்கம் மன்சூர் அலிகான் தனது கோஷ்டியுடன் கோபாவேஷமாக அவர்களைத் தேட, இன்னொரு பக்கம் அழகு மலையும், அவரது நம்பிக்கைக்கு உரிய உதவியாளராக வரும் விநாயக்கும் அவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த காதல் ஜோடி யார் கைகளில் சிக்கினார்கள்… சிக்கியவர்களை அவர்கள் என்ன செய்தார்கள்..? என்பதெல்லாம் மீதிப் படத்தில்.
படத்தொடக்கத்தில் ஊர் தலைவரின் உதவியாளராக வரும் விநாயக் தன் ஆக்ஷன், அமளி துமளிகளின் மூலம் ஒரு ஹீரோவை போல் உணர வைக்கிறார். ராமராஜன் ஸ்டைலில் முக பாவங்கள் காட்டுகிறார்.
அதற்கு அடுத்து ஊரை விட்டு ஓடி போகும் இளம் ஜோடிகளான மூர்த்தி, உமா நாயகன் நாயகி போல் தெரிகிறார்கள். அந்த வயதுக்குரியவர்கள் எப்படி இருப்பார்களோ எப்படி நடந்து கொள்வார்களோ அப்படியே இவர்களும் நடந்து கொள்வது இயல்பாக இருக்கிறது.
இரண்டாவது பாதியில் ஊர் தலைவராக நடித்திருக்கும் அழகுமலை, முக்கியத்துவம் பெறுகிறார். படத்தின் கதையை எழுதி இயக்கி இருப்பவரும் அவரே ஆனதால் படத்தின் முக்கியமான பகுதியைத் தன் கையில் வைத்துக் கொண்டு கடைசியில் சிறப்பானதொரு கிளைமாக்ஸ் படைத்திருக்கிறார்.
அனுபவம் வாய்ந்த கலைஞர்களான மன்சூர் அலிகான், பேரரசு, அப்புக்குட்டி, செண்ட்ராயன், மாரிமுத்து, சர்மிளா உள்ளிட்டோர் படத்தின் தகுதியை உயர்த்துகிறார்கள்.
காசிவிஸ்வநாதனின் ஒளிப்பதிவு இந்த கிராமிய பின்னணி கொண்ட படத்துக்கு பக்கபலமாக உதவி இருக்கிறது.
அதற்கு தோதான பாடல்களையும், பின்னணி இசையையும் பொருத்தமாக தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ரூபர்ட்.
எழுதி இயக்கி, முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் அழகுமலை, உண்மையிலேயே ஊர் தலைவராக இருந்தவராம். அப்போது அவர் சந்தித்த ஒரு உண்மை நிகழ்ச்சியை தான் இந்த படத்தின் கதையாக்கி அதை இயக்கியும் இருக்கிறார்.
அதனாலேயே ஊர் தலைவரின் பணி எத்தனை முக்கியமானது என்பதை சொல்லி இருப்பதுடன் அவருடைய மனைவியே இந்த பிரச்சனை எல்லாம் உங்களுக்கு தேவைதானா என்று கேட்கும் அளவுக்கு ஊர் பிரச்சனையை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு அதை செய்பவராக இருக்கிறார் அவர்.
அதிலும் கடைசியில் உமாவை அலேக்காக தூக்கி தோளில் போட்டுக்கொண்டு சிங்க நடை நடப்பதில் “அடடே..!” என்று ஆச்சரியப்படவும் வைக்கிறார். அவருக்குள் இத்தனை பலமா..?
பருந்து – காதலுக்கு இனிப்பு மருந்து..!
– வேணுஜி