July 11, 2025
  • July 11, 2025
Breaking News
June 7, 2025

பரமசிவன் பாத்திமா திரைப்பட விமர்சனம்

By 0 48 Views

தலைப்பே ஒரு விவகாரமான படம் இது என்பதை சொல்லிவிடுகிறது அல்லவா? அப்படித்தான் இருக்கிறது படத்துக்குள்ளும்.

மலை கிராமம் ஒன்றில் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் மோதல் ஏற்படுவதால் இரண்டு பகுதியினரும் ஒருவர் பகுதிக்குள் இன்னொருவர் நுழையக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

அங்கே அடுத்தடுத்து இருவர் கொல்லப்பட அதைத் துப்பறிய போலீஸ் உள்ளே வரும்போதுதான் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வருகிறது.

நாயகன் விமலும் நாயகி சாயாதேவியும் இந்த கொலைகளைப் புரிகிறார்கள். ஆனால் யார் கண்ணுக்கும் அவர்கள் புலப்படுவதில்லை. அது ஏன் என்பது சஸ்பென்ஸ். 

அது என்னவோ வாத்தியார் வேடம் என்றால் உடனே விமலைக் கூட்டி வந்து விடுகிறார்கள். இதில் தமிழ் வாத்தியாராக வரும் அவர் தமிழை விடவும் இந்து மதத்தின் பெருமைகளை பரப்பும் வாத்தியாராகவே வருகிறார்.

ஆனால் கிறிஸ்தவப் பள்ளியில் வேலை செய்வதுடன் அதை நிர்வகிக்கும் பாதிரியார் எம் எஸ் பாஸ்கருடன் அவ்வப்போது மத உரசல்களும் புரிந்து வருகிறார். 

இந்நிலையில் மத மாற்றத்தின் காரணமாக சிறுவயதிலேயே அவரது தோழி சாயாதேவி குடும்பம் கிறிஸ்தவர்களாக மாறி வேறு ஊருக்குச் சென்று விடுகிறார்கள். விமலைப் பார்க்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக மீண்டும் அந்த ஊருக்கு வந்து அதே பள்ளியில் ஆசிரியை ஆகிறார் சாயாதேவி. 

ஆனாலும் கிறிஸ்தவராக மாறிவிட்டதால் அவர் பக்கம் சாயாதிருக்கும் விமல் ஒரு கட்டத்தில் காதல் வயப்படுகிறார். இந்த விஷயம் சாயாதேவியின் அண்ணன் சுகுமாருக்கு தெரிய வர அவர் கொதித்து எழுந்து என்னவெல்லாம் செய்கிறார் – அதன் விளைவுகள் என்ன என்பதுதான் மீதி கதை. 

கண்களே கவிதை பேசும் சாயாதேவி இந்தப் படத்திலும் அழகாக நடித்திருக்கிறார். ஊரே இரண்டு பட்டு நிற்கும்போதும் காதலனுடன் அவர் வீட்டில் குடியேறும் அவரது தைரியம் பாராட்டுக்குரியது.

பாதரியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல் தன் பங்கை நிறைவாகச்  செய்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக இயக்குனர் இசக்கி கார்வண்ணனே நடித்திருப்பதால் தான் நினைப்பதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.

கிளைமாக்சில் வைத்து ஆவிகளும் சாமியார்களும் அடிக்கும் கூத்தை கைகட்டி வேடிக்கை பார்க்கும் வேலையை இவர் தலைமையில் போலீஸ் செய்கிறது.

கேமராவுக்கு பின்னால் வேலை பார்த்த ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாருக்கு இதில் கேமராவுக்கு முன்னால் வந்து நடிக்கும் வில்லன் பிரமோஷன் கிடைத்திருக்கிறது. அவரும் ஜமாய்த்திருக்கிறார். 

கூல் சுரேஷ் வந்த இரு காட்சிகளில்  கொல்லப்படுவது நிறைவாக இருக்கிறது.

இவர்களுடன் மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை உள்ளிட்ட அனைவரும் ஆளுக்கு ஒரு பாத்திரத்தை சுமந்து இருக்கிறார்கள். 

தான் நடிக்காத காட்சிகளில் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் நன்றாக வேலை பார்த்து இருப்பது தெரிகிறது.

தீபன் சக்கரவர்த்தி இசையில்  இளையராஜாவின் சாயல் அதிகம். அதிலும் இளையராஜாவின் மெகா ஹிட்டான ‘வளையோசை கலகலவென…’ பாடல் ரிதத்தை அப்படியே பயன்படுத்தி ஒரு பாடலை இசைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் இசக்கி கார்வண்ணன், தெளிவாக இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அதற்காக மற்ற மதங்களை அங்கங்கே இடித்துரைத்திருப்பது தவறான முன்னுதாரணம்.

பரமசிவன் பாத்திமா – மதம் பிடித்த ஆவிகள்..!

– வேணுஜி